இழுபறி முடிவுக்கு வந்தது…கேரள முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு

கேரள மாநில முதலமைச்சராக வி.டி. சதீஷனை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது.

கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற வெற்றி என்பதால், முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் போட்டி நிலவியது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டன. சட்டமன்றத்திற்குத் தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய, அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு கட்சித் தலைமையிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து கே.சி.வேணுகோபால், வி.டி சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். ஆனாலும் கேரள முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது.

இந்த நிலையில், பத்து நாட்களுக்குப் பிறகு வி.டி.சதீஷனை கேரள முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் காங்கிரஸ் தலைமை இன்று ( மே 14) அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவில் விரைவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பதவியேற்புக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *