
ஜப்பானின் வடக்குப்பகுதியில் இன்று அதிகாலை 6,.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ மாகாணத்தில் இன்று (ஏப்ரல்27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்த பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக நில அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 20-ம் தேதி வடக்கு இவாட் மாகாணத்திற்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



