
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய சர்ச்சைக்குரிய அறிக்கை
கேரளாவில் உள்ள கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இந்திய தேர்தல் ஆணைய அறிக்கையில் பாஜகவின் முத்திரை (சீல்) இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 23) வெளியிட்ட ஓர் அறிவிப்பில், பாஜக கேரள பிரிவின் முத்திரை இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆவணம், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 2019-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒரு கடிதமாகும்; இது சமீபத்தில் அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளில், இந்த சர்ச்சை வெடித்தது.

“இப்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஒரு கிளை அலுவலகத்தைத் தவிர வேறில்லை என்றும், மோசடி மற்றும் தில்லுமுல்லுகள் மூலம் பாஜக தேர்தலில் வெற்றிபெறுவதை உறுதி செய்வதற்காகவே அது முழுமையாகச் செயல்படுகிறது என்றும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?” என்று எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா அவரது எக்ஸ் பக்கத்தில், “ஆக, கடந்த காலத்தில் @ECISVEEP அமைப்பு, @BJP4India-வின் முத்திரையுடன் அதிகாரப்பூர்வக் கடிதங்களை வெளியிடும் துணிச்சலைக் கொண்டிருந்திருக்கிறது. நாம் அனைவரும் ஏற்கெனவே அறிந்திருக்கும் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறும், இனிவரும் கடிதங்களையும் இதே பாணியிலேயே வெளியிடுமாறும் ஞானேஷ் குமாரைக் கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகம் வாழ்க!” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் வசந்த் எம்.பி
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி அவரது சமூ க வலைதளப்பக்கத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையம் குறித்து பலமுறை கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இந்த கடிதம் உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பாஜக கட்சியின் முத்திரை. “Clerical error” என கூறி தேர்தல் ஆணையம் தப்பிக்க நினைக்கிறது. பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது என்பதற்கு இதை விட ஏதேனும் சான்று வேண்டுமா? என்று வினா எழுப்பியள்ளார்.
இந்த நிலையில். அது முற்றிலும் கவனக்குறைவால் ஏற்பட்ட அலுவலக தவறு (Clerical error) என கேரளா தேர்தல் ஆணைய அலுவலகம் விளக்கமளித்துள்ளது.



