
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இன்று ( ஏப்ரல் 16) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது
தொடர்பாகவும், மக்களவை தொகுதிகளை 850 ஆக அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளன.
தொகுதி மறுவரையறைக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் இன்று(ஏப்ரல் 16) நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ்
வழங்கியுள்ளார். தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.



