ஷாக்… குஜராத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி: 7 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் அதிவேகமாக வந்த லாரி மோதி 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தில் பரவாட் சமூகத்தைச் சேர்ந்த முந்த்வா குடும்பத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் கோயிலுக்கு நடைபயணமாக இன்று(ஏப்ரல் 13) அதிகாலை சென்று கொண்டிருந்தனர். குஜராத்தின் சுரேந்திரநகரில் அவர்கள் சென்ற போது அதிவேகமாக வந்த லாரி, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 7 பக்தர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். லாரி மோதி கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விராம்காம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக லக்தார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து லக்தார் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். லாரி மோதி 7 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *