
உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியதில் மணமகனின் தந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் , ஹாப்பூரில் திருமணம் முடிந்த விசேஷ வீட்டினர் ஒரு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது அந்த பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் மணமகனின் தந்தை, பஸ் டிரைவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கி, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஞானஞ்சய் சிங் கூறுகையில், ” திருமண ஊர்வலத்திற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்குள்ளான பஸ்சில் 12 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர் பஸ்சின் டிரைவராக இருக்கலாம்” என்றார். திருமண விசேஷத்திற்கு சென்று விட்டு திரும்பியவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



