நினைவே சங்கீதம் 9:நிலவில் தெரியும் அழகு முகம்

தமிழரின் வாழ்வியல் பண்பாடுகள் பல நம்மை வியப்பிலாழ்த்துபவை. அதிலும் குறிப்பாக இறப்பு தொடர்பான நம் பழக்க வழக்கங்கள் வேற்று மொழியினரிடம், வேற்று மாநிலத்தவரிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழனுக்கு எல்லாவற்றிற்கும் இசை வேண்டும். திரைப்படப் பாடல்கள் வேண்டும். அது இறப்பு என்றாலும் கூட.

இறப்பை, வாழ்வின் நிலையாமையை, அந்த இறப்பு தந்த துயரை பாடல்களைக் கேட்டுக் கடந்து செல்லலாம் என்று நமக்குச் சொல்லித் தந்தது யார்? துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்று சொன்ன பட்டுக்கோட்டையார்,  பாடல் கேட்டுத் தன் துயரை மறந்த எத்தனையோ எளிய மக்களைப் பார்த்துத் தான் அந்த வரியை  எழுதியிருக்க வேண்டும்.

துக்க வீட்டில் ஒலிபரப்ப மைக் செட்காரர்கள் கொண்டு வரும் பாடல்களின் தொகுப்பை வைத்து யாராவது முனைவர் பட்ட ஆராய்ச்சியே செய்யலாம். போனால் போகட்டும் போடா, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி, சட்டி சுட்டதடா, வீடு வரை உறவு, சமரசம் உ்லாவும் இடமே, நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனான்டி, நீரை எடுத்து நெருப்பினை அணைக்க வந்தாலும் வருவான்டி, வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே, என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா, நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை, தள்ளித் தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை… அப்பப்பா… எத்தனை பாடல்கள்…  அதற்கும் மேலாக இந்தப் பாடல்களை அப்படியே வாசிக்கும் நையாண்டி மேளக் கலைஞர்கள்….  அதுவும் இறைவனே தெருப்பாடகனாக வந்து, பாட்டுப் பாடி ஹேமநாத பாகவதரை விரட்டிய எங்கள் மதுரையில் கேத வீட்டில் போடும் பாடல்களுக்காவே ஒருவர் இறந்து கூட போகலாம் !

நான் சொல்லப் போகும்  சம்பவம் நடந்து ஏறக்குறைய 35 ஆண்டுகள் இருக்கும். நாங்கள் பரபரப்பான சிம்மக்கல் பகுதியிலிருந்து மதுரைக்கு பத்து கிமீ தள்ளி இருக்கும் ஆளரவமற்ற  ஐயர் பங்களாவிற்கு வந்த சமயம். இன்று போல் அங்கு தமிழகத்தின் மிக நீண்ட பாலமோ, பெரிய பெரிய கடைகளோ எதுவும் கிடையாது. பசுமையான வயல் வெளிகளுக்கு நடுவில் ஆங்காங்கே புதிதாய் போடப்பட்ட பிளாட்களில் முளைத்த ஒற்றை வீடுகள் சில மட்டுமே இருக்கும். இன்று சர்க்கஸ், 7 உலக அதிசயங்கள் கண்காட்சி  முதலானவை நடக்கும் வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோயிலைச் சார்ந்த நிலத்தில் விவசாயம் மும்முரமாக நடக்கும்.

பக்கத்தில் முல்லையாற்றுக் கால்வாயில் எப்போதும் குளிர்ந்த நீர் நிஜமாகவே சலசலப்போடு ஓடிக் கொண்டிருக்கும்.  நடுத்தர வயதுப் பெண்கள் எந்தக் கூச்சமுமின்றி, குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும் இருப்பார்கள். நாற்று நடும் காலத்தில் நாம் அந்த வழியாகப் போகும் போது,  நாற்று நடும் பெண்கள் நம் முன்னால் நாற்றைப் போட்டுவிட்டுக் குலவை போடுவார்கள். நாற்று நம் வீட்டுக் குழந்தை போல, அதைத் தாண்டக் கூடாது என்பார்கள். காசு போட்ட பிறகு, அந்த நாற்றை அவர்கள் எடுத்த பிறகு தான் நாம்  அந்த வழியே நடந்து செல்ல முடியும். ஒவ்வொரு நாளும் கிராமப்புற வாழ்க்கை பற்றி ஏதேனும் ஒரு புதிய  விஷயத்தை தெரிந்து கொண்டு நான் வியப்படைந்த நாட்கள் அவை

அன்று செவ்வாய்க்கிழமை, அதை நான் எப்படி மறக்க முடியும்? என்று நான் என்சிபிஹெச்சில் ஒரு சோவியத் நாவலை, அதன்  தலைப்பிற்காகவே வாங்கியிருந்தேன். அது போல அது ஒரு சனிக்கிழமை. நான் மறக்க முடியாததாக ஆனது. அலுவ்லகத்தில் அரை நாள் வேலை முடிந்து நான் பஸ் பிடித்து, ஐயர் பங்களாவில் இறங்கி வேகாத வெயிலில் ஆற்றுக்காலை ஒட்டி நடந்து வந்து கொண்டிருக்கிறேன்.  திருப்பாலை தாண்டி எங்கோ யாரோ இறந்து விட்டார்கள் போலும். நான் மேலே கூறிய பாடல்கள் ஆளரவமற்ற அந்த வயல் வெளியில் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன. பாடல்கள் நின்றன.

மைக்கை நையாண்டி மேள கோஷ்டிக்குத் தந்து விட்டார்கள் போலும்.  தவிலை, உறுமியை, பம்பையை, கலைஞர்கள் செல்லமாகத் தட்டித் தட்டி சுருதியை சரி பார்க்கிறார்கள். நாதஸ்வரக்காரர்கள் சீவாளியை சரி செய்து கொள்கிறார்கள். ஒரு நிமிட நிசப்தம் . பிறகு நாதஸ்வரம் ஆரம்பிக்கிறது.

தாளவாத்தியக் காரர்கள் முதலில் ஒரு ரவுண்ட் அடித்துக் கொட்டி முழக்குகிறார்கள். பின் ஒற்றை நாயனம் மெதுவாக நெஞ்சினிலே  நினைவு முகம் என்று ஆரம்பிக்கிறது. இப்போது எல்லா பக்கவாத்தியங்களும் நின்றுவிட, ஒற்றைத் தவில் மட்டும் குச்சியில்லாமல், சர்வலகுவாக தபேலா நடையில் உடன் வருகிறது.  தேவ சங்கீதம் அது.

ஆருயிர் என்று அழைத்தவளே

புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே

நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே

நீ ஓடி மறைந்தது நீதியில்லை…..

நீதியில்லை…. என்ற நீண்ட கார்வையின் போது, அந்த ஒற்றைத் தவிலும் நின்று கொண்டது. நாதஸ்வரக்காரர் அந்த நீதியில்லை என்ற சொல்லை டிஎம்எஸ் போலவே எங்கோ உயரத்தில்,  உச்சஸ்தாயியில் ஒரு நிமிடம் நிறுத்துகிறார்.  அந்த இசையை எனக்குக் கொண்டு வந்த காற்றே நின்று இளைப்பாறுவது போல் ஒரு பிரமை எனக்குள்.

நாதஸ்வரக்காரர் இப்போது கீழேயிருந்து நெஞ்சினிலே… ஏஏஏ… நினைவு முகம்… என்று வாசிக்கும்போது, ஏதோ ஒரு நுட்பமான இடத்தில் தவில் மிக அனுசரணையாக மெதுவாகச் சேர்ந்து கொள்கிறது.  அந்த நாதஸ்வரக்காரர் அந்த வரியை கூலிக்காக வாசிக்கவில்லை.  தன் தாயோ, சகோதரியோ, மனைவியோ ஓடி மறைந்த பின் தான் மட்டும் ஓருயிராக தவித்து நிற்பதை, தன் சொந்த துக்கத்தைச் சொல்வதாகவே பட்டது.  பட்டப்பகல் மூன்று மணிக்கு யாருமில்லாத வயல் வெளியில் என்னையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சொட்ட நான் அப்படியே நின்று விட்டேன். Our Sweetest Songs Are That Tell Of Saddest Thoughts  என்று பள்ளியில் படித்த ஷெல்லி கவிதையில் வரும் பாடல் இதுதானோ?

ஆற்றுக்காலில் குளித்துக் கொண்டிருந்த, என் அம்மாவிற்கு வீட்டு வேலைகளுக்கு உதவி செய்யும் தங்கம் அக்கா,  மார்பில் குறுக்கே கட்டிய உள்பாவாடையின் ஈரம் சொட்டச் சொட்ட,  வெட்கத்தை மறந்து என்னிடம் ஓடி வருகிறார். “தம்பி, என்னய்யா, என்ன ஆச்சு? என்ன இப்படி கண்ணுல அருவியா கொட்டுது?” என்று என் கன்னத்தைத் துடைக்கிறார். நான் என்ன சொல்வேன்? “ வேகமா வீட்டுக்குப் போங்க…  சாயந்தரம் திருப்பால பள்ளிவாசல்ல பாய்கிட்ட போய் மந்திரிச்சுட்டு வாங்க, எல்லாம் சரியாப் போகும்,“ என்கிறார்.  நான் வெட்கத்தோடு, “ஒண்ணுமில்லங்கக்கா…” என்று சொல்லிக் கொண்டே  வேகமாக நகர்கிறேன்.

பொதுவாக எந்தப் பாடலைக் கேட்டாலும், அதற்கு சம்பந்தப்பட்ட ஒருவரின் முகம் என் மனக்கண்ணில் வந்து போகும். ஆனால், எப்போது இந்தப் பாட்டைக் கேட்டாலும்,  முகமறியாத ஒரு நையாண்டி மேள நாதஸ்வரக் கலைஞரின் நையாண்டி மேள நாதஸ்வரக் கலைஞரின் blurred image வந்து போகிறது.

என் நெஞ்சில் இருக்கும் அந்த அழகு முகம் எப்படி இருக்கும் என்ற கற்பனை மிகவும் சுகமாகவும் இருக்கும். துக்கமாகவும் இருக்கும்.
– ச.சுப்பாராவ் ( தொடரும்)

1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/

2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/

3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/

4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/

5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/

6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/

7)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/

8)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/

இப்போதே பகிருங்கள்

One comment

  1. ஆம். துக்க வீடுகளில் மைக் செட் போடும் வழக்கம் வந்த பிறகு இவையெல்லாம் சாத்தியமாயிற்று. முன்பெல்லாம் துக்க வீடுகளில் தவில், நாதஸ்வரம் தவிர ஒத்து (சுருதிக்காக), பம்பை, நையாண்டி மேளம் சமயத்தில் 2 வது நாதஸ்வரம் என்று ஒரு செட்டாக தான் வருவார்கள். இதற்கு என்று திருப்பாசேத்தியில் இரண்டு மூன்று குழுக்கள் இருப்பார்கள். இசைத்தட்டில் இருப்பது போலவே இசைப்பார்கள். சில நேரங்களில் ராகங்களும் வந்து விழும். இன்றைய நாட்களில் இந்த மேளத்திற்கு மவுசு குறைந்துவிட்டது. மதுரையில் சித்திரை திருவிழா காலங்களில் ஆங்காங்கே இந்த மேளம் வாசிப்பார்கள். கேட்க அபூர்வமா இருக்கும். நல்ல ஒரு செய்தி. தகவலுக்கு நன்றி. தொடர் தொடருட்டும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *