
ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர். இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன், இசைத்தமிழ் டி.ஆர்.மகாலிங்கம், இசைமுரசு நாகூர் ஹனிபா, இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், இசைத்தென்றல் ஏ.எம்.ராஜா, தென்னக சார்லி சாப்ளின் ஜே.பி.சந்திரபாபு ஆகிய அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தமிழ் திரையிசைத் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளாக விளங்கிய இவர்கள் அனைவரின் குரலும் தனித்துவம் வாய்ந்தவை. ஐகான் என்று சொல்லக்கூடிய அடையாளம் என்பது தான் இவர்கள் அனைவருக்குமான ஒற்றுமை. இவர்கள் ஒவ்வொருவரின் குரலிலும் இருக்கும் தனித்தன்மை காலம் நமக்கு அளித்த கொடை. இவர்களைப் போல பலர் பாட முயன்றுள்ளார். ஆனால், உண்மையின் முன் எந்த நகலும் எடுபடவில்லை.
இது போலத்தான் பக்தியிசையில் ஒருவரின் குரல் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால், இவரின் குரல் எனக்கு அறிமுகமானது காங்கிரஸ் மன்றத்தில் இருந்து தான். இந்த மன்றத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்ட நிறைய பாடல்களை ஐந்து வயதில் இருந்தே கேட்டிருக்கிறேன் தென்பாண்டி நாட்டினை எண்ணி ஆடுங்கள் தோழியரே, செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க, நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தார், காந்தி அண்ணல் காவியத்தின் கவிதையான காமராஜ், மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா என காமராஜர் புகழ்பாடும் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அந்த மன்றத்தின் எதிரே தான் கம்யூனிஸ்ட் மன்றம் இருந்தது. காங்கிரஸ் மன்றத்தில் ஒலித்த ஒரு பாடலின் குரல் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது.
அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
அன்பு வடிவான தலைவா.
எங்கள் காமராஜ் என்ற தலைவா
என்ற தொகையறாவிற்குப் பின்
உன்னைப்போல் தலைவருண்டோ
உழைப்பாலே உயர்ந்தவரே
உன்னைப்போல் தலைவருண்டோ
உழைப்பாலே உயர்ந்தவரே
அன்னை சிவகாமி பெற்ற
ஆசியாவின் திருவிளக்கே.
அன்னை சிவகாமி பெற்ற
ஆசியாவின் திருவிளக்கே
உன்னைப்போல் தலைவருண்டோ
உழைப்பாலே உயர்ந்தவரே..
என்று கர்மவீரர் காமராஜர் புகழ்பாடி அந்த வித்தியாசமான குரல் ஒலிக்கும். அதே குரலில்
சங்கே முழங்கு சங்கே முழங்கு
காமராஜர் புகழ் ஓங்க சங்கே முழங்கு…
என்ற பாடலையும் கேட்டேன். ஒன்றாம் வகுப்பில் நான் படித்த ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் காலை பிரேயர்களில் இதே குரலைக் கேட்டிருக்கிறேன்.
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்…
என்று அந்த குரல் தான் உன்னைப்போல், சங்கே முழங்கு ஆகிய பாடல்களின் குரலா என்று சந்தேகம். என் அப்பாவிடம் காங்கிரஸ் மன்றத்தில் ஒலித்த பாடல்களையும், பள்ளியில் ஒலித்த பாடலையும் சொல்லி யார் பாடியது என்றேன். அந்தப் பாடல்களைப் பாடியவர் டேப் ராதாமாணிக்கம் என்றார். சட்டென படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய தரைமேல் பிறக்க வைத்தான் பாடலும், அவர் வாசித்த டேப்பும் ஞாபகத்திற்கு வந்துது. டேப் ராதாமாணிக்கத்தின் பாடல்கள், என் பதிம வயது வரை கேட்டுக் கொண்டேயிருந்தேன். லூர்தன்னை திருத்தலம் மட்டுமின்றி கிறிஸ்துமஸ் விழாக்களில் இந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

கிறிஸ்தவ மக்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளன. ராதா மாணிக்கம் பாடிய பாடல்கள் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளாக 1970 காலங்களில் வெளியாகி விற்பனையில் பெரும் புரட்சி செய்தவை. ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதிய கவிஞராக அறியப்பட்ட ராதா மாணிக்கம், தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலை எழுதியவர் என்றால் நம்ப முடிகிறதா?
1964-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்டு கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் உருவான படம் பூம்புகார். ப.நீலகண்டன் இயக்கிய இப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் அற்புதமான காதல் பாடலை ராதா மாணிக்கம் எழுதியுள்ளார். டி.எம்.சௌந்தரராஜன், எஸ். ஜானகி பாடிய என்னை முதல் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய் பாடல் மெகா ஹிட் பாடல் அவர் எழுதியது தான். காதல் ரசம் சொட்டும் பாடலை எழுதிய ராதா மாணிக்கத்திற்கு அதன் பின் பெரிதாக வாய்ப்பு திரைத்துறையில் கிடைக்கவில்லை. இதன் பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜர் புகழ் பாடி பல பாடல்களை ராதா மாணிக்கம் எழுதினார். ஆனாலும், அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.
இந்த நிலையில், ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற முதல் பக்திப் பாடலை எழுதி அவரே பாடினார். 6.30 நிமிடங்கள் அந்தக் காலத்து அரக்கு ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டது. முதல் பாடலே கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் அற்புத பாடலாக அவருக்கு அமைந்தது. குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியாளர் எம்.முத்து இசையமைத்த இந்த பாடலுக்குப் பின் ராதா மாணிக்கம், தன் பாட்டுப் பயணத்தை கிறிஸ்தவத்திற்காக அர்ப்பணித்தார். சிறந்த இசைஞானம் கொண்ட ராதா மாணிக்கம், டேப் அடித்து கிறிஸ்தவ கூட்டங்களில் தான் இயற்றிய பாடல்களைப் பாட ஆரம்பித்தார். தூத்துக்குடியில் துவங்கிய அவரது இசைப்பயணம் தமிழகம் முழுவதும் பயணப்பட்டது.
1967-ம் ஆண்டு அவர் எழுதிய இசையமைத்து பாடிய பாடல்,
இயேசுவை விசுவாசி
நீ என்றைக்கும் சுகவாசி
அவர் நாமத்தை நீ நேசி
அவர் பொதுநல பரதேசி…
பாடல், இன்றளவும் புதிய புதிய இசைவடிவத்தில் வெளியிடப்படுகிறது. மிகச் சின்னச் சின்ன வரிகளைக் கொண்டு எளிமையான மொழியில் பாடல் புனைவதில் வல்லவரான ராதா மாணிக்கம், தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை பாடல் பாணியில் இசையமைத்து பாடிய பா
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
நீர் எம்மை மறப்பதில்லை
இயேசுவே நீர் எம்மை மறப்பதில்லை…
பாடல் கேட்போரை மெய் மறக்க வைக்கும். அவர் இயற்றி பாடிய பாடல்களில் பாடலுக்கு முன் தொகையறாவுடன் துவங்குவதை அவர் தனிப்பாணியாக கடை பிடித்துள்ளார். அப்படி ஒரு புகழ்பெற்ற ஒரு பாடல் ஆசியாவின் மேற்கே தான் யூதே நாடு என்ற தொகையறாவுடன் துவங்கும்.
ஏசு சொன்ன பொன்மொழி தான் உயிர்நாடி
இதை ஏற்றுக் கொண்ட இதயங்களோ பல கோடி
உலகில் பல கோடி …
என்று அவர் பாடும் போது கேட்போரும் பாடுவார்கள். பக்தி இசை உலகில் தனக்கென தனிபாணியை அமைத்துக் கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரி, ராதா மாணிக்கத்துடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனித்துப் பாடிய
ஏசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவரை இதயத்தோடு
கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே…
என்ற இந்த பாடல் ராதா மாணிக்கம் எழுதியது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ராதா மாணிக்கம் இணைந்து பாடிய
ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவன் தோன்றிவிட்டார் – இயேசு
ஆண்டவன் தோன்றிவிட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றிவிட்டார் – நம்
கர்த்தர் தோன்றிவிட்டார்…’
என்ற பாடல் மிக வேகமாக தாளக்கட்டுடன் இசையமைக்கப்பட்டது. இந்த பாடலும் ராதா மாணிக்கம் எழுதியது தான்.
1972-ம் ஆண்டு இசையமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இசையில் டேப் ராதா மாணிக்கம் எழுதிய இந்த பாடலை அவருடன் இணைந்து பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. ஹைபிட்சில் எல்.ஆர்.ஈஸ்வரி
ஆழ்ந்த சேற்றினில்
அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே…
என்று தொடங்குவார்.
அலை கடல் நடுவே
தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே
இயேசு ஆறுதல் அளிப்பாரே…
என்று பதிலளிப்பது ராதாமாணிக்கம் அவர் பாணியில் பாடுவார். டி.ஏ.கல்யாணம் இசையில் டேப் ராதாமாணிக்கம் எழுதி எல்.ஆர்.ஈஸ்வரி தனித்துப் பாடிய
இயேசுவைத் துதியுங்கள் என்றும்
இயேசுவைத் துதியுங்கள் –
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள்…
ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரைத் துதியுங்கள்
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவைத் துதியுங்கள்…
என்ற பாடல் திருச்சபைகளில் இன்றும் பாடப்படுகிறது.
எளிய இசை வடிவத்தில் ஆனால், கேட்போரின் இதயத்தில் நங்கூரம் பாய்ச்சும் வகையில் வார்த்தைகளை வைத்து பாடல் எழுதுவதில் டேப் ராதாமாணிக்கம் புகழ் பெற்றவராக இருந்துள்ளார். அதற்கு இந்தப் பாடலை உதாரணமாகச் சொல்லலாம். அவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியுள்ளார். இந்த புகழ் பெற்ற பாடலுக்கு எம்.முத்து இசை மீட்டியுள்ளார்.
ஏழைக்குப் பங்காளனாம்
பாவிக்கு இரட்சகராம்
ஏசு என்னும் திருமகனாம்
மரியாள் வளர்த்த மைந்தன்
மனித தெய்வம் அவதரித்தார்
மாடுகட்டும் தொழுவத்திலே
மாணிக்கம் பிறந்ததம்மா…
டேப் அடித்துக்கொண்டு கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்கள், கிறிஸ்வத ஆலயங்களில் பாடிய டேப் ராதாமாணிக்கத்தின் கற்பனை அலாதியானது. ஒரு பாடலில் இப்படி எழுதியுள்ளார்.
அந்தி வானம் சிவக்குதம்மா
அல்லி மலர் சிரிக்குதம்மா
ஆண்டவராம் இயேசு பிரான்
அன்பு மணம் மணக்குதம்மா…
முள்முடி சூட்டி வந்த
முதல் தலைவன் இயேசுவுக்கு
கல்வாரி சிலுவையிலே
காயம் பட வைத்தனரே…’
நல்ல கற்பனை வளம் கொண்ட டேப் ராதாமாணிக்கம் இயேசுவின் ஆலய மணி ஓசை கேட்டு, காவியம் போற்றுகின்ற உள்பட பல பாடல்களை எழுதியுள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய பாடல்கள், இன்றளவும் இறைமக்களால் நேசிக்கப்படுகிறது.
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/
6) https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/
7)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/
8)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-7/




கவிதா, வாராவாரம் தொடரில் புதுப்புது தகவல்கள் தந்து திகைக்க வைக்கிறீர்கள் அருமை.
இந்தத் தொடருடன் இணையாக கட்சிப் பாடல்கள் எழுதி கவிஞர்கள் பற்றியும் எழுத வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள்.
நன்றி தோழர். கட்சி பாடல்களைத் தொகுத்து கொண்டிருக்கிறேன் அது ஒரு தனிப்புத்தகமாக கொண்டு வரலாம் என்று நினைத்துள்ளேன்.
ஆஹா! ஆஹா! உன்னைப் போல் தலைவர்…, சங்கே முழங்கு… இரண்டும் அம்மா பாடிய தாலாட்டுப் பாடல்கள் போல இப்போது மனதில் உள்ளன. ஆனால் அவை ராதா மாணிக்கம் பாடிய பாடல்கள் என்பதை இப்போதுதான் அறிகிறேன். அவற்றை பிரபலமான வேறு ஒரு பாடகர் பாடியது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கிறித்தவப் பாடல்கள் எழுதியவர்கள், பாடியவர்கள், இசை அமைத்தவர்கள் பற்றி அறிய அறிய பெரும் வியப்பு ஏற்படுகிறது. சீர்காழி, எஸ் பீ பீ, டி எம் எஸ் என்று மிகபலரும் பாடி இருக்கிறார்கள். எழுதிய கவிஞர்களின் பெயர்கள்தான் வெளியில் தெரியாமல் போகிறது. அந்த வகையில் இலங்கை வானொலி ஒளிபரப்பிய பாடல்கள்தான் நமக்கு அந்த வயதில் அரிய பல பாடல்களை அறிமுகம் செய்து வைத்தன. உன்னை முதல் முதலாக … அது ராதா மாணிக்கம் எழுதியதா!!! அரிய தகவல்! தொடர்க
மிக்க மகிழ்ச்சி தோழர். நன்றி
அற்புதமான பதிவு! ‘
”பக்தியிசைப் பாவலர்கள் வரிசையில் ‘டேப் ராதா மாணிக்கம்’ அவர்களைப் பற்றிய இந்தக் கட்டுரை ஒரு காலப் பெட்டகத்தைத் திறந்து காட்டியது போன்ற உணர்வைத் தருகிறது. அரசியல் மேடைகளில் காமராஜரின் புகழைப் பாடிய ஒரு குரல், பின்னாளில் பக்தி இசையில் ஒரு சகாப்தமாக மாறிய வரலாற்றை மிக அழகாகத் தொகுத்துள்ளார் திரு. கவிதா குமார் அவர்கள். குறிப்பாக, ‘என்னை முதன் முதலாகப் பார்த்தபோது’ போன்ற மெல்லிசைப் பாடலை எழுதியவர் இவர்தான் என்ற தகவல் வியப்பளிக்க்கிறது. கேளுங்கள் தரப்படும்’ என்ற ஒற்றைப் பாடலின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் டேப் ராதா மாணிக்கம் அவர்களின் இசைப் பயணத்தை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தியுள்ளார். ஒரு கலைஞனின் பன்முகத்தன்மையை இவ்வளவு நுணுக்கமாகப் பதிவு செய்த திரு கவிதா குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!”பழைய நினைவுகளை மீட்டெடுத்த சிறந்த கட்டுரை!”
மிக்க நன்றி ஸார். திரைத்துறை பக்கம் டேப் ராதா மாணிக்கம் சென்றிருந்தால் கூட இவ்வளவு புகழ் பெற்றிருக்க முடியாது. கிறிஸ்தவ மக்களின் நெஞ்சங்களில் கேளுங்கள் தரப்படும் என்ற ஒரே பாடல் மூலம் தஞ்சமடைந்தவர்.