
மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23- ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அதேபோல, அன்றைய தினம் மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காளத்தில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதற்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளளன.

முதற்கட்ட வாக்குப்பதிவு போல மக்கள் கூட்டம் அலை மோதியதை போல, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், காலை 9 மணி வரை குறிப்பிடத்தக்க அளவாக 18.39% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு மம்தாவுக்கு எதிராக பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
மேற்கு வங்களாத்தில் யார் ஆட்சியமைப்பது என்பதை கொல்கத்தா, ஹவுரா, 24 வடக்கு பர்கானாஸ், 24 தெற்கு பர்கானாஸ், நாடிய ஆகிய 5 மாவட்டங்கள் தான் தீர்மானிக்கின்றன. இந்த 5 மாவட்டங்களிலும் இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



