ஷாக்… ஒடிசாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

ஒடிசாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒடிசாவில் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவின் முதல் பாஜக முதலமைச்சர் என்ற பெருமை பெற்ற மாஜி ஆட்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்(என்சிஆர்பி) தரவுகள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் 2024 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றங்களின் நிகழ்வுகள் அதிகரித்து வருவது குறித்து என்சிஆர்பி கவலை தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்கள், பெண்கள் மீதான கொலைகள் போன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன; இவை சமூகத்திலும் அமைப்பிலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் சவால்களைத் தெளிவாக உணர்த்துகின்றன என்று என்சிஆர்பிகுறிப்பிட்டுள்ளது.

ஒடிசா சட்டமன்றத்தில் இந்த தரவுகளை முன்வைத்த முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறுகையில், 2025-ம் ஆண்டில் மாநிலத்தில் 2,994 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 7,382 பாலியல் சீண்டல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. கட,ந்த 2024-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 30,958 முதல் 32,687 வரை இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இத்தொகை 33,021-ஐ எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 5.6 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. 2025-ம் ஆண்டிற்கான கூடுதல் புள்ளிவிவரங்களில், 1,183 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள், 7,378 பெண்கள் கடத்தல் வழக்குகள், 1,448 பொது இடத்தில் ஆடையை அகற்றுதல் தொடர்பான சம்பவங்கள், 4,361 வரதட்சணை கொடுமை வழக்குகள் மற்றும் 5,419 வரதட்சணை சாராத கொடுமை வழக்குகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2024-ம் ஆண்டில் 3,054-ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 2,994-ஆகச் சற்று குறைந்துள்ளன. இருப்பினும், இப்புள்ளிவிவரங்கள் தொடர்ந்து உயர் நிலையிலேயே உள்ளன; 2025-ம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் சீண்டல் வழக்குகள் 7,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் தொடர்ந்து உயர் நிலையிலேயே நீடிக்கின்றன. 2023-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன; அதாவது, 2,826-லிருந்து 3,054-ஆக இவ்வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஒடிசாவில் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்யத்தக்க குற்றங்களின் எண்ணிக்கை, 2024-ம் ஆண்டில் 214,113-லிருந்து 2025-ஆம் ஆண்டில் 229,881-ஆக உயர்ந்தது; இது 7.3 சதவீதம் அதிகரிப்பாகும். இதில் புவனேஷ்வர் நகரில் மட்டும் 8.65 சதவீத. உயர்வு பதிவாகியுள்ளது. மாநிலத்தில் கொலை வழக்குகள் 2024-ம் ஆண்டில் 1,258-லிருந்து 2025-ம் ஆண்டில் 1,304-ஆக அதிகரித்துள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ‘இந்தியாவில் குற்றங்கள் 2023’ அறிக்கையானது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் ஒடிசாவை வகைப்படுத்தியுள்ளது. அந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 25,914 வழக்குகள் பதிவாகின; இது 2022-ம் ஆண்டில் பதிவான 23,648 வழக்குகளை விட 9.6 சதவீதம் அதிகமாகும். இவ்வழக்குகளில் குற்றத்தீர்ப்பு விகிதம் 6.9 சதவீதமாக இருந்தது; இது தேசிய சராசரியை விட மிகக் குறைவாகும். அண்மையில் வெளியான என்சிஆர்பி தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பட்டியலில் ஒடிசா தொடர்ந்து உயர் நிலையில் இருந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *