
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த 5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் டாக்டர்.சுக்பீர் சிங் சந்து, டாக்டர்.விவேக் ஜோஷி குழுவினர் ஆகியோர் இன்று (மார்ச் 15) மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 5 மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேதிகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தனர்.
தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23- ம் தேதி நடைபெறுகிறது; வாக்கு எண்ணிக்கை மே 4- ம் தேதி நடைபெறும்; அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது
தேர்தல் நடத்தை விதிகள்
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6- ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் ஏப்ரல் 7- ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடப்படும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டத்தேர்தல்
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்று யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்.மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஏப்ரல் 23-ம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



