
பஞ்சாப்பில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாப் மாவட்டம், பஸ்ஸி தொகுதியைச் சேர்ந்த பக்தர்கள் குழு ஆனந்த்பூர் சாஹிப்பிற்கு மரியாதை செலுத்தச்சென்றிருந்தனர். இந்த பேருந்தில் 40 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். நேற்று இரவு 9.10 மணியளவில் புறப்பட்ட பேருந்து பஞ்சாப்பில் உள்ள ஃபதேகர் சாஹிப் நகரில் உள்ள பாஸ்ஸி பதானா பகுதியில் இன்று (ஏப்ரல் 15) அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த மரங்களின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஃபதேகர் சாஹிப் போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பேருந்து விபத்தில் காயமடைந்த 25 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களைத் திரட்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.



