
சாவர்க்கருக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பட்டத்தை அரசு வழங்கவில்லை என்று அவரது பேரன் சத்யகி சாவர்க்கர் சாட்சியமளித்துள்ளார்.
சாவர்க்கருக்கு ‘சுதந்திர போராட்ட வீரர்’ பட்டம் வழங்கியது அரசு அல்ல, ஒரு எழுத்தாளரே என்று புணே நீதிமன்றத்தில் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர் அளித்துள்ள வாக்குமூலம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வலதுசாரி சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது குற்றவியல் அவதூறு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர், புணேயில் சிறப்பு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 8) ஆஜரானார். அப்போது ராகுல் காந்தியின் சிறப்பு வழக்கறிஞர் மிலிந்த் பவார், சத்யகியை குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.

அப்போது தனது சாட்சியத்தைப் பதிவு செய்த சத்யகி சாவர்க்கர்” ’சுதந்திரப் போராட்ட வீரர்’ என்ற பட்டம் எந்தவொரு அரசாலும் சாவர்க்கருக்கு வழங்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த பட்டம் மக்களால் அவருக்கு வழங்கப்படவில்லை என்று கூறுவது உண்மையல்ல. சாவர்க்கருக்கு சுதந்திரப் போராட்ட வீரர் என்று மக்கள் பட்டத்தை வழங்கினார்கள் என்பதை நிரூபிக்க என்னிடம் எந்த ஆவணச் சான்றுகளும் இல்லை என்பது உண்மை தான். சதாசிவ ரானடே எழுதிய சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்று நூலில்தான் சாவர்க்கருக்கு ‘சுதந்திரப் போராட்ட வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான்.
ரானடே சாவர்க்கருக்கு வழங்கிய அந்தப் பட்டம், அவருடைய சொந்தக் கற்பனையின் அடிப்படையில் அமைந்ததா என்பது எனக்குத் தெரியாது.சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை பல ஆசிரியர்கள் எழுதியுள்ளனர் என்று கூறுவது உண்மையே. அந்த வாழ்க்கை வரலாறுகள், சாவர்க்கரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்று கூறுவது உண்மையல்ல ” என்று சத்யகி சாட்சியமளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



