
கலிப்பா
ஆசிரியப்பாவை அடுத்து நாம் பார்க்க வேண்டிய பா கலிப்பா. கற்பதற்கு மிகவும் கடினமானது கலிப்பா. இதன் இலக்கணத்தை விரித்துக் கூறுதல் தேவையற்றது. என்றாலும் இப்பாவின் அடிப்படை இலக்கணங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு பாவிற்கும் ஒவ்வொரு ஓசை இருக்கிறதென முன்னரே பார்த்தோம். கலிப்பாவிற்குரிய ஓசை துள்ளலோசையாகும். இத்துள்ளலோசை கீழ்க்கண்டவாறு மூன்று வகைப்படும்
- ஏந்திசைத் துள்ளலோசை
முழுவதும் கலித்தளையே பெற்று வருமாயின் அது ஏந்திசைத் துள்ளலோசை பெற்றுவரும் கலிப்பாவாகும். - அகவல் துள்ளலோசை
இவ்வோசை கலித்தளையோடு வெண்சீர் வெண்டளையும் கலந்து வருவதால் உண்டாகக் கூடிய ஓசையாகும். - பிரிந்திசைத் துள்ளலோசை
இது வெண்டளையும் ஆசிரியத்தளையும் கலந்து வருவதால் உருவாகும் ஓசையாகும்.
தளை– கலிப்பாவிற்குரிய தளை காய்முன் நிரை வருதல் ஆகும். அஃதாவது, தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் மற்றும் கருவிளங்காய் ஆகிய நான்கு காய்ச்சீர்களைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நிரையசையாக இருக்க வேண்டும்.
கலிப்பாவில் கலித்தளை அதிகம் பயின்று வரவேண்டும். எனவே நிரையசையை முதலில் கொண்டிருக்கும் புளிமாங்காய்ச் சீரும் கருவிளங்காய்ச் சீரும் அதிகம் வரவேண்டும். இயற்சீர்களில் கருவிளச் சீர் வரலாம். கூவிளச் சீர்கூட அருகிவரலாம். தேமா, புளிமாச் சீர்கள் வராது. கனிச் சீர்களில் தேமாங்கனிச் சீரும் புளிமாங்கனிச் சீரும் அருகி வரலாம். நிரை நடுவாகிய கூவிளங்கனிச் சீரும் கருவிளங்கனிச் சீரும் வரக்கூடாது.
அடி– நான்கு சீர்களைக்கொண்ட அளவடியே கலிப்பாவிற்குரியது.
கலிப்பாவின் உறுப்புக்கள்
1) தரவு: பாட்டின் பொருளைத் தொடங்கி வைப்பது தரவு. இது மூன்று அடிகளுக்குக் குறையாமலும் பன்னரண்டு அடிகளுக்கு மிகாமலும் வரும். இதில் பெரும்பாலும் புளிமாங்காய் மற்றும் கருவிளங்காய்ச் சீர்களே வரும்.
தரவு என்ற சொல்லுக்கு எருத்தம் என்ற பெயரும் உண்டு. எருத்தம் என்றால் பிடரி என்று பொருள். பாட்டிற்குத் தலைபோல் வந்திருப்பதால் அப்பெயர் வந்தது போலும்.
2) தாழிசை: தரவு எடுத்துத் தந்த பொருளை வளர்க்கும் தன்மையது தாழிசை. தாழிசை தாழ்ந்து இசைப்பதால் அதற்குத் தாழிசை என்ற பெயர் வரலாயிற்று. இதிலும் புளிமாங்காய்ச் சீர்களும் கருவிளங்காய்ச் சீர்களும் அதிகமாக வரும்.
தாழிசை இரண்டு, மூன்று அல்லது நான்கு அடிகளைக் கொண்டனவாய் இருக்கலாம். தரவின் அடிகளைக் காட்டிலும் தாழிசையின் அடிகள் குறைவாக இருக்க வேண்டும்.
தரவு ஒருவனைக் கூப்பிடுவது போன்றது. தாழிசை அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்வது அல்லது கேட்பது போன்றது. இதற்கு இடைநிலைப் பாட்டு என்ற பெயரும் உண்டு.
3) அராகம்: இது இல்லாமலும் பாட்டு வரலாம். இது நான்கும் அதற்கு மேலும் உள்ள சீர்களைக் கொண்டு வரும். இது பெரும்பாலும் கருவிளச் சீர்களைப் பெற்று முடுகியலாக அமையும். ஒன்றைப் பாராட்டி வர்ணிக்கும் இயல்பினது அராகம்.
4) அம்போதரங்கம்: தரங்கம் என்றால் அலை என்று பொருள். கரையை நெருங்க நெருங்க அலைகள் சுருங்குவதுபோல் அம்போதரங்கம் அளவடியில் தொடங்கி சிந்தடியாகவும் குறளடியாகவும் சுருங்கி வரும். இது ஒன்றின் அருள், வீரம் முதலியவற்றால் நிகழும் கருமங்களின் பெருமையைப் பாராட்டும் தன்மையது. இதில் காய்ச்சீர்களும் இயற்சீர்களும் விரவி வரலாம். ஓரசைச் சீர்களும் வரலாம்.
5) தனிச்சொல்: இது செய்யுளின் முடிவைச் சொல்லவரும் உறுப்பு.
6) சுரிதகம்: கலிப்பாவை முடித்து வைக்கும் இறுதி உறுப்பு இது. இது பெரும்பான்மை ஆசிரியப்பாவிலும் சிறுபான்மை வெண்பாவிலும் அமையும்.
மேற்கண்ட அனைத்து உறுப்புக்களையும் கொண்டு கலிப்பா இயற்றுதல் கடினம் ஆகையால் தற்போது கலிப்பாக்கள் யாராலும் இயற்றப்படுவதில்லை.
கலிப்பாவில் பல வகைகள் உள்ளன. நாம் இங்கு கீழ்க்ண்ட வகைகளை மட்டும் தெரிந்துகொள்வோம்.
1) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
2) கொச்சகக் கலிப்பா
3) கட்டளைக் கலிப்பா
4) வெண்கலிப்பா
1) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஒரு தரவு, மூன்று தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியவற்றைப் பெற்றுவரும்.
(உ-ம்)
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்
ஆ
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின், 5
இ
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை,
கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே
இது தரவு
ஈ
கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், 10
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
உ
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
ஊ
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? 15
இவை மூன்றும் தாழிசை
எ
என ஆங்கு
இது தனிச்சொல்
ஏ
பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,
அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே
இது சுரிதகம்
-கலித்தொகை(பாலைபாடிய பெருங்கடுங்கோ)
2)கொச்சகக் கலிப்பா
கலிப்பா உறுப்புகளில் சில பெற்றும், உறுப்புக்கள் முறை மாறியும், மிகுந்தும் குறைந்தும் வரும் கலிப்பாக்களை கொச்சகக் கலிப்பா என்று அழைக்கிறோம்.
இது துள்ளலோசை குன்றியும் வரும். கலிப்பாவிற்கு உகந்ததல்லாத தேமா, புளிமா, கூவிளங்கனி மற்றும் கருவிளங்கனி ஆகிய சீர்களையும் கொச்சகக் கலிப்பா பெற்றுவரும். அளவடிகளோடு நெடிலடியும் வரக்கூடும்.
கொச்சகக் கலிப்பாவின் பிரிவுகள்:
1) தரவு கொச்சகக் கலிப்பா
2) தரவிணைக் கொச்சகக் கலிப்பா
3) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
4) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
5) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு கொச்சகக் கலிப்பா
கலிப்பாவின் முதல் உறுப்பான தரவு என்பதை மட்டும் பெற்றும் அல்லது தரவோடு தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றும் நடப்பது தரவு கொச்சகக் கலிப்பா. தரவோடு நிற்பதை இயற்றரவு கொச்சகக் கலிப்பா என்றும், தரவோடு தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று நிற்பதைச் சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா என்றும் வேறுபடுத்திக் கூறுவர்.
இன்றைய காலத்தில் இயற்றரவு கொச்சகக் கலிப்பா அதாவது தரவு கொச்சகக் கலிப்பா மட்டுமே அதிகம் இயற்றப்படுகிறது.
(உ-ம்)
முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையெறியா
திருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே
-யாப்பருங்கல விருத்தி
இது நிரையசை முதற்சீரால் அமைந்தது.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான்எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”.
-மாணிக்கவாசகர்.
இது நேரசையையும் நிரையசையும் முதலாகக் கொண்ட சீர்கள் கலந்து வந்த தரவு கொச்சகக் கலிப்பா.
மேலே. வரிசை எண் 2 முதல் 5 வரை உள்ள பிரிகளைப் பற்றிப் பின்னர் தெரிந்துகொள்ளலாம். தரவு கொச்சகக் கலிப்பா இயற்றத் தெரிந்துகொண்டால் போதும். ஏனையவை முக்கியமற்றவை.
3) கட்டளைக் கலிப்பா
எட்டு எட்டுச் சீர்களைக் கொண்ட நான்கு அடிகள் வரும். ஓர் அரையடியின் முதற்சீர் நேர் ஈற்று மாச்சீராக இருக்க வெண்டும். அந்த அரையடியின் மற்ற மூன்று சீர்களும் கூவிளச் சீர்களாக வருவது சிறப்பு. இப்படி அடுத்த அரையடியும் அமைய வேண்டும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும். பாட்டு நேரசையில் தொடங்கினால் ஓர் அரையடிக்கு 11 எழுத்துக்கள் மட்டும் இருக்க வேண்டும். நிரையசையில் தொடங்கினால் ஓர் அரையடிக்கு 12 எழுத்துக்கள் மட்டும் இருக்க வேண்டும். எழுத்துக்களை எண்ணும்போது மெய்யெழுத்துக்களை நீக்கிவிட்டு எண்ண வேண்டும். இத்தனை எழுத்திற்குள் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதனால் இது கட்டளைக் கலிப்பாவாயிற்று.
(உ-ம்)
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னம் எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடி யேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ என்செய் வேன் கச்சி ஏகம்பனே!
-பட்டினத்தார்.
4) வெண்கலிப்பா
இப்பா நான்கு அடிமுதல் எத்தனை அடிகள் வேண்டினும் வரும். கலிப்பாவின் உறுப்புகளுள் தரவை மட்டும் பெற்றுவரும். இரண்டு இரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை பெற்றுவரும். கலித்தளை நிறைந்தும் வெண்டளை குறைந்தும் கலந்துவரும். தளை வரையறை கிடையாது. வெண்பாவைப் போல் ஈற்றடி சிந்தடியாக வந்து நாள்-மலர்-காசு-பிறப்பு என்பனவற்றுள் ஏதாவது ஒன்றைப் பெற்று முடிய வேண்டும். துள்ளலோசை பெற்று வரவேண்டும்.
(உ-ம்)
முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து
இக்காலத்தில் கொச்சகக் கலிப்பாக்கள் மட்டுமே அதிகம் பாடப்பட்டு வருகின்றன. கட்டளைக் கலிப்பா சற்றுக் கடினமானது என்ற போதிலும், முயன்று பாடினால் மிக இனிமையாக இருக்கும். வெண்கலிப்பா பாடுதற்கு எளிதானது. தொடக்க நிலையில் இருப்பவர்கள் வெண்கலிப்பா இயற்றிப் பழகலாம்.
– மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/
6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/
7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/
8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/
9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/
10)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-10/



