பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 9… எம்.கனக கிருஷ்ணன்

சிறுவயதில் இருந்தே கூட்டமென்றால் அலர்ஜி. சித்திரைத் திருவிழாவில் மூச்சு கூட முடியாத அளவிற்கு கூட்டம் வந்த காலம் உண்டு. ஆனால், இப்போதெல்லாம் தொலைக்காட்சி நேரலைகளில் கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காணும் கூட்டம் அதிகமாகி விட்டது. இதனால் கூட்டம் குறைந்துள்ளது. மதுரை அழகர்கோவில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மூன்றுமாவடியில் வந்து தங்குவார்.

அங்கு ராமியா, புளியடி, திம்மா. மசூதி என்ற பெயரில் உள்ள கல் கட்டிடத்தில் தான் எதிர்சேவை நடக்கும். அப்போது அப்பகுதியில் குண்டூசி விழுகக்கூட இடமிருக்காது. அந்த கல் மண்டபத்தைச் சுற்றி மிகப்பெரிய தோப்பு இருந்தது. எதிர்சேவையன்று எங்கிருந்து இவ்வளவு பேர் வருகிறார்கள் என்பது போல கூட்டம், கூட்டம். புதூரில் எங்கள் வீட்டைத் தாண்டித்தான் அழகர் செல்ல வேண்டும். எனவே, கூட்டம் இல்லாத இடங்களில் இருந்தே அழகரை இப்போது வரை பார்த்து வருகிறேன்.

இந்த சித்திரை திருவிழா எதிர்சேவையன்று தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் ஒரு பாடல் ஒலித்தது.

சித்திரை தேரோடும் மதுரையிலே
ஒரு பத்தரை மாத்து தங்கம் இருக்குதம்மா…
இக்கரை மீதினிலே கண்கண்ட தேவியம்மா
முத்திரை பேராகும் மீனாட்சி தெய்வமம்மா
அன்னையாம் மீனாட்சி கருணையும் நிறைந்திருக்கும்…

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல். இந்த பாடலுக்கு இருபது இளைஞர்கள் நடுரோட்டில் கைகளைக் கோர்த்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர். அதில் சிலரிடம் அலாரம் போல ஊதி இருந்தது. அதை ஊதிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தனர். அந்த சத்தத்தைப் பொறுக்க முடியாமல் பக்தர்கள் காதை மூடிக்கொண்டு அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தனர். மதுரையின் பெருமையைப் போற்றி எத்தனையோ பாடல்கள் உள்ளன. பாகப்பிரிவினை படத்தில் இடம் பெற்ற

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே

பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சுமார் 7 நிமிடங்கள் வரை ஒலிக்கும் இந்த பாடலின் இசையும் மெட்டும் இன்றளவும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்து மதுரையின் பெருமையைச் சொல்லும் பாடல் என்றால்,

சித்திரை தேரோடும் மதுரையிலே
ஒரு பத்தரை மாத்து தங்கம் இருக்குதம்மா…

பாடல் தான். இந்த பாடலைக் கேட்டதும், 45 ஆண்டுகளுக்குப் பின் காலம் என்னை இழுத்துச் சென்று விட்டது. மதுரை கோ,புதூர் ஆத்திகுளத்தில் இருந்த டூரிங் தியேட்டரில் டிக்கெட் கொடுத்தவுடன் மதுரை சோமு பாடிய, மருதமலை மாமணியே வேலய்யா பாடல் ஒலிக்கும். படத்தின் இடைவேளையின் போது சித்திரை தேரோடும் மதுரையிலே பாடல் ஒலிக்கும்.

இந்த பாடல் முடிவதற்குள் கடலை மிட்டாய், முறுக்கு விற்பனை களைகட்டும். பெரிய அலுமினிய தட்டில் காண்டா விளக்கு, கட்டு கட்டாக கடலை மிட்டாய், குவியல் குவியலாக முறுக்கு, மின்சாரம் போனால், அலுமினிய தட்டில் இருக்கும் காண்டா விளக்கு உயிர் பெற்று விடும். ஆற்று மணலை குவித்து வைத்து படம் பார்ப்பது அலாதி ஆனந்தம் என்றால், கடலை மிட்டாய், முறுக்கு நொறுக்கு தீனியைக் கொரித்துக் கொண்டே பழைய படங்களைப் பார்ப்பது இரட்டிப்பு ஆனந்தம். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், தேரோடும் எங்க பாடலை எதற்கு ஒலிபரப்பு செய்கிறார்கள் என்று நினைப்பேன்.

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இந்த பாடலை எழுதியவர் எம்.கனக கிருஷ்ணன். முருகன், விநாயகர், ஐயப்பன் பெருமையைப் போற்றும் வகையில் அற்புதமான பல பாடல்களை எழுதியுள்ளார்.

நாயகனைப் பாட
நான் என்ன தவம் செய்தேன்
விநாயகனைப் பாட
நான் என்ன தவம் செய்தேன்…

என சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடலை இவர் தான் எழுதினார். குன்னகுடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் புகழ்பெற்ற ஒரு பாடல்,

முருகனுக்கு ஒரு நாள் திருநாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…

கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்

என்ற பாடலை எழுதியவர் எம்.கனக கிருஷ்ணன் தான்.

திராவிடச் செல்வம் என்று போற்றப்பட்ட டி.எம்.சௌந்தரராஜன் ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார். இவர் பாடப்பாட தமிழ் மணக்கும். ஏனெனில் அவரது உச்சரிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். பக்தி பாடல்களில் அவர் காட்டும் பாவம் மெய்மறக்கச் செய்யும். எம். கனக கிருஷ்ணன் எழுதிய இந்த பாடலின் காலம், 50 ஆண்டுகளிருக்கும். ஆனால், இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது. காரணம் டி.எம்.சௌந்தரராஜன். அவர் இசையமைத்து பாடிய

முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…

பாடல், அறுபடை வீடுகளில் இன்றளவும் ஒலிக்கிறது.

இசையரசி பி.சுசீலா நிறைய பக்தி பாடல்களைப் பாடியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ஜெய ஜெய தேவி இசை ஆல்பத்தில் இடம் பெற்ற ஒரு முக்கிய பாடல்,

தேன் மணக்கும் தேவன் மலை
பால் மணக்கும் பாலன் மலை
பன்னீர் மணக்கும் பக்தர் மலை
அது பாலமுருகன் வாழும் பழநிமலை…

மிகச்சிறந்த இசையமைப்பாளரான குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்த பாடலில் பி.சுசீலாவின் குரலோடு இணைந்து வரும் புல்லாங்குழல் ,இசை பாடலின் சுவையைக் கூட்டும். இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் எம்.கனக கிருஷ்ணன் தான். இத்தனை பாடல்களை எழுதிய எம்.கனக கிருஷ்ணனின் வளமான மொழி வளம் காலம் கடந்தும் அவர் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது.
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)

1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/

2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/

3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/

4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/

5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/

6)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/

7)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/

8)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-7/

9)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-8/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *