
ரமலான் தொழுகை.
இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகை இன்று (மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டியின் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படும் நாளில் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது , இந்த நாளில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகைகளில் கலந்துகொண்டு, உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் நிலைக்கவும், ஒற்றுமையுடன் மக்கள் வாழவும் பிரார்த்தனை செய்வார்கள்.
அதன்படி இந்தியாவில் ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இததொடர்பாக அவரது எக்ஸ் தளத்வில், “அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள். இந்த பண்டிகையானது சுயக்கட்டுப்பாட்டையும், சேவையையும், அன்பையும் நமக்கு கற்றுத் தருகிறது. இந்நேரத்தில், நமது சமூகம் மற்றும் நாட்டை வலுப்படுத்த உறுதியெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஈத்-உல்-ஃபித்ர் நல்வாழ்த்துகள். இந்த பண்டிகையானது அனைத்து இடங்களிலும் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சி, ஆரோக்கியத்துடனும் வாழட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.



