
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
போர்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈரான் மீது கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அதிபருடன் பேச்சு
இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் தீவிர சூழல் குறித்தும்,. இப்பகுதியில் பதற்றங்கள் அதிகரிப்பதும், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்தும் மோடி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மேலும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன், எரிசக்தி தடையின்றிச் செல்வதற்கான அவசியம் ஆகியவை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாகத் தொடர்கின்றன என்று பிரதமர் மோடி, ஈரான் அதிபரிடம் தெரிவித்தார். அத்துடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.
கவலை தெரிவித்த மோடி
இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில், “இப்பகுதியில் நிலவும் தீவிரமான சூழல் குறித்து விவாதிக்க, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசஸ்கியனுடன் உரையாடினேன். பதற்றங்கள் அதிகரிப்பது குறித்தும், பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன்,” என்று பதிவிட்டுள்ளார்.



