
கொலை செய்யப்பட்ட முன்னா, சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இரண்டு மனைவிகள் மூலம் 18 குழந்தைகளைப் பெற்ற கிராமத்தின் முன்னாள் தலைவர் தகாத உறவால் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், சுமேர்பூர் கிராமத்தின் முன்னாள் தலைவர் முஸ்தகா குல்ஷன்(எ) முன்னா. இவருக்கு இரண்டு மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் ஆறு மகன்கள், மூன்று மகள்கள் என மொத்தம் 18 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முன்னா திடீரென 18-ம் தேதி காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் முன்னாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் முன்னா காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்னாவை தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு சாக்கடையில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் கடந்த 22-ம் தேதி அந்த சாக்கை கைப்பற்றிய போது, அதற்குள் முன்னா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், முன்னாவின் இருசக்கர வாகனம் ஒரு கிராமத்தில் இருந்து போலீஸார் மீட்டனர். இந்த நிலையில், முன்னாவிற்கு வந்த தொலைபேசி அழைப்புகளை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது சுமன்தேவி என்ற பெண்ணுக்கு முன்னா அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து சுமன்தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது சுமனின் கணவர் வேலை விஷயமாக கிராமத்தை விட்டுச் சென்று விட்டார். இந்த நிலையில் சுமனுக்கு முன்னா சில உதவிகளை செய்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சுமன்தேவியை வற்புறுத்தியும், மிரட்டியும் முன்னா அவருடன் நெருக்கமாய் இருந்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்ப நினைத்த சுமன்தேவி, தனது சகோதரனிடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து முன்னாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “சுமனும், அவரது சகோதரரும் திட்டமிட்டபடி மார்ச் 18-ம் தேதி முன்னாவை தனது தாய் வீட்டிற்கு சுமன் அழைத்துள்ளார். அங்கு அறைக்குள் நுழைந்த முன்னாவை சுமனின் சகோதரரும், அவரது கூட்டாளிகளும் இரும்புத்தடிகளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை சாக்கில் கட்டி சாக்கடைகால்வாயில் வீசியுள்ளனர். இக்கொலை தொடர்பாக சுமனையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளோம். இக்கொலையில் தொடர்புடைய இருவரை போலீஸார் தேடி வருகிறோம்” என்றனர். தகாத உறவால் 18 குழந்தைகளின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



