அதிகாலையில் பயங்கர விபத்து: லாரி, வேன் நேருக்கு நேர் மோதி 8 பக்தர்கள் பலி

கர்நூல் அருகே பக்தர்கள் சென்ற வேன், டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தின் தர்மபூர் சுங்கச்சாவடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஏப்ரல் 16) அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. மந்த்ராலயம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா சுவாமி மடத்திற்கு 21 பக்தர்கள் பிக்கப் வேனில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேன், பிடாரிலிருந்து துமகூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் தூக்கி வீசப்பட்டது.

இதில் ஐந்து பெண்கள், மூன்று வயதுச் சிறுமி, இரண்டு ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்கள் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்த 11 பேரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து யெம்மிக்கனூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்கவி கூறுகையில், ” விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 7 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் கர்நூலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கர்நாடகா – ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் எல்லையையொட்டி, கர்நூல் மாவட்டத்தின் தர்மபூர் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 167-ல் நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *