பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 13… குடந்தை கீதப்பிரியன்

மதுரை கோ.புதூரில் மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு காலத்தில் நாடகம், பாட்டுக்கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதூரில் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி (ஐ,.டி.ஐ) எதிரே உள்ள வாசல் வழியே உள்ளே சென்றால் மின்வாரிய தலைமை அலுவலகத்தின் மேடை இருந்தது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த நாடங்களில் அங்கு பணிபுரிந்த தர்மலிங்கம் என்ற தொழிலாளி நடித்தார். சமூக நாடகமானாலும், சரித்திர நாடகமானாலும் அதில் அவர் தான் பிரதான வேடம் ஏற்று நடித்தார். ஓய்வு பெறும் வயதில் இருந்தாலும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் உள்ளிட்ட நாடங்களில் அவர் நடிக்கும் போது கம்பீரமாக காட்சி தருவார். உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், கோ.புதூரில் நான் வசித்த தேசிய விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். நாடகம் நடக்கும் அன்று தெருவில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பார்.

அப்போது பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் கிடையாது. எனவே, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பழகாத மக்கள் முதல் முதலாக தர்மலிங்கத்தின் நாடகம் பார்க்கச் சென்றனர். கூட்டம் அலைமோதியதைப் பார்த்த அங்கிருந்த சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் நாடகம் மட்டுமின்றி பாட்டுக் கச்சேரியையும் நடத்த ஆரம்பித்தனர். அப்போது மதுரையில் எத்தனையோ இன்னிசைக்குழுக்கள் இருந்தன. ஆனால், புதூரில் வைகை இன்னிசைக்குழு என்ற குழு மட்டும் இருந்தது. இந்த குழு மின்வாரிய அலுவலகத்தில் ஆண்டு தோறும் நிகழ்ச்சி நடத்தியது. அதில் டிரம்ஸ் வாசிக்கும் பாண்டி அற்புதமான இசைக்கலைஞராக இருந்தார். இப்போது போல அப்போது எக்கோ இல்லை. பாடகர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை வாய்ஸ் கொடுத்தால் எக்கோ எபெக்ட் இருக்கும். அப்படி நான் முதன் முதலாகக் கேட்ட எக்கோ பாடல், இசையால் வசமாகா இதயமெது?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 10, 000 பாடல்களுக்கு மேல் பாடிய பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜன், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு நடிகரின் சாயலிலும் அப்படியே பாடக்கூடிய அற்புத திறமை படைத்த டி.எம்.சௌந்தரராஜன் மிகக்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கு அவர் பாடிய பக்திப் பாடல்களைக் கேட்டால் உணர முடியும். இசைநிகழ்ச்சியின் துவக்கமாக குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை பாடலின் துவக்க இசையோடு திரை விலகியது.. அதனைத் தொடர்ந்து முதல் பாடலாக இசையால் வசமாகா இதயமெது பாடலை வைகை இன்னிசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் பாடினார்.

ஆ ஆ ஆஆ ஆ… ஆ ஆ…
ஆ ஆ.. ஆஆ ஆ ஆ ஆ… என்ற ஹம்மிங்கோடு ஆரம்பிப்பார்.

இசையால் வசமாகா இதயமெது
இசையால் வசமாகா இதயமெது எது எது என்று எக்கோ கொடுத்து விட்டு

இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ்
இசையால் வசமாகா இதயமெது

திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது..
எனும்…இசையால் வசமாகா இதயமெது…

அவர் பாடி முடித்தவுடன் கைதட்டல் ஓய நேரமாகும். எனவே,. அந்த குழுவின் முதல் பாடலாக இந்த பாடல் தான் நீண்ட நாட்களாக இருந்தது. டிஎம்எஸ் பாடி இசையமைத்த இந்த பாடல் ஆன்மீகம் என்பதை தாண்டி தத்துவம் பொதிந்திருக்கும். இசையால் வசமாகா இதயம் எது என்ற கேள்விக்கு இறைவனே இசைவடிவம் என்ற பதில் தத்துவம் நிறைந்ததாகும்.

இந்த பாடலை எழுதியவர் குடந்தை கீதப்பிரியன். தமிழில் வெளிவந்த அடர்த்தி மிகுந்த கருத்துகளைக் கொண்ட சுபமங்களா இதழில் உதவி ஆசிரியராக இருந்தவர். கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த போது அந்த இதழில் கீதப்பிரியன் ஆற்றிய பங்கு நினைவு கொள்ளத் தக்கது. தமிழின் மூத்த கவிஞர், தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கீதப்பிரியன் எழுத்தாளர் மட்டுமின்றி ஒரு திரையிசை கவிஞர் என்றால் நம்ப முடிகிறதா?

1974-ம் ஆண்டு வி.டி.அரசு இயக்கத்தில் வெளியான டைகர் தாத்தாச்சாரி படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் கே.வீரமணி பாடிய

ஏழுமலைவாசா வெங்கடேசா
ஏழுமலைவாசா வெங்கடேசா
அன்பர் இதயம்தனில் வாழும்
ஸ்ரீனிவாசா அருள்வாய்..

என்ற பாடல், கீதப்பிரியன் எழுதியது தான்.1975-ம் ஆண்டு சிவகுமார், கமல்ஹாசன்,ஜெயசுதா, குமாரி’ லாரன்ஸ் பொர்டலெ உள்பட பலர் நடித்த மேல்நாட்டு மருமகள் படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியானது. குன்னகுடி வைத்தியநாதன் இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம், டி.கே.கலா இணைந்து

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே
பலகோடி நூறாயிரம் நன்மையெல்லாம் அடைந்து
பலகோடி நூறாயிரம் நன்மையெல்லாம் அடைந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே…..

என்ற பாடல் சங்கீத கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை தரும். இந்த பாடலை எழுதியவரும் குடந்தை கீதப்பிரியன் தான்.

பத்திரிகையாளராக இருந்து தமிழ் சினிமாவில் மிகுந்த வரவேற்பு மிக்க கவிஞராக திகழ்ந்தவர் எம்.ஜி.வல்லபன். இசைஞானி இசையராஜா இசையில் ஏராளமான பாடல்களை எழுதிய அவர், தைப்பொங்கல் என்ற படத்தையும் இயக்கினார். மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான், தீர்த்தக் கரைதனிலே, ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி, என்னோடு பாட்டுப் பாடுங்கள், மெல்ல மெல்ல என்னைத் தொட்டு, பூமேலே வீசும் பூங்காற்றே, நாலு வகை பூவில் மலர்க்கோட்டை, கண்மலர்களின் அழைப்பிதழ்,
இசைக்கவோ நம் கல்யாணராகம் போன்ற அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார். அவரைப் போன்ற பத்திரிகையாளரான குடந்தை கீதப்பிரியனுக்கு திரைத்துறையில் போதிய வாய்ப்பு கிட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால், பக்தியிசை உலகில் கீதப்பிரியன் தொட்டதெல்லாம் துலங்கியதென்றே சொல்ல வேண்டும். அவர் பாடல் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த அம்மன் கோயிலிலும் திருவிழா இப்போதும் நடப்பதில்லை. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் பக்தி பாடல் என்றவுடன் குன்னகுடி வைத்தியநாதன் இசைக்குழு நடத்தும் வித்தையில் கேட்போர் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

வரமளித்தது உலகமெல்லாம்
வாழ வைக்க வந்தவளே
கரம் குவித்து வேண்டுகின்றோம்
காத்திடுவாய் கருமாரி
காத்திடுவாய் கருமாரி…

என்று தொகையறாவை முடிப்பதற்குள் எல்.ஆர்.ஈஸ்வரி துவங்கி விடுவார்

மாரியம்மா எங்கள் மாரியம்மா
மாரியம்மா எங்கள் மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு
கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கோரும் வரம் யாவும் தந்திடுவாய் என்று
கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு
கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு…

இந்த பாடலின் வேகமான இசையும், வரிகளும் கேட்போரின் மனங்களில் கொண்டாட்ட மனநிலையை கொண்டு வரும். இந்த பாடலுக்கு சொந்தக்காரர் கீதப்பிரியன். முருகப்பெருமானின் அவதாரத்தை குறிக்கும் வகையில் கந்தன் கருணை படத்தில் திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய, ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான் என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகள், அன்னை பார்வதியால் ஆறுமுகன் என்ற ஒரே திருவுருவமாக தோன்றுவது போல இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதே ஆறு குழந்தைகளை வைத்து கீதப்பிரியன் எழுதிய தமிழ் மணக்கும் ஒரு புகழ்பெற்ற பாடல் உள்ளது. இசைமணி சீர்காழி கோவிந்தராஜனின். அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கப்பட்ட தமிழின் செழுமையை இந்த பாடல் முழுவதும் கேட்கலாம்.

தாமரை மலர்கள் ஆறு
அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ..று
தாமரை மலர்கள் ஆ……று
அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ…று
அன்னை ஆவல் கொண்டார தழுவியபோது
குழந்தைக்கு முகங்கள் ஆ..று
அன்னை ஆவல் கொண்டார தழுவியபோது
குழந்தைக்கு முகங்கள் ஆறு…

ஆறுமுகன் அவன் பே..ரு
ஆறுமுகன் அவன் பே..ரு பாரில்
அழகில் அவனுக்கிணை யாரு
ஆறுமுகன் அவன் பே….ரு பாரில்
அழகில் அவனுக்கிணை யாரு
நீ அன்பு கொண்டே உன் துன்பங்கள் தீர
அன்பு கொண்டே உன் துன்பங்கள் தீர
அனுதினம் அவன் பெயர் கூறு
தாமரை மலர்கள் ஆ..று
அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆ…..று

ஆறு, பேரு, யாரு, கூறு என்ற வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிக்குள் சீர்காழி காட்டும் பாவம் தான் இந்த பாடலின் வெற்றி என்றே கூறலாம். இந்த பாடலை எழுதியும் கீதப்பிரியன் தான். மதுரையில் சில செய்தியாளர்களை அலைபேசியில் அழைத்தால் பக்திப் பாடல்களை டோனாக வைத்திருப்பார்கள். அதில் அரிதாக ஒரு பாடல் உண்டு.

அந்த பாடல், டி.ஆர்.பாப்பா இசையில் கீதப்பிரியன் வரிகளில் உருவானது என்ற வரலாறு அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சீர்காழியின் குரலில் அந்த பாடலைக் கேட்டால் மனதில் நம்பிக்கை பிறக்கும்.

உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா…
என் வாழ்வு வளம்கான கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா…

அழகன் என்று அழைக்கப்படும் முருகனை நினைத்து கீதப்பிரியன் எழுதிய பாடல்களின் பட்டியல் நீண்டது. முருகனின் வாழ்க்கையை கவித்துவமாக எழுதிய கவிஞர்களில் கீதப்பிரியன் முக்கியமானவராக கருதுகிறேன். அழகுணர்வு மிகுந்த வரிகளும், அதற்கு அவர் இலக்கியங்களில் இருந்து எடுத்தாளும் வரிகளும் பாடலின் வீச்சை பன்மடங்கு உயர்த்துகிறது. டி.ஏ.கல்யாணம் இசையில் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா…
நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
சேவற்கொடி அழகாய் தாங்கி
நிற்கும் சண்முகா…

வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே
எழில் வேழ முகம் படைத்தோன் சோதரனே…
சேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே!
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா..

என்ற பாடல் சங்க இலக்கியத்தை நினைவூட்டுகிறது. வள்ளியின் விழியை சேல் என்கிறார் கவிஞர். சங்க இலக்கியத்தில் சேல் என்றால் கெண்டே மீன் என்று கூறப்படுகிறது. ஒரு பக்திப் பாடலுக்குள் சங்க இலக்கியத்தை பொருத்தப்பாட்டுடன் இணைக்க முடியும் என்பதற்கு கீதப்பிரியனின் இந்த பாடல் சான்று. மருதமலை மாமணியே பாடல் புகழ், மதுரை சோமசுந்தரம் (சோமு) அவர்களின் குரலில் இருக்கும் கம்பீரமும், ராக ஆலாபனையும் கேட்போரை கிறங்க வைக்கும். ராகேஸ்வரி ராகத்தில் அவர் பாடிய நினைக்காத நேரமில்லை முருகா என்ற அற்புதமான பாடலை கீதப்பிரியன் தான் எழுதினார்.

எங்கே தேடுவேன் என்ற வரிகளைக் கேட்டவுடன் கலைவாணர் என்.என்.கிருஷ்ணன் பணம் படத்தில் பாடிய எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் என்ற வரிகள் நினைவிற்கு வரும். ஆனால், சீர்காழி கோவிந்தராஜனின் எங்கெல்லாம் தேடுவதோ என்ற வரிகளைக் கேட்கும் போது இது பக்தி பாடலா, தத்துவப் பாடலா என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.

எங்கெல்லாம் தேடுவதோ? முருகா!
எங்கெல்லாம் தேடுவதோ? முருகா!
எழில்மேவும் குமரா உன்
அருள் வேண்டி தினமும் நான்
எழில்மேவும் குமரா உன்
அருள் வேண்டி தினமும் நான்
எங்கெல்லாம் தேடுவதோ?

கீதப்பிரியன் எழுதிய இந்த பாடல், தைப்பூச நாட்களில் அறுபடை வீடுகளில் ஒலிக்கும் முக்கிய பாடலாக உள்ளது. டி,.ஆர்.பாப்பா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கோலவிழித்தாயே. விழிக்கே அருளுண்டு, கடைக்கண் பார்வை, தவக்கோலம், மருவத்தூரில் வாழும், வண்ணத்தமிழ் தலைவன், பாடிப்பணிந்திடும், ஆறுபடை வீடு, நீல வண்ண, எல்லா நலன்களும், நாயகனைப் பணிந்தால் ஆகிய பாடல்கள் கீதப்பிரியனின் கற்பனையில் உருவானவை தான்.

மேலும் சீர்காழி பாடிய தீராத வினை தீர்க்கும், மலை மீதினிலே காணலாம், மலைகளெல்லாம் காணும் போது. இசைஞானம் எனக்களித்த நாள்முதலாய். சரவணபவ குக எனப்பாடு. வந்தனை செய்து, ஆதாரம் என்றும் நீதான், முருகன் திருமால் மருகன், தீராத வினை தீர்க்கும் ஆகிய பாடல்களை எழுதியும் குடந்தை கீதப்பிரியன் தான். டி.எம்.சௌந்தரராஜன் பாடிய கற்பகமே உனையன்றி துணை யாரம்மா, எந்தவினை ஆனாலும், பாற்கடலில் பாம்பணை மேல் துயிலும், மனம் கனிந்தே, ஆண்டவன் அருள், அன்புக்கு பரிசாக உள்ளிட்ட பல பாடல்களை கீதப்பிரியன் எழுதியுள்ளார். டி.கே.புகழேந்தி, டி.பி.ராமச்சந்திரன், கே.வீரமணி- கே.சோமு ஆகியோரின் இசையில் எண்ணற்ற பக்திப் பாடல்களை கீதப்பிரியன் எழுதியுள்ளார். இத்தனைப் பாடல்களை எழுதிய குடந்தை கீதப்பிரியனின் முகம் அறிய புகைப்படத்தைத் தேடிக் களைத்துப் போனேன்.
ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

இப்போதே பகிருங்கள்

2 Comments

  1. காலத்தால் அழியாத பக்திப் பாவலருக்குக் கிடைத்த எழுத்துச் சமர்ப்பணம்!
    திரு. கவிதா குமார் அவர்களுக்கு, நீங்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது தமிழ் பக்தியிசை உலகின் ஒரு பொற்காலத்திற்குள் எங்களை அழைத்துச் சென்ற கால இயந்திரம்!
    ஒரு காலத்தில் மதுரை கோ.புதூர் மின் வாரிய அலுவலகத் திடலில் நடந்த நாடகங்களையும், வைகை இன்னிசைக்குழுவின் பாடல்களையும் நீங்கள் அசைபோட்ட விதம்… வாசிப்பவர்களையும் அந்தப் பழைய மதுரைக்கே அழைத்துச் சென்றுவிட்டது.
    எத்தனையோ அம்மன் கோயில் திருவிழாக்களிலும், தைப்பூசக் காவடி ஆட்டங்களிலும் நாம் கேட்டு உருகிய, ஆடிய பாடல்களுக்குச் சொந்தக்காரரான ‘குடந்தை கீதப்பிரியன்’ என்ற மாபெரும் கவிஞரை, இன்றைய தலைமுறைக்கு மிக நேர்த்தியாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். ‘சேல் விழி’ போன்ற சங்க இலக்கியப் பயன்பாடுகளைப் பக்திப் பாடல்களில் அவர் கையாண்ட விதத்தை நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது, உங்கள் ஆழ்ந்த இலக்கியப் புலமையையும், கூர்மையான கவனிப்பையும் காட்டுகிறது.
    இத்தனைப் பாடல்களை எழுதிய குடந்தை கீதப்பிரியனின் முகம் அறிய புகைப்படத்தைத் தேடிக் களைத்துப் போனேன் என்று நீங்கள் கட்டுரையை முடித்திருக்கும் இடம், திரைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான கலைஞர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற நிதர்சனத்தை நெஞ்சில் தைக்கும்படி உணர்த்துகிறது.
    டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி எனத் தமிழின் ஆகச்சிறந்த குரல்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் இருந்த அந்தப் பேனாவைத் தேடிக் கண்டுபிடித்து, அதற்குத் தொடுத்திருக்கும் இந்த ‘எழுத்து மாலை’ மிக அற்புதம். எக்கோ எஃபெக்ட் இல்லாத காலத்தில் பாடகர்கள் இருமுறை வாய்ஸ் கொடுத்த சுவாரசியமான தகவல் முதல் எம்.ஜி.வல்லபன் குறித்த ஒப்பீடு வரை கட்டுரை முழுவதும் தகவல்களின் சுரங்கம்.
    இசையையும் பக்தியையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டிய ஆவணம் இது. இப்படியொரு உன்னதமான பதிவைத் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! உங்கள் பேனா இன்னும் பல மறைக்கப்பட்ட ஆளுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரட்டும்!

    உங்கள் கட்டுரையின் பரம ரசிகன்/ கம்பம் விஜி.. தினமணி செய்தியாளர்

    • மிக்க நன்றி ஸார். ஒவ்வொரு வாரமும் நீங்கள் தரும் உற்சாகம், கட்டுரைக்காக உழைத்த களைப்பை போக்கி விடுகிறது. திரைப்பட பாடலாசிரியர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், பக்திப்பாடல்கள் எழுதும் கவிஞர்களுக்கு கிடைப்பதில்லை. இதில் சிலர் மட்டும் திரைப்பட பாடல்களை எழுதியுள்ளனர். ஆனால், பலர் திரைத்துறை பக்கமே திரும்பாதவர்கள். சிலர் ஒன்றிரண்டு படங்களோடு தொலைந்து போனவர்கள். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சி தான் இந்த பக்தியை பரப்பிய பாவலர்கள் தொடர். இன்னும் தெரியாத முகங்கள் தெரிய வைக்கும் என் முயற்சி தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *