கோயிலுக்குச் சென்ற போது பரிதாபம்… லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

ஹைதராபாத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லாவைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் (40). தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா. இந்த தம்பதிக்கு கிருஷ்ண சந்திரா(13), மாதவ்(10) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். ஸ்வேதாவின் சகோதரர் சிவகுமார் (37). இவரது மனைவி ராஜேஸ்வரி என்ற லாசியா (35). இவர்களுக்கு ரிஷிதா(7) என்ற மகள் இருந்தனர்.

மே தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையால் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் காரில் சிவகுமார் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே காரியில் யாதகிரி குட்டா கோயிலுக்குச் சென்ற பின்னர் ஸ்வர்ணகிரியில் உள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின் சிலுகுருவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக காரில் சென்றார். ஹைதராபாத் புறநகர் பகுதியான தோண்டுப்பள்ளி அருகே சாலையில் கார் வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் ஸ்ரீனிவாஸ் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரின் இடுபாடுகளில் சிக்கி ஸ்ரீனிவாஸ் , அவரது மகன்கள் கிருஷ்ண சந்திரா, மாதவ், சிவகுமார், ராஜேஸ்வரி, ரிஷிதா, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஷம்ஷாபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றி காரில் இருந்தவர்களை மீட்டனர். ஸ்வேதா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோயிலுக்குச் சென்ற 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *