
வாழ்வின் ஒவ்வொரு துளியையும் சற்றும் பிசகின்றி ஒரே நேர்கோட்டில் கடக்க விரும்புகிறவர்களால் நிறைந்திருக்கிறது இந்த உலகம். அதிகாலையில் விழிப்பு. அடுத்த நொடியில் நடைபயிற்சிக்கான தயாரிப்பு. அது சரியாக நிறைவேறிய பிறகு அடுத்ததாக அந்தநாளுக்கான தயாரிப்பு. பின் சொல்லி வைத்ததைப் போல அலுவலகமோ அல்லது பள்ளிக்கூடமோ போய் அந்த நாளை நிறைவு செய்து வீடு திரும்புவது. இதில் லேசாக அலுப்பு ஏற்பட்டால் லேசாக தாகசாந்தி நிலையங்களில் ஒதுங்கி சுதி ஏற்றியபடி வீடடைவது. இவற்றில் சின்ன சின்ன மாற்றங்கள் தற்செயலாக நடந்தால்கூட தவித்துப் போகிறவர்களே மத்தியதர வர்க்கத்து மனிதர்கள்.
நாம் இதனை கண்ணுற்றிருப்போம் அல்லது இந்த சக்கரவாட்டச்சுழற்சியில் சிக்கியிருப்போம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அலுவலகம், வீடு என்ற பேதமும் இல்லை. பெண்களுக்கும் அதே நேர்கோட்டு வாழ்வுதான். செவ்வாய்,வெள்ளி சாம்பார். புதன்,ஞாயிறுகளில் கறி , மீன் கருவாடுகளுக்கான தயாரிப்புகள். வியாழக்கிழமை பயத்துக்கொழம்பு. அங்கேயும் நேர்கோட்டு வாழ்வுதான். இத்தோடு சேர்ந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதே நேர்கோடு இணைகோடாக. மத்தியதர வர்க்கத்து வாழ்வில் மட்டுமல்ல. உழைப்பாளிகளின் வாழ்முறையிலும் நேர்கோட்டு வாழ்க்கைதான். இடம், பொருள் மட்டும்தான் மாறியிருக்கும். மற்றபடி ஒரே மாதிரியான சக்கரவாட்டச்சுழற்சி முறைதான்.
ஒரே தன்மையில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாமல் தடுமாறி வெளியேற நினைப்பவர்களை இந்த உலகம் கோட்டிக்காரரர்களாகத்தான் பார்க்கிறது. ஆனால், வழக்கம் போல பயணித்த எவராலும் இந்த பேருலகில் ஒரு மாற்றமும் நிகழ்ந்ததில்லை என்பதை பொதுச்சமூகம் புரிந்து கொள்வதில்லை. விலகிப் பயணிப்பவர்களே புதிய பாதைகளைக் கண்டடைகிறார்கள். அதற்காக அவர்கள் சுமந்த சிலுவைகள், எதிர்கொண்ட சுடுசொல்கள் யாவும் காலவெளிக்குள் கரைந்து போய்க்கிடக்கின்றன. சூழலுக்குள் பொருந்திப் போக முடியாமல் தவித்தலையும் இப்படியான மனிதர்களின் வாதைகள் தனித்துப் பேசப்பட வேண்டியவை. அப்படியான மனிதனின் கதைதான் கருப்பசாமியின் அய்யா.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் முதல் சிறுகதைத்தொகுப்பான வெயிலோடு போய்க்குள்தான் கருப்பசாமியின் அய்யா பதுங்கியிருக்கிறார். எண்பதுகளின் துவக்கத்தில் சிறுகதை எழுத வந்தவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். முற்போக்கு இலக்கிய முகாமின் எழுத்தாளர்கள் கதைகளைச் சொல்கிறவர்கள். அதனை நன்றாக நடத்தத் தெரியாதவர்கள் எனும் கலைக்கோட்பாட்டாளர்களின் வசையை தன்னுடைய கதைத்தொகுப்பின் மூலமாக கலைத்தவர் அவர். ஆனாலும் அவர் தொடர்ந்து படைப்பிலக்கியத் துறைக்குள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அமைப்பின் செயற்பாட்டாளர், அரசியல் பிரக்ஞையுடன் இயங்குபவர் எனும் முத்திரை அவர் மீது விழுந்ததால் படைப்பிலக்கியத்திற்குச் சமமாக அல்லது அதைவிடச் சற்றுக்கூடுதலாக கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். லட்சக்கணக்கில் பிரதிகள் விற்றுத் தீர்ந்த அரசியல் எனக்குப் பிடிக்கும் அவருடைய மிக முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. பொது இலக்கிய வெளியில் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்புகள் நான் பேச விரும்புகிறேன், பேசாத பேச்செல்லாம் என்பது என்னுடைய வாசிப்பின் வழிகண்ட விடயம்.
எத்தனை கட்டுரைத் தொகுப்புகள் எழுதித்தீர்த்தாலும் அவருடைய துறை சிறுகதைதான். அதற்கான சாட்சியே அவர் பெற்றிருக்கும் சாகித்ய அகாதமி விருது. எழுபதுகள் வரையிலான தமிழ்ச்சிறுகதைகளின் மீதான அவருடைய வாசகப்பரவசத்தையே தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் எனும் நூலாக்கியிருக்கிறார்.அந்த நூலுக்கே அவருக்கு விருதும் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும்விட அவருடைய சிறுகதைப் பங்களிப்பே அவருடைய இலக்கிய அடையாளம். எப்போதும் நீடித்து நிலைத்து நிற்கும் சிறுகதைகளான பாவனைகள், வார்த்தை, ஏவாளின் குற்றச்சாட்டுகள், பின்னனி இசை இன்றி போன்ற கதைகளை எழுதியவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். அவருடைய ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று கருப்பசாமியின் அய்யா.
கருப்பசாமியின் அய்யா கதையை கருப்பசாமியில் இருந்தே துவங்குகிறார் எழுத்தாளர். அவனுடைய சேக்காளிகள் “கருப்பசாமி அவுக அய்யா வந்ததில இருந்து ரொம்ப தெனாவட்டா திரியுறான், கூலிங்கிளாஸ், பவுடருன்னு மினுக்குறான் அவன இனிமேக்கொண்டு விளையாட்டுல சேர்க்கக்கூடாது” ன்னு பேசுவதில் கதை துவங்குகிறது கதை.. இத்தனை கச்சிதமான துவக்கவரிகள் எப்போதாவதுதான் தமிழ்ச்சிறுகதைகளில் அமைகிறது. ஏன் இப்பிடி இருக்கிறான் கருப்பசாமி என்பதை அடுத்தடுத்த வரிகளில் கதை கடத்துகிறது. கருப்பசாமியின் அய்யா ஊரைவிட்டுப் போயி ஏழு வருசமாச்சு. திடீர்னு காணாமாப் போனவரு இப்பத்தான் திரும்பி வந்திருக்காரு. வரும்போது அவர் வாங்கிட்டு வந்த பொருட்கள வச்சுக்கிட்டுத்தான் சுத்துறான் கருப்பசாமி. அவரு வந்ததில இருந்து அவரையே சுத்தி சுத்தி வந்தான் கருப்பசாமி.
இந்த கூத்தும் ,கொளமழிப்பும், சந்தோசமும் நாலுநாள்கூட தாக்குப்பிடிக்கல. கருப்பசாமியோட அம்மா காளி “இம்புட்டுக்காலம் சுத்தி அலைஞ்சு வந்திருக்கீரே, எம்புட்டு கொண்டு வந்தீரு” எனக் கேட்ட நொடியில் இருந்து எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்து விடுகிறது. அவர் கொண்டுவந்த முப்பத்தஞ்சு ரூபாய வச்சு என்ன செய்ய என எரிச்சலடைந்த காளி நித்தமும் வசவா தொளிச்சு எடுக்க ஆரம்பிச்சா. கருப்பசாமிக்கு அய்யாவ பார்க்கும்போது அழுகை,அழுகையாகவும்,அம்மாவ பார்த்தாலே கோபம்,கோபமாவுந்தான் வருது. எதுக்கு இப்பிடி வையிறா என அவனுடைய நினைப்பைக் கலைத்து ஒரு ஊர்ப் பெரிய மனுஷியின் வழியாக யார் இந்த கருப்பசாமியின் அய்யா என்பதை கருப்பசாமிக்கும், வாசகனுக்கும் ஒருசேர விரிக்கிறார் எழுத்தாளர்.

கருப்பசாமியின் அய்யாவுக்கு எல்லாமே விளையாட்டும், வித்தையும்தான். எந்தப் பெரிய கல் உரலையும்கூட அந்தாசமாகத் தலைக்கு மேலே தூக்கி எறிஞ்சிருவாராம்.பந்தயம் வச்சா பெரிய ஆட்டுரலக்கூட தூக்கி எறிஞ்சுருவாராம்.சோடா, கலர் பாட்டில் மூடிகளை சும்மா பல்லுட்டயே கடிச்சு திறந்துருவாராம். நிறைகுடத்த கையால தூக்கிருதுல்ல,சும்மா அப்படியே பல்லுட்ட கடிச்சே தூக்கிரருவாரு.கருப்பசாமியின் அய்யா இசக்கிமுத்து இப்பிடி விளையாட்டும் வித்தையுமா திரிஞ்ச ஆளு. யாராவது எப்பா இசக்கிமுத்து இத செய்யுப்பா, அந்தக் கல்ல தூக்கிரு பார்ப்போம்னால்லாம் தூக்க மாட்டாரு. அவருக்கா தோனனும். அப்ப மட்டும்தான் செஞ்சு காட்டுவாரு. இந்த இடம்தான் அசல் கலைஞனின் வார்ப்பு. எந்தக் கலையையும் அதிகாரத்தாலோ அல்லது கட்டாயப்படுத்தியோ நிகழ்த்திட முடியாது.
கலை கலைஞனிடம் உருவாகி திரண்டு வருவது தனித்த செயல். இப்பிடி வித்தை காட்டிக் கொண்டு திரிந்தால் குடும்பம் எப்படி அனுமதிக்கும். இசக்கி முத்துவின் அய்யா,இப்பிடி பொறுப்பில்லாமா சுத்துறானே. எல்லா இளவட்டங்களைப் போல காட்டு வேலைக்கு போனோமா,கிணத்து வெட்டுக்குப் போனோமா,அந்நாடாம் வயித்துப் பாட்டுக்கு வழி செஞ்சமான்னு இல்லாமா, இப்பிடி அவுத்துவிட்ட காளையாட்டம் திரியுரானேன்னு சங்கடப்பட்டாரு. பெத்த பிள்ளைய அதுக்காகக அப்பிடியே விட்டுறவும் தயாரில்ல. சரி ஒரு இடத்தில இருக்க மாட்டேங்கிறான். நாலு ஊரு சுத்தி வரட்டும்னு ஒரு சைக்கிள் வாங்கி அதுக்குப் பின்னாடி கருவாட்டுப் பெட்டியக் கட்டி விட்டாரு. ஆரம்பத்தில இசக்கிமுத்து நல்லாத்தான் போயி கருவாடு வித்து திரும்பினான். அப்பிடியே ஒரே சீராப்போனா அது இசக்கிமுத்து இல்லேல்ல.யாவற்றையும் கலைத்து அடுக்கி புதிதாக அடுக்கிப் பார்க்கும் வித்தைக்காரன் இசக்கிமுத்து. அவுக அய்யாவும்,ஊரும் எதிர்பார்த்த மாதிரியே நடக்கத் துவங்கினான்.
வியாபாரத்துக்கு ஊருக்குள்ள போனவுடனே அங்க இருக்கிற இளவட்டக்கல்லுல உட்காருவான். அந்த ஊரு திரண்டு வந்து “என்னப்பா பெரிய சண்டியரா,எங்க வந்து உட்காந்திருக்க. எல்லாம் தெரிஞ்சுதான் உட்காந்திருக்கோம்னு சொல்லிக்கிட்டே கண்ணிமைக்குறதுக்குள்ள அந்த இளவட்டக்கல்ல தூக்கித் துண்டா தலைக்கு மேல தூக்கி எறிஞ்சுருவான். ஊரும் வாய்ப்பாறும். பார்க்கிறதுக்கு நரம்பு கணக்கா இருந்துக்கிட்டு இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டானேன்னு,மாலை,மரியாதை காசு,பணம் கவுரவம் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுச்சு. இசக்கிமுத்துக்கு காசு,பணம் முக்கியமில்ல. கவுரவந்தான் முக்கியம். யாராவது கருவாட்டுக்கு இப்ப துட்டு இல்லப்பான்னு சொன்னா,அதுனால பராவயில்லை சும்மா கொண்டுபோங்கன்னு கருவாடக் குடுத்துட்டு வெறுங்கையோட வீட்டுக்கு வருவான்.இசக்கிமுத்தோட அய்யாவுக்கு என்ன செய்யிறதுன்னு ஒன்னும் புலப்படல. ஊர்கள்ல யோசிக்கிற மாதிரியே இசக்கிமுத்துவுக்கு ஒரு கால்கட்ட போட்டாக்க எல்லாம் சரியாப் போகும்னு அவரும் நினைச்சார். அந்த யோசனையில இசக்கிமுத்துவுக்கு வாக்கப்பட்டு வந்தவதான் காளியம்மா.
காளியம்மா அவனை வழிக்கு கொண்டு வந்துருவான்னு அவு அய்யா மட்டுமில்ல,ஊரே நம்பிச்சு. இசக்கிமுத்து வழக்கம் போல சுத்திக் கொண்டு வருவதை சகிக்க முடியாமல் தினமும் வசவாக வையத் தொடங்கினாள் காளி. இப்பிடி நித்தமும் சண்டையாக் கெடாந்தா எப்பிடி இங்கிருக்க முடியும்னு கிளம்பிப் போனவந்தான் ஏழு வருசம் கழிச்சு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்கான்.
ஊருக்காரவுக கருப்பசாமிட்ட சொன்னது சரிதான் போலன்னு அவன் மனசுக்குள்ள நினைச்சான். எதுக்கு ஆத்தா அய்யாவ இந்த வசவு நித்தமும் வையிது. பிறகு மறுபடியும் அய்யா காணாமப் போயிருவாரோன்னு மனசுக்குள்ளேயே பதறினான் கருப்பசாமி. அய்யா வந்ததில் இருந்து அவருகூடயே ஒட்டிக்கிட்டு கிடந்தான். அவரு சரியான வித்தைக்காரரு. எப்பயும் வேடிக்கையும் விளையாட்டுமா இருப்பாரு. அதக் கெடுத்துரும் போலேயே ஆத்தான்னு நினைச்சு தவிச்சான். அவன் நினைச்ச மாதிரி நடக்கல. வீட்டிலேயே சின்ன கிளப்புக்கட வச்சாக. இட்லி, தோசை, வடைன்னு பலகாரம்னு தூள் பறந்துச்சு. இசக்கிமுத்து அந்தக் கடையில் சுடும் வடைகளும்,இன்னபிற பண்டங்களும் வழக்கமான வடிவத்திலே இருப்பதில்லை.
வட்டமாக வடையை சுட்டு எடுக்க கருப்பசாமியின் அய்யா ஒன்னும் சாதாரணமான ஆளில்லையே. சதுரமாகவும், உருளையாகவும், நீள்வடிவத்திலும், சமயத்தில் ஏரோப்பிளேன் வடிவிலும்கூட வடையைச் சுடுவார். அதனைக் கடாப்பெட்டியில் கொண்டு போய் காடுகரைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு விற்று வருவது அம்மாவின் வேலை. அங்கே வடைப் பெட்டிய திறக்கும் போதுதான் காளியம்மாவுக்குத் தெரியவரும் இசக்கிமுத்தோட கிரித்திரியம். ஊருக்காரவுகளோட அவளும் சேர்ந்து சிரிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும் வராதுமாக கருப்பசாமி அய்யாவ வசவு விட்டுத் தொளிச்சிருவா காளி. அந்த நேரத்தில சரி காளி. இனிமே செய்யலன்னு தலைய தொங்கப் போடுவாரு. வடை மட்டுமில்ல. அவரு காபி ஆத்துறதே சர்க்கஸ் மாதிரித்தான் இருக்கும். அத வேடிக்கை பார்க்கவே பெருங்கூட்டம் கூடும். காளி வந்து ஒரு முழி மூழிக்கிற வரைக்கும் இந்த வெளையாட்டு தொடரும். காளி இல்லாத போது கருப்பசாமி அய்யாவின் ஆட்டமே கடையில் தூள் பறக்கும். பிறகென்ன கலை மனதை கை கொண்டா தடுக்க முடியும். யாரும் பார்க்காத போது கருப்பசாமியின் அய்யாவும் அவனும் வடைகளை தூக்கிப் போட்டு விளையாடுவது மட்டும் ஒருபோதும் நிற்கவேயில்லை.
இது கிராமப்புறத்து துடிப்பான மனிதனின் கதைபோல தோற்றமளிக்கும். இது மட்டுமல்ல கதை. பொருளியல் ரீதியாக வரவற்ற எந்தச் செயல்பாட்டின் மீதும் பொதுமைச் சமூகத்திற்கு எந்த மரியாதையுமில்லை. அவர்களை உதாசீனப்படுத்துவதில் மூர்க்கமாகி விடுகிறார்கள் குடும்பத்தார்.. கலைமனதை விலையாகக் கேட்கும் தினசரிகளை கடக்க முடியாது தடுமாறும் கலைஞர்களின் குறியீட்டு அடையாளம் கருப்பசாமியின் அய்யா..
-ம.மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/
3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/
6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/
7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/
8)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/
9)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-9/
10)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-10/
11)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-11/



