
சத்தீஸ்கரில் வேதாந்தா அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சக்தி மாவட்டத்தில், சிங்கி தராய் பகுதியில் வேதாந்தா அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று பிற்பகல் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் வெடித்தது. இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். திடீரென பாய்லர் வெடித்த சத்தம் கேட்டதால் அந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி தொழிலாளர்கள் ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே காயமடைந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு 14 ஆக அதிகரித்தது.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள ஒரு மின் நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்து மிகவும் துயரமானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுக்கும் தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில், “இந்த விபத்தில் சில தொழிலாளர்கள் உயிரிழந்ததும், சிலர் காயமடைந்ததும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதற்கான அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்று கண்டறியப்பட்டாலும், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.



