பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 11… ஆபிரகாம் பண்டிதர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரை முடுவார்பட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்குப் போயிருந்தேன். போகும் வழியெங்கும் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலர் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்தவுடன் ‘ரியல் ராயல்’ அணி நினைவிற்கு வந்து விட்டது.

மதுரை கோ.புதூர் தேசிய விநாயகர் கோயில் தெருவில் வசித்த போது, நாங்கள் ஒரு கபடி அணியை உருவாக்கினோம். அதற்கான மைதானம் கட்டாந்தரை என்பதால், புதூர் கனரா வங்கி பின்புறத்தில் இருந்த வயல் பகுதியில் கிராதி வெட்டி எடுத்து வந்து கபடி மைதானத்தை பச்சை பசேலென மாற்றினோம். அன்றாடம் தண்ணீர் ஊற்றி பசுமையைப் பாதுகாத்து வந்தோம். அதில் கபடி விளையாடும் போது வால்ட் அடித்தாலும் அடிபடாது என்பதால் இந்த ஏற்பாடு.

மதுரை மாவட்ட கபடி அணியில் இடம் பெற்றிருந்த அப்துல் நாசர் தான் எங்கள் கோச்சர். ஆச்சரியம் என்னவென்றால், மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக இருந்த நாசர், நண்பர்களின் கோரிக்கையை ஏற்று கபடி வீரராக மாறி முத்திரை பதித்தார். முரட்டுத்தனமாக கபடி விளையாடுபவர்கள் மத்தியில்,. டெக்னிக்கல் வகையில் எப்படி விளையாடுவது எங்களுக்கு பயற்சியளித்த குரு அவர் தான். ஒவ்வொரு நாளும் மாலையாகி விட்டால், கபடி மைதானத்தை சுற்றி அவ்வளவு கூட்டம் கூடி விடும். நாங்கள் பயிற்சி எடுப்பதை பார்ப்பதுடன் எங்களை உற்சாகப்படுத்தும் எங்கள் அனைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அந்த பார்வையாளர்கள்.மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கபடி போட்டியில் வெற்றி பெற்று பரிசுகள் பெற ஆரம்பித்தோம்.

அந்த மைதானத்திற்கு எதிரே கணேசன் வீடு இருந்தது. கபடி விளையாடி களைத்தவுடன் அந்த வீட்டிற்குச் சென்று தான் தண்ணீர் குடிப்போம். நாங்கள் அந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம், அருமையான பாடல் ஒலிக்கும். கணேசனின் அக்கா தான் பாடிக்கொண்டிருப்பார். இசையரசி பி.சுசீலாவின் ரசிகை அவர். அவர் பெயரும் சுசீலா தான். ‘அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ’ பாடலை அவர் பாட ஆரம்பித்தவுடன் அங்கேயே அமர்ந்து விடுவேன். அவ்வளவு அட்சர சுத்தமாக சுசீலா அக்கா பாடுவார். சிறுவயதில் இருந்து பாடல்கள் கேட்டு வளர்ந்தவன் என்பதால், இசைபித்து என்னை பல இடங்களில் என்னைக் கட்டிப்போட்டு விடும். அப்படி ஒரு இடம் சுசீலா அக்கா வீடு.

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்..ஆ…
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

நிலவை வரச்சொல்லி சுசீலா அக்கா பாடுவதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவர் எனக்குத் தூரத்து உறவினர். என் அக்காக்களுடன் ரிசவர்லைன் மாரியம்மன் கோயிலுக்குச் செல்வார். அவருடைய தலையில் மெல்ல மெல்ல வெள்ளை முடி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.எத்தனையோ பேர் அவரை பெண் பார்த்தும் நீண்ட நாட்களாக திருமணம் நடக்கவில்லை. நீள நீள வெள்ளிக் கம்பிகளாய் மாறி விட்ட கூந்தலை சீவிக் கொண்டே சுசீலா அக்கா பாடிக்கொண்டிருந்தார். அத்துடன் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் போனார். திடீரென ஒருநாள் கிறிஸ்தவ மதத்திற்கு அவர் குடும்பம் மாறி விட்டது. இதன் பின் அவர் வீட்டிற்குச் செல்லும் போது கிறிஸ்தவ பாடல்களை டைரியில் எழுதி வைத்துப் பாடிக் கொண்டிருப்பார்.

தந்தானை துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே…
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக…

சேர்ந்திசை பாடலுக்குரிய மெட்டு என்றாலும் சுசீலா அக்கா குரலில் இந்த பாடலைக் கேட்பது ஒரு சந்தோஷம். களைத்துப் போயிருந்தாலும், பாடலைப் பாடும் போது எங்கிருந்து அவருக்கு இந்த தெம்பு வருகிறது எனத்தெரியாது. பாடகி ஜிக்கி பாடுவதற்கு முன்பே ‘தந்தானை துதிப்போமே’ பாடலைப் பாடியவர் பாரதி பால். 1935-ம் ஆண்டு பிறந்த பாரதி பால், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பாரதி பால்

இவரது தந்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தனது மகளுக்கு பாரதியின் பெயரை அவரது தந்தை சூட்டினார். இவர் பள்ளியில் படிக்கும் போதே வீணை, கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். 1960-ம் ஆண்டுகளில் பாடத் தொடங்கிய பாரதி பால், சுமார் 72 பாடல்களைப் பாடியுள்ளார். இன்றளவும் கிறிஸ்தவ குடும்பங்களில் பாடப்படும் திருமண பாடல்களின் முன்னோடி பாரதி பால் தான். அவர் பாடிய ஆதாரனைப் பாடல்கள் காலம் கடந்தும் கிறிஸ்தவ மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து இறை இசை வானொலி நிலையம் ‘கிறிஸ்தவ பாடலின் நைட்டிங்கேல்’ என்று பாரதி பாலுக்கு பட்டம் வழங்கியது

வே.மாசிலாமணி

அவர் பாடிய ‘தந்தானை துதிப்போமே’ பாடலை எழுதியவர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த நற்செய்தியாளர் வே.மாசிலாமணி. மதுரையில் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பை முடித்த வே.மாசிலாமணி திருக்கோவிலூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.

தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட வே.மாசிலாமணி, திருவண்ணாமலையில் போதகராக செயல்பட்டார். கர்நாடக இசையில் நாட்டம் கொண்ட வே.மாசிலாமணி, இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். திருவிழாக்களிலும், வாரச்சந்தையிலும் பாடல்களைப் பாடிக் கொண்டே நற்செய்திகளைக் கொண்டு சென்றவர். இவர் எழுதிய ‘தந்தானை துதிப்போமே’ பாடல் மட்டுமின்றி ‘ஒய்யாரத்துச் சீயோனே நீயும்’, ‘ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ’ பாடல்கள் புகழ்பெற்றவை. இசையமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இசையில் இப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

சுசீலா அக்கா ஒருநாள் தனது வீட்டினைச் சுற்றி அமர வைத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தார்.

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
கண்டேன் என் கண்குளிர

தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
கண்டேன் என் கண்குளிர…

இசைக்கருவி இல்லாமல் எப்படி இவரால் பாடல்களை பாடமுடிகிறது என்று நினைப்பேன். நான் படித்த ஆர்.சி.பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்ற போது இந்த பாடலைக் கேட்டுள்ளேன். அதன் பின் சுசீலா அக்கா குரலில் தான் கேட்டேன். இந்த பாடலை இயற்றியவர் இசைமேதை ஆபிரகாம் பண்டிதர். ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்த இவர், மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கியது.

தமிழ் மருத்துவத்தில் மட்டுமல்ல, தமிழிசையிலும் ஆபிரகாம் பண்டிதர் சிறந்து விளங்கினார்.தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்தசாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. புதுப்புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும், காற்றாலைகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1911-ல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர் பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.

இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்
எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்…

என்று அவர் எழுதிய கிறிஸ்துமஸ் பாடல், டி.ஏ.ஜி.துரைப்பாண்டியன் இசையில் தேவிகா ஜெயசிங் குரலில் பதிவு செய்யப்பட்டது. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ‘வரம் தரவே வா வா தேவா’ என்ற பாடல் மிகச்சிறந்த கர்நாடக இசையை அடிப்படையாக கொண்டது. தமிழ்நாட்டில் திருமண வீடுகளில் மணப்பெண்ணை வரவேற்க ‘பாசமலர்’ படத்தில் இடம் பெற்ற

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

பாடலை ஒலிக்கச் செய்வார்கள். ஆனால், அதே காலக்கட்டத்தில் கிறிஸ்தவ குடும்பங்களில் மணமக்களை வரவேற்க ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ஒரு பாடலைத்தான் ஒலிபரப்பு செய்துள்ளனர்.

ஸ்ரீமா தேவா
திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா

சுந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து
சந்ததமாய் ஏதேன் வாழ யாவும் கொடுத்து
சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து
தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே – ஸ்ரீ மா

மிக அழகாக மெட்டமைக்கப்பட்ட இந்த பாடல், கிறிஸ்தவ முறை திருமணங்களின் இன்றளவும் தவிர்க்க முடியாததாய் மாறியுள்ளது. இப்படி அற்புதமான பாடல்களை பல பாடல்களை ஆபிரகாம் பண்டிதர் எழுதியுள்ளார். கிறிஸ்தவ பக்திப் பாடல்களை எழுதிய மற்றொரு சிறந்த கவிஞர் ஞானமணி. இவர் எளிய வடிவத்தில் வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

எல்லாம் ஏசுவே
எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை
தொல்லைமிகும் இவ்வுலகில் துணை யேசுவை
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்…

என்ற ஜிக்கி குரலில் ஒலித்த இந்த பாடல் ஞானமணி எழுதியது. 1964-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் சிறுவனாக இருந்த போது புதூர் லூர்தன்னை திருத்தலத்தில் இப்பாடலைக் கேட்டுள்ளேன். ஏனென்றால் அங்கு தான் என் பள்ளியின் வகுப்பறை இருந்தது. ஒவ்வொரு நாளும் விதவிதமான பாடல்களைக் கேட்க எனக்கு வாய்ப்பு கிட்டியது. ராமஜெயம் எழுதுவது போல இயேசுவின் திருநாமத்தை வைத்து ஞானமணி அற்புதமான பாடலை எழுதியுள்ளார். சாம் ஜோசப் இசையில் பாரதி பால் பாடிய அந்த புகழ் பெற்ற பாடல்,

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்…
காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே…

இன்றளவும் இந்த பாடல் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் எளிய வரிகள் தான். என் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் சில நேரங்களில், ஒரு வார்த்தையை பாடிக்கொண்டே இருப்பார். ‘இவர் தான், இவர் தான்’ என்ற வார்த்தைகளைத் தவிர எனக்கு வேறு எதுவும் புரியாது. நீண்ட நாட்கள் கழித்து அந்த பாடல் ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல் என்பதை அறிந்து கொண்டேன். ‘இவர் தான்’ என்ற சொல்லை வைத்து இப்படி ஒரு பாடலை எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தது.

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர் -சமாதானம்

மிகச்சிறந்த இசைமெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த பாடலை எழுதியவர் கிறிஸ்தவ தமிழறிஞர் வேதநாயகம் சாஸ்திரியார். கிறிஸ்தவக் காப்பியமான ‘நோவாவின் கப்பல் பாட்டு’ எழுதிய பேரறிஞர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் மகனான நான்காவது சரபோஜியும் வேதநாயகம் சாஸ்திரியாருடன் கல்வி பயின்றவர். அத்துடன் அவரின் அரசவையில் புலவராக இருந்தவர்.

வேதநாயகம் சாஸ்திரியார்

திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியையும், தஞ்சாவூரில் உயர் கல்வியையும் கற்ற வேதநாயகம், தரங்கம்பாடியில் உள்ள இறையியல் கல்லூரியில் படித்தவர். இவர் எழுதிய முதல் நூல்பெத்லகேம் குறவஞ்சி. சைவ, வைணவ கதாகாலட்சபேங்களைக் கேட்டு கிறித்தவ சமயக் கருத்துகளை கதாகாலட்சேபமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். இவருடைய பாடல்கள் கர்நாடக இசையையும் தமிழக நாட்டாரிசையையும் இணைத்து உருவாக்கப்பட்டவை.

இன்றளவும் கிறிஸ்தவ ஆலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவ சமயக் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை வேதநாயகம் சாஸ்திரியால் பாடப்பட்டவை தான்.

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு…

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு

என்ற மங்கள வாழ்த்துப் பாடல் வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய பெத்லகேம் குறவஞ்சியில் இடம் பெற்றது தான். பிரபல பாடகி ஏ.பி.கோமளா குரலில் ஒலித்த இந்த பாடல், ஒலித்தட்டு விற்பனையில் மிகப்பெரிய சாதனையைப் புரிந்தது. ‘வேதாகம சிரோமணி மகாஞானக் கவிச்சக்கரவர்த்தியார்’ என்ற பட்டம் பெற்ற வேதநாயகம் சாஸ்திரியார், நானூறுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களையும், 133 நூல்களையும் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்து பிறந்ததையொட்டி அவர் எழுதிய

ஆதி திருவார்த்தை திவ்ய
அற்புத பாலனாக பிறந்தார்
ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரை யீடேற்றிட…

பாடல் ஜிக்கியின் குரலில் பதிவு செய்யப்பட்டது. டி.ஏ.கல்யாணம் இசையில் உருவாக்கப்பட்ட இந்த பாடலில்,

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீன் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ

ஷமென சோபனம் பாடவே
இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

என்று இசை நுணுக்கமாய் எழுதப்பட்டுள்ளது. வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய பாடல்கள் அனைத்தும் இசைவடிங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஜிக்கி

அவர் வாழ்ந்த காலமென்பது 1774-ம் ஆண்டு முதல் 1864-ம் ஆண்டு வரையாகும். ஆனால், அவர் எழுதிய

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து…

பாடல் இறைநேசர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதிமங்கள காரணனே,பாரில் உன்னை அன்றி யாரோ,எந்தன் இதயம் எழுச்சியடைந்திட வா வா, தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே, நீயுனக்கு சொந்தமல்லவே,என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம், திரிமுதல் கிருபாசனனே சரணம், ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா, சுந்தரப் பரம தேவமைந்தன், யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார், ஆத்துமமே என் முழு உள்ளமே, வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும். ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே. இன்று இயேசு உயிர்த்தெழுந்தார், நம் தேவனைத் துதித்துப்பாடி,எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே என்று எத்தனை எத்தனையோ பாடல்களை சுசீலா அக்கா பாடிக் கேட்டிருக்கிறேன்.

தேவவரம் பிடல்ப்ட் முன்ஷியர்,ஜோ அடைக்கலம்,:வின்பிரட் போதகர்,தேவசகாயம் உபாத்தியார், மரியான் உபதேசியர், தைரியம் ரைட்டர், மேரி லாசரஸ், ல.பொன்னுசாமி உள்பட எண்ணற்றோர் எழுதிய கீர்த்தனைகள் விதவிதமான மெட்டுக்களில் இன்றளவும் கிறிஸ்தவ கானங்களாக உலா வருகின்றன. மதங்களைக் கடந்த இசையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த சுசீலா அக்காவின் பாடல்கள் தான், இசை ரசனையின் வாசலை எனக்குத் திறந்து வைத்தன.
-ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)

1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/

2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/

3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/

4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/

5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/

6)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/

7)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/

8)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-7/

9)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-8/

10)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-9/

11)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-10/

இப்போதே பகிருங்கள்

3 Comments

  1. நினைவுகள் சுழலும்” தொடரின் வழியே, ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு காலப் பெட்டகத்திற்குள் நுழைந்து விடுகிறேன். இந்த **”பக்தியிசை பரப்பிய பாவலர்கள்… ஆபிரகாம் பண்டிதர்”** வெறுமனே வாசித்து கடக்கக் கூடிய ஒன்றல்ல; அது இசையாலும் நினைவுகளாலும் நெய்யப்பட்ட ஒரு அற்புதக் காவியம்!

    மதுரை முடுவார்பட்டி கபடிப் போட்டியில் தொடங்கி, கோ.புதூர் கட்டாந்தரை மைதானம், தோழர் ஜான் செல்வராஜ், கோச்சர் அப்துல் நாசர் எனத் தன் பால்ய காலத்து நினைவுகளை வாசகர்களின் கண்முன்னே ஓடவிட்ட விதம் அற்புதம். கபடி விளையாடி களைத்துப்போய், தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் ‘சுசீலா அக்கா’ பாடிய பாடலின் வழியே கட்டுரை அப்படியே இசையோடு இரண்டறக் கலந்து பயணிக்கிறது.

    கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆளுமைகளைத் தேடித் தேடித் தொகுத்திருக்கும் உங்களின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    * ‘தந்தானை துதிப்போமே’ பாடலைப் பாடிய **பாரதி பால்**, அதை எழுதிய சிலுக்குவார்பட்டி **வே.மாசிலாமணி**,
    * தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ராவ்பகதூர் **ஆபிரகாம் பண்டிதர்**,
    * எளிய வரிகளால் நெஞ்சத்தைத் தொட்ட **ஞானமணி**,
    * தஞ்சை அரண்மனைப் புலவர் **வேதநாயகம் சாஸ்திரியார்**…
    எனப் பல இசைப் பாவலர்களைப் பற்றி, இளைய தலைமுறை அறியாத பல அரிய வரலாற்றுத் தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இத்தனை பாடல்களையும், அதன் பின்னணியில் உள்ள ஆளுமைகளையும், பாடகர்களையும் தேடிக் கண்டுபிடித்துத் தொகுக்க நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை ஒவ்வொரு வரியிலும் என்னால் உணர முடிகிறது.

    சுசீலா அக்காவின் குரல் வழியே, மதங்களின் எல்லையைக் கடந்து பக்தி இசையின் ஆன்மாவைக் கடத்தியிருக்கும் பாங்கு அற்புதம். ஜிக்கி, ஏ.பி.கோமளா, தேவிகா ஜெயசிங் போன்றோரின் குரல்களில் ஒலித்த அந்தப் பழைய பாடல்களின் வரிகளை வாசிக்கும் போதே மனதுக்குள் ஒரு மெல்லிய இசை ஒலிக்கத் தொடங்குகிறது.

    சார், உங்கள் எழுத்துகளுக்குள் ஒரு தனிவகை மேஜிக் இருக்கிறது. மண்ணின் நினைவுகளையும், வரலாற்றையும் இவ்வளவு சுவாரசியமாக உங்களைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது. வெளி உலகிற்குத் தெரியாமல் மறைந்து கிடந்த எத்தனையோ இசைப் பாவலர்களை, இந்தத் தலைமுறைக்கு நீங்கள் அடையாளம் காட்டியுள்ளீர்கள். இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட தேடலும் உழைப்பும் அசாத்தியமானது!
    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், உங்கள் கட்டுரை எப்போது வெளியாகும் என்று ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
    நினைவுகளைச் சுழலவிட்டு எங்களை நெகிழ வைக்கும் உங்கள் எழுத்துப் பயணம் தொய்வின்றித் தொடரட்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!
    அன்புடன்,
    கம்பம் விஜி

    • மிக்க நன்றி ஸார். உங்களின் உற்சாக மூட்டும் வார்த்தைகள் இன்னும் பல பாடல்களைத் தேடிய என் பயணத்திற்கு டானிக்.

  2. மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். எளிய மக்களின் உழைப்பாளிகளின் துயரங்களை மன்றாடி முறையிட, தமது துயரங்களை தற்காலிகமாகவாவது இறக்கி வைக்க அவர்களுக்கு ஒரு சுமைதாங்கி தேவைப்பட்டது. அது கடவுள் என்னும் உருவில் வந்தது. பிற்பாடு சமூக வளர்ச்சிப் போக்கில் ஆளும் வர்க்கமும் அரசும் அதிகார மையங்களும், தமது இருப்பையும் வர்க்க ஒடுக்கு முறையையும் வன்முறையை கை கொண்டு நிலை நிறுத்துவதற்கு பதிலாக கடவுள் நம்பிக்கை, பக்தி, பயம் ஆகிய விடயங்களை அரசாங்க கஜானா செலவில் இருந்தே பரப்பி நிலை நிறுத்தி வழிபாட்டு தலங்களையும் நிறுவினார்கள். ஆளும் வர்க்கத்திற்கு இது செலவு என்பதை தாண்டி தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான மூலதனமாகவே கடவுள் நம்பிக்கை, பக்தி, வழிபாட்டு தலங்கள் ஆகியவை பயன்பட்டன. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும்.

    2. இதை தாண்டி அந்தந்த மதங்களில் உருவான, எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள், பாடல்கள், செய்யுள்கள் ஆகியவை அந்தந்த மொழியின் இலக்கிய வளம், பிரதேச அடையாளம், அந்தந்த மண்ணின் மக்கள் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றையும் பிரதிபலித்த ன என்பதும் உண்மைதான். ஆண்ட அரசர்களை பாடியது உண்மைதான் என்றாலும் ஆண்டவர்களை பாடிய பக்தி இலக்கியங்களை முற்றாக ஒதுக்கி விட முடியாது. மேற்கூறிய கூறுகள் அவற்றை ஒதுக்கி விட முடியாதபடி நம்மை வாசிக்க செய்கின்றன. தொ. பரமசிவன் போன்ற மூத்த ஆய்வாளர்களின் பதிவுகள் இந்தக் கூற்றைத்தாம் வலியுறுத்துகின்றன. அறிவியல் தொழினுட்ப வளர்ச்சி இந்த பக்தி இலக்கியங்களை ஒளி ஒலி இசை வடிவில் வேறு ஒரு தளத்துக்கு எடுத்து சென்றன. அந்த பரிமாணம் மதம், கடவுள் ஆகிய எல்லைகளை கடந்து மொழி வளம், இசை, பாடல் நயம் ஆகிய கூறுகளை நோக்கி கடவுள் நம்பிக்கை இல்லாத ரசிகர்களையும் நகர்த்தி சென்றது என்பது பெரிய உண்மை. அத்தகைய ரசிகர்களில் நானும் ஒருவன்.

    3. இலங்கை வானொலி கேட்டு வளர்ந்தவன் நான். அதிகாலை 5.30க்கே எழுந்து பக்தி பாடல்களில் தொடங்கி தொடரும் நினைவில் நின்றவையில் எம் கே டி, பி யு சின்னப்பா, கே ஆர் ராமசாமி, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம்,
    பி ஏ பெரியநாயகி, கோமளா, கே பி சுந்தராம்பாள், என் எஸ் கிருஷ்ணன், துரைராஜ்… என ஐந்து, ஆறாவது வகுப்பிலேயே ரசனை அந்த திசையில் போனது. நாகூர் அனிபா, டி எம் எஸ், சீர்காழி, பி சுசீலா, ஜிக்கி, கே ஜே யேசுதாஸ் என்று எத்தனை பக்தி பாடல்கள்! பிலிப்ஸ் பிலேட்டினா ட்ரான்சிஸ்டர் ரேடியோவில்… அதன் தோல் உறையின் வாசமும் அதை கழற்றி விட்டால் பளபள என மின்னும் ரேடியோவும்…

    எல்லாவற்றையும் தாண்டி இப்போதும் என் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல் அய்யய்யா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்… என்ற சுசீலா பாடிய கிறித்துவ வழிபாட்டு பாடல்தான். இப்போது யூடியூப்பில் பாடல் கிடைக்கிறது. ஆ வேதக்கண் உபாத்தியாயர் எழுதிய பாடல் என்று இப்போது தெரிகிறது. பாடல் ஒரு செய்யுள் வடிவில் உள்ளது. இசையமைத்தவர் என் பரமசிவம். பாடல் வெளியான ஆண்டு 1971. அரை நூற்றாண்டுக்கு பின்னும் புதுசாக உள்ள பாடல், கொலம்பியா அரக்கு ரிகார்ட் பிளேட்டில். முகாரி ராகத்தில் இறைவணக்கப்பாடல். கிண்கிணி ஓசையுடன் தொடங்கும் பாடலின் சரணம்

    துய்யன் நீர் சோரி பாவி எனக்காய் சிந்தி
    துஷ்டன் எனை அழைத்தீர்
    தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
    தேவாட்டுக்குட்டி வந்தேன்..

    எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
    எத்தனை எத்தனையோ
    இவை திண்ணம் அகற்றி
    எளியோனை ரட்சியும்
    தேவாட்டுக்குட்டி வந்தேன்…

    சுசீலா இப்பாடலை தெலுங்கு மொழியில் எழுதி வைத்து பாடினார் என்றால் உண்மையில் பிரமிக்க செய்கிறது. சாதனைதான். சொற்கட்டு அப்படிப்பட்டது. வந்..தே….ன் என்று அவர் பாடும்போது குட்டி ஆடு தத்தித்தத்தி குதித்து வருவதை பார்க்கலாம். இரண்டாவது சரணத்தில் ரட்சியும் என்ற ஒரே ஒரு சொல்லில் அவர் குரலின் குழைவும் வேண்டுதலும்! ஆஹா! இதற்காக மட்டுமே இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

    சீர்காழி கோவிந்தராஜன், பி பீ ஶ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலரும் கிருத்துவ பக்தி பாடல்களை பாடி இருக்கிறார்கள் என்பதை நண்பர்கள் அறிவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *