கிறிஸ்தவராக மாறியவர்களுக்கு இந்த உரிமை இனி கிடையாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பால் பரபரப்பு

உச்சநீதிமன்றம்

கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவரால் பட்டியல் சாதி அந்தஸ்தை கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தடா ஆனந்த் என்ற பாதிரியார், கிராமத்தில் ஞாயிறுதோறும் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சில நபர்கள் தன்னை தாக்கியதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது எஸ்.சி, – எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாதிரியார் சிந்தடா ஆனந்த்தின் மனுவை விசாரித்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஹரிநாத், ‘‘புகார்தாரர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் மூலம் அவர் தனது பட்டியல் சமூக அடையாளத்தை இழந்துவிட்டார். எனவே, எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பைக் கோர அவருக்கு உரிமை இல்லை’’ என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பாதிரியார் சிந்தடா ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 24) அதிரடியாக தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் மனுதாரர் கிறிஸ்தவத்தில் இருந்து தனது உண்மையான மதத்துக்கு மீண்டும் மதம் மாறியதாகவோ அல்லது மடிகா சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ வாதிடவில்லை. மேல்முறையீட்டாளர் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் ஞாயிறுதோறும் பிரார்த்தனைகளை நடத்தி ஒரு போதகராகச் செயல்பட்டு வருகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மைகள், சம்பவம் நடந்த தேதியில் அவர் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்கவில்லை.

இந்து, சீக்கிய, பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எந்த ஒரு நபரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார். வேறு ஏதேனும் ஒரு மதத்துக்கு மாறுவது பட்டியல் சமூக அடையாளத்தை இழக்க வழிவகுக்கும். வேறு மதத்துக்கு மாறிய ஒரு நபர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர தகுதியற்றவர்’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *