நினைவே சங்கீதம் 10: கரத்தால், கருத்தால் உழைப்பு

‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்று ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியது போல நானும் சில ஆண்டுகளுக்கு முன் இந்து தமிழ் திசையின் கோடை ஆண்டு மலரில் ‘அந்தக் காலத்தில் சம்மர் கேம்ப் இல்லை’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையில் எம் போன்ற 60, 70களின் குழந்தைகளுக்கு விடுமுறைக்கான சம்மர் கேம்ப் என்று ஒன்று தனியாகக் கிடையாது. வீடு கற்றுத் தராத வாழ்வின் பாடங்களை எல்லாம் வீதிகள் கற்றுத் தரும். விடுமுறைக் காலம் முழுவதும் வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக் கட்டி ஆட்டம் போடுவதாகவே இருக்கும்.

வெயிலின் கொடுமை மிக அதிகமாக இருக்கும் போது, அரசியல் கட்சிகளின் வாசகசாலைகள், முடி திருத்தகங்கள், தையல் கடைகள் என்று எங்கேனும் சென்று உட்கார்ந்து கொள்வதும், அங்கு பெரியவர்கள் பேசுவதை வாய் பார்த்து உலக ஞானம் பெறுவதுமாக பொழுது போகும். என் பள்ளி நாட்களில் நான் அப்படிப் போய் உட்கார்ந்த தையல் கடை எங்கள் பகுதியின் புகழ் பெற்ற பெல்ஸ் டெய்லர்ஸ் என்ற கடை. கடைக்காரர் பெயர் மணி என்பதாலும், அவர் பெல்ஸ் பேண்ட் தைக்கும் நிபுணர் என்பதாலும் கடைக்கு இந்தப் பெயர். ஆனால், அவர் பெல்ஸ் அணிய மாட்டார். மினிஸ்டர் லொயிட் என்ற ஒன்று இல்லாத காலத்திலேயே, அவ்வளவு வெள்ளை வெளேர் என்று வேஷ்டியும், வெள்ளை முழுக்கைச் சட்டையும் போட்டிருப்பார். கையை முக்கால் கைக்கு மடித்து விட்டுக் கொண்டு அந்த வெண்உடை சற்றும் அழுக்காகி விடாமல் வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்.

கடை மதுரை சிம்மக்கல் தெருவில் பேராசிரியர் அருணன் அவர்கள் வீட்டிற்கு (இப்போது அந்த வீட்டில் தான் அவரது வசந்தம் பதிப்பகம் இருக்கிறது) அடுத்த வீட்டுத் திண்ணையில் இருந்தது. ஒரு தையல் மிஷின், ஒரு கட்டிங் டேபிள் மட்டுமே போட இடமிருக்கும் சிறு கடை என்றாலும் அங்கு வருபவர்கள் உலக அரசியல் பேசுவார்கள். டெய்லர் மணி சிறுவயதில் என் அண்ணனுடன் பள்ளியில் படித்தவர். கறாரான கம்யூனிஸ்ட். எனவே இயல்பாகவே அதிகம் வாசிப்பவரும் கூட .தோழர் மணி எனக்கு அறிமுகம் செய்த உலகம் அற்புதமானது. அவர்தான் எனக்கு பைண்ட் செய்யப்பட்ட ஜலதீபத்தையும், யவனராணியையும் தந்தார். நீதி தேவன் மயக்கம் தந்தார். மணி நல்ல பாடகரும் கூட. தையல் மிஷினின் சீரான சப்தம் தான் அவருக்கு சுருதி, தாளம் எல்லாம். ஒரு நாள், நான் அவர் கடைக்குப் போன போது,
என்னருமைக் காதலிக்கு
வெண்ணிலாவே…
நீ இளையவளா, மூத்தவளா
வெண்ணிலாவே…
என்று தொகையறா பாடி, பாடலை அவர் பாடியது இன்றும் என் காதில் ஒலிக்கிறது. அப்படித்தான் எனக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறிமுகமானார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மற்றொரு கோடைகால விடுமுறை தினத்தில் கொளுத்தும் வெயிலில் நான் அவர் கடைக்குப் போன போது கடையில் அவரோடு இன்னும் நான்கைந்து பேர் இருந்தார்கள். மே தினக் கொண்டாட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும், மணி தோழர், “மே 1-ம் தேதி நம்ம வாசகசாலைக்கு வந்துரு. மே தினக் கொடி ஏத்தறோம், என்றார். “எதுக்குண்ணே? என்றேன். “மே 1 தாண்டா தொழிலாளர் தினம்,” என்றாா் மணி அண்ணன். பள்ளிப் படிப்பைத் தவிர மற்ற எதிலும் கவனம் இருக்கக் கூடாது என்று கண்டிப்பான சூழலில் வளர்ந்து வந்த நான் “அண்ணே. நா ஸ்கூல்ல தானே படிக்கறேன்..என்ன தொழிலாளர் தினத்துக்கு கூப்புடுறீங்க !” என்றேன். அறியாச் சிறுவனுக்கு ஞானோபதேசம் செய்யும் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சி அவரது முகத்தில்..

“தம்பி, நீ, நா, எல்லாருமே தொழிலாளி தாண்டா… நா தையல் தொழிலாளி… உங்க அண்ணன் வக்கீலுக்கு படிக்கறான். படிப்ப முடிச்சு வக்கீல் ஆனபிறகு வக்கீல் தொழிலாளி… நீ நல்லா படிச்சு நாளைக்கு ஒரு டாக்டராகிட்டன்னு வச்சுக்க, நீ டாக்டர் தொழிலாளி… கை கால வெச்சு உழைக்கிறவன் கரத்தால் உழைக்கிற தொழிலாளி.. உங்கள மாதிரி படிச்சு வேல பாக்கறவங்க கருத்தால் உழைக்கிற தொழிலாளி.. சம்பளம் முன்னப் பின்ன இருக்கும் . ஆனா நம்ம எல்லோரும் தொழிலாளிதா…“ என்றார்.
பட்டுக்கோட்டை என்ன சொன்னான் தெரியுமா?
வீரத் தலைவன் நெப்போலியன் ஒரு
வீடு கட்டும் தொழிலாளி
ரஷ்யா தேசத் தலைவன்
மார்ஷல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி..
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
கார் ஓட்டும் தொழிலாளி
விண்வெளிக் கதிர் விபரம் கண்ட
சர்.சி.வி.ராமனும்
தொழிலாளி
எதற்கும் படிப்பு தேவை
அதோடு உழைப்பும் தேவை…
அன்று அவர் கணீரென்று பாடிக் காட்டிச் சொன்னது முழுவதுமாக எனக்குப் புரியவில்லை. ஆனாலும் கூட, வெறும் படிப்பு மட்டும் போதாது. வெறும் உழைப்பு மட்டும் போதாது. இரண்டும் முக்கியம் என்பது என் சிறு வயது மனதுக்குப் புரிந்தது. உடல் உழைப்பு கேவலமல்ல அதே போல படிப்பு என்பது மிக உயர்ந்ததும் அல்ல. இரண்டும் முக்கியம், இரண்டும் வேண்டும் என்பது என் மனதில் எப்படியோ பதிந்தது. தோழர் மணி அப்படிப் பதிய வைத்தார் !
பின்னாளில் நான் எல்.ஐ.சியில் வேலைக்குச் சேர்ந்து, தொழிற்சங்கம், பொதுவுடமை இயக்கம், தமுஎகச என ஒரு பரந்த வெளியில் இயங்கிய காலத்தில், எத்தனை எத்தனையோ வகுப்புகள், எத்தனை எத்தனையோ பெரிய பெரிய தலைவர்கள் மூலமாக எவ்வளவோ தத்துவங்களை, பெரிய விஷயங்களை அறியும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள் அனைவரும் ஒன்றே என்று டெய்லர் மணி தோழர் சர்.சி.வி.ராமனையும், என் அண்ணனையும். தன்னையும் ஒப்பிட்டு விளக்கியது தான் எனது பாலபாடம். மணி தோழர் போட்ட அஸ்திவாரத்தில் தான் சுப்பாராவ் என்ற தோழன் உருவாகி இருக்கிறான்.

இந்தியப் பொதுவுடமை இயக்கம் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்து விட்டது. சோவியத் யூனியன் சிதறிப் போய் விட்டது. இரண்டு மாநிலங்களில் இருபதாண்டுகளுக்கும் மேல் நடந்த இடதுசாரி ஆட்சிகள் பறி போய்விட்டன. நாடாளுமன்றத்தில் பலம் குறைந்து கொண்டே போகிறது. ஆனாலும்,. இழப்பதற்கு ஒன்றுமில்லை.. அடிமைச் சங்கிலியைத் தவிர.. என்று இயங்கிக் கொண்டே இருக்கிறோம். இந்த மே தினத்தன்று எங்கள் பழைய வீடு இருந்த சிம்மக்கல் வழியாகப் போகும் போது, ரஷ்யா தேசத் தலைவன் மார்ஷல் ஸ்டாலின் செருப்புத் தைக்கும் தொழிலா…ளி. .. என்ற வரி உச்சக் குரலில் எங்கிருந்தோ காற்றில் மிதந்து என் காதில் மோதியது. அது டி.எம்.எஸ் குரல் அல்ல,. எங்கள் தோழன் டெய்லர் மணியின் குரல். டெய்லரும், வக்கீலும், விஞ்ஞானியும், மருத்துவரும், காய்கறி விற்பரும் ஒரே தொழிலாளி இனம்தான் என்று எனக்கு போதித்த மார்க்சிய ஆசானின் குரல்.
இந்த மே தினம் முழுக்க உழைப்புத் தேவை பாடலும், டெய்லர் மணியின் முகமும் என் நெஞ்சில் நிறைந்திருந்தன.
ச.சுப்பாராவ் ( தொடரும்)

1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/

2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/

3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/

4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/

5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/

6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/

7)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/

8)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/

9)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-part-9/

இப்போதே பகிருங்கள்

2 Comments

  1. தோழர் சுப்பாராவ் அவர்களின் மே தின பதிவு அருமை. நான் சிறு வயது பையனாக இருக்கும் போது மதுரை மேல பொன்னகரத்தில் இருந்த ஏ கே கோபாலன் படிப்பகமும் அங்கு தீக்கதிர் இதழை வாசித்ததும். அன்றைய வயதில் எனக்கு தீக்கதிர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு என்பது தெரியாது என்பது வேறு விஷயம். எழுத்துக்கூட்டி வாசித்ததாக தான் நினைவு. இருப்பினும் கூட அன்றைய காலங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள எனது வீட்டிலிருந்து ஏகே கோபாலன் படிப்பகத்திற்கும், கேஸ்ட்ரோ படிப்பகத்திற்கும் நடந்தே சென்று அவர்கள் கரும்பலகையில் எழுதியுள்ள செய்திகளை அறிந்து கொண்டவன். கேஸ்ட்ரோ படிப்பதற்கு எதிரே அமைந்த திமுக படிப்பகத்திலும் தேர்தல் செய்திகளை பார்த்து அறிந்து கொண்டவன். அதே நேரத்தில் மேல பொன்னகரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சண்முகநாதபுரம் அருகில் அதிமுகவின் பூலாவரி சுகுமாரன் படிப்பகம் இருந்ததும் எனது நினைவில் இன்றும் உள்ளது. அங்கும் நான் செய்தித்தாள்களை வாசித்துள்ளேன்
    பூலாவரி சுகுமாரன் படிப்பகத்தில் அண்ணா என்ற நாளிதழை படித்த ஞாபகம் இன்றும் உண்டு. இப்படி எல்லாம் நான் பத்திரிகைகளை படித்து இளம் வயதிலேயே அரசியலை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கியது கம்யூனிஸ்ட் இயக்கங்களை என்றால் அது மிகையல்ல. இதே காலத்தில் மாறி மணவாளன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி ஏகே கோபாலன் படிப்பகத்தில் நடைபெறும் அதில் ஒருவர் குல்லா அணிந்து கொண்டு பாடுவார் அவரோடு சேர்ந்து மூன்று பேர் இருந்ததாக நினைவு. பின்னர் தான் நான் அறிந்து கொண்டேன் அவர் வேறு யாரும் அல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட குழு உறுப்பினராக இருந்த தோழர் ஜி கல்யாணசுந்தரம் தான் என்பதை அறிந்து கொண்டேன். மே தினம் என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்தியது ஏகே கோபாலன் படிப்பகமும் கேஸ்ட்ரோ படிப்பகம் தான் என்றால் மிகையல்ல. அருமை தோழர் இவ்வாராவின் நினைவுகளோடு எனது நினைவுகளையும் திரும்பிப் பார்த்ததே இந்த பதிவு.

  2. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஒரு காலகட்டத்தில் மதுரையில் மக்களின் அரசியல் அறிவை, புரிதலை விரிவுபடுத்துவதில் வாசகசாலைகள் பெரும் பங்கு வகித்தன என்பதே நம் இருவரின் அனுபவமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *