ஷாக்… அகிலேஷ் யாதவின் தம்பி பிரதீக் திடீர் மரணம்

அகிலேஷ் யாதவின் தம்பி பிரதீக் யாதவ் இன்று காலை திடீரென மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவருமான மறைந்த முலாயம் சிங் யாதவின் மகன் பிரதீக் யாதவ் (38). இவர் அகிலேஷ் யாதவின் சகோதரர்ஆவார். இவர் தொழிலதிபராகவும் உடற்பயிற்சித் துறை சார்ந்த தொழில் முனைவோராகவும் இருந்தார். இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிடிஏ பட்டம் பெற்ற பிரதீக் யாதவ், உத்தரப் பிரதேச பாஜக மகளிர் அணி தலைவி அபர்ணாவுக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று ( மே 13) காலை பிரதீக் யாதவை அவரது குடும்பத்தினர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரதீக் யாதவ் மருத்துவமனைக்கு கொண்டுவந்த நேரத்தில் அவரது மனைவி அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. பிரதீக் யாதவ் சுயநினைவின்றி லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அங்கு அவர் வந்தடைந்தவுடனேயே இறந்துவிட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜி.பி. குப்தா கூறினார்.

பிரதீக் யாதவின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளது. முதற்கட்ட ஆய்வின்படி, உடலில் காயங்களுக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. பிரதீக் யாதவ், அபர்ணா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்போவதாக இருவரும் அறிவித்தனர். எனினும் அந்த நடவடிக்கையை அவர்கள் இதுவரை எடுக்கவில்லை. ஆனாலும், “சுயநலப் பெண்ணை நான் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். அவள் என் குடும்ப உறவுகளைச் சீர்குலைத்து விட்டாள். அவள் விரும்புவதெல்லாம் புகழும் செல்வாக்கும் பெறுவதுதான்” என்று பிரதீக் யாதவ் இன்ஸ்டாகிராம் பதிவில் அண்மையில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *