
கோண கொண்டைக்காரியும், சூலமங்கலம் சகோதரிகளும்!
மினி பஸ்களில் ஒலிக்கும் பாடல்களின் ப்ளே டிஸ்டில் யாரும் எதிர்பார்க்காத பாடல்கள் கிடைக்கும். கேப்டன் படத்தில் இடம் பெற்ற கன்னத்துல வை. கன்னத்துல வைரமணி மின்ன மின்ன பாடலுக்குப் பின், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் படத்தில் இடம் பெற்ற
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
இந்த மண்ணில் ஏனடி
பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை…

சட்டென ஒலிக்கும் போது அப்படியே ஜிவ்வென்றிருக்கும். கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் இந்த பாடலின் பல்லவிக்கு முன் ஒலிக்கும் ஹம்மிங்கை கேட்டால் அப்படியே சொக்கிப் போவீர்கள். எஸ்.ஜானகியின் ஹம்மிங் என்றால் சொல்லவா வேண்டும்?
ஆ…ஆஆ ஆஆ ஆஅ ஆ
னன னா னன னா
னன..னா னன..னா
னன னா ன னா ன னா ன னா னனா
இந்த ஹம்மிங்கிற்குப் பின் ஒலிக்கும் வீணையின் நாதமும் கே.ஜே.யேசுதாஸின் குரலும் மெய்மறக்கச் செய்து விடும். இசைஞானி இளையராஜா இசையில் பிறைசூடன் எழுதிய இப்படியான பாடல்களை மினி பஸ்சில் தான் கேட்க முடிகிறது

அப்படித்தான் திடீரென ஒருநாள், மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் இடம் பெற்ற
கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நா பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
என்று ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் ஒலிக்கத் தொடங்கியது. நண்பர் விக்ரமன் சுகுமார் எழுதி இயக்கிய இப்படத்தில் ஏகாதசி எழுதிய இந்த பாடல், செல்போன் ரிங்காக இன்று வரை பலரால் ரசிக்கப்படுகிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட் என்றாலும் அறிமுக நாயகன் கதிருக்கு கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால பாடல் எப்போதும் ஸ்பெஷல் தான். நானும் கொஞ்ச நாட்களாக இந்த பாடலை அசைபோட்டவாறு மினி பஸ்சில் பயணம் செய்த போது சட்டென இந்த பாடல் வேறு ஒரு பாடலை நினைவுப்படுத்தியது.
ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு
அந்த ஆதிசிவன் பிள்ளைமேனி முழுவதும் திருநீறு
வாவையூரனை கீரி கிழித்திடவேலோடு
பன்னிரு கையென வந்திருக்கிற இடம் திருச்செந்தூரு
கோவண சண்முக சுவாமியின் மார்களில் பாலோடும்
அவன் குங்கும தாமரை கண்களில் சங்கத்தமிழ் ஓடும்
தாய் பராசக்தி அவள் தந்த அருளோடும்
அவன் வண்ணச்சிறு அடி வைத்த இடம் ஒரு பூவாகும்…
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ,இந்த பாடலுக்கு மெட்டு போட்டவர் சூலமங்கலம் ராஜலட்சுமி. ஒரு முருகன் பாடலில் இருந்து கோணக்கொண்டக்காரி பாடல் உருவானது சிறப்பானது என்றால், ஆயிரம் கோடி நிலவுகள் பாடலை எழுதிய கவிஞரை அறிந்து கொள்வது அவசியமில்லையா?
சந்திரகாந்தாவின் நாடக்குழுவில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த அந்த காளி பக்தர், சாண்டோ சின்னப்பா தேவரின் வேண்டுகோளை ஏற்று மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை எழுதிக் கொடுத்தார். சித்தர்களுடன் சிநேகமாக இருந்த அந்த கவிஞர் பெயர் மாயவநாதன்.
நெல்லை மாவட்டம் பூலாங்குளத்தைச் சேர்ந்த மாயவநாதன் 24 படங்களில் 54 பாடல்களை எழுதியுள்ளார்.கவியரசு கண்ணதாசனின் கருத்துச் செறிவும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தத்துவ ஞானமும் கேட்டு மெய்மறந்தவர்கள், மாயவநாதனின் பாடல்கள் கேட்டு குதூகலித்தனர். தமிழ் திரைவானில் சட்டென ஜொலித்த துருவ நட்சத்திரமானார் மாயவநாதன்..
தன்னிலவு தேனிறைக்க, நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ, கவலைகள் கிடக்கும் மறந்து விடு, சந்தனத்தில் நிறமெடுத்து,சித்திரப்பூவிழி வாசலிலே, வருக வருக தலைமகளின் திருமகளே, என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய், அழகன் பேரழகன், காவிரிப்பெண்ணே நீ வாழ்க, தப்பித்து வந்தானம்மா, அன்று கொல்லும் அரசானேன், தமிழ் எங்கள் உயிரானது, பூந்தென்றல் இசைபாட, ஒருகோடி பாடலுக்கு, சின்னக் சின்ன கோயில், மல்லிகை பூப்பொட்டு, பெண்ணே உன் கதி, தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே, அழகு ரதம் பிறக்கும். பாவி என்னை மறுபடியும், இவளொரு அழகிய பூஞ்சிட்டு, மேலாடை காற்றாட என முத்திரை பதித்த பாடல்களை எழுதிய சத்தான கவிஞர் மாயவநாதன்..

அவர் எழுதிய ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு என்ற பக்திப் பாடல், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மதயானைக் கூட்டம் திரைப்படப் பாடலுக்கு அதுவும் ஒரு காதல் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளது. கவிஞர் மாயவநாதன் பல பக்தி பாடல்களை எழுதியுள்ளார். அய்யனாரு நிரஞ்ச வாழ்வு கொடுக்கணும். கந்தனின் தேரோட்டம் கண்ணுக்கு நேரோட்டம் ஆகிய பாடல்கள் அவர் எழுதியவை தான்.
இசை இரட்டையர் சூலமங்கலம் சகோதரிகளுடன் இணைந்து பல புகழ் பெற்ற பாடல்களை மாயவநாதன் தந்துள்ளார். கோவைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான மருதமலை முருகனைப் போற்றி பல பாடல்களை மாயவநாதன் எழுதியுள்ளார்.
குறிப்பாக சூலமங்கலம் சகோதரிகள், “மருதாசலத்திற்கு வாருங்கள், ஈசன் மகனோடு மனம் விட்டு பேசுங்கள்” என்று பாடிய அந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள். பாடலுக்கு முன் சூலமங்கலம் சகோதரிகள் குரல்களில் ஒலிக்கும் தொகையறா காண்டா மணி ஒலிப்பதை போல அவ்வளவு கணீர் கணீர் என ஒலிக்கும்.
முத்துத் திருப்புகழை செப்பி விட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம் அருணாசலம்
சூரன் உடல் கொத்திக் குதறிய பின் குமரப்பெருங்கடல்
கோபம் தணிந்த ,இடம் தணிகாசலம்
பாம்பாட்டி சித்தருக்கு தண்ணீரும்
தெய்வத்தின் திருவேலின் வெந்நீரும்
தந்த இடம் மருதாசலம்
பக்திக் கடலில் குளித்த மாயவநாதனிடமிருந்து முருகனின் வரலாறு சந்தம் பொங்க பக்திப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவரது பக்திப் பாடல்கள் தொகையறாவிற்கு பின் பாடப்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அப்படியொரு பாடல் இது. பார்வதி பிறந்த இடம் இமயமலை என்றும், அவரது மகன் முருகன் விளையாடும் மலை மருதமலை என்றும் கற்பனை செய்யப்படுகிறது. அதை வைத்து மாயவநாதன் எழுதிய
மாதா பிறந்த மலை இமயமலை- வந்து
மகன் விளையாடும் மலை மருதமலை…
ஆஹா அதற்கு மிஞ்சி மலையுமில்லை
ஆஹா அதற்கு மிஞ்சி மலையுமில்லை பிள்ளை
அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை- பிள்ளை
அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை- மாதா…
பாடல் அற்புதமான மெட்டு. சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இந்த பாடல் முருகன் புகழ் மாலை ஒலிநாடாவில் இடம் பெற்றுள்ளது. இதுபோல எத்தனையோ அற்புதமான பாடல்களை எழுதிய மாயவநாதன் 35 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சோகம்.
– ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/
6)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/
7)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/
8)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-7/
9)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-8/
10)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-9/



