
பிராந்தியக் கட்சிகளின் இழப்பில் உயிர்வாழும் ஒரு ‘ஒட்டுண்ணி அரசியல் சக்தி’ என்று காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 10) கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், : ” தமிழ்நாட்டி ன் நிலைமையைப் பாருங்கள். 25,30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நெருக்கமான கூட்டணி கட்சியாக இருந்தது. பலமுறை திமுகவுடனான இந்தக் கூட்டணி காங்கிரஸைச் சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்தது; சொல்லப்போனால், 2014-க்கு முன்பு 10 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, பெரும்பாலும் திமுகவின் ஆதரவால்தான் தப்பிப் பிழைத்தது.
இருப்பினும், காங்கிரஸின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்த அதே திமுகவிற்கு, அரசியல் சூழல் மாறியவுடன் துரோகம் செய்துவிட்டது காங்கிரஸ். அதிகாரப் பசியால் காங்கிரஸ், தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்தியது. இப்போது, காங்கிரஸ் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மற்றொரு கட்சியின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
அத்துடன் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் செய்தும், மக்களைத் தவறாக வழி நடத்தியும் வருகிறது. மேலும், பிராந்தியக் கட்சிகளின் இழப்பில் உயிர்வாழும் ஒரு ஒட்டுண்ணி அரசியல் சக்தி காங்கிரஸ். கர்நாடகாவில் உள்ள உட்கட்சி அதிகாரப் போராட்டங்களால் காங்கிரஸ் நல்லாட்சியை வழங்கத் தவறிவிட்டது.. இந்தியா முழுவதும் பாஜகவின் அரசியல் செல்வாக்கு விரிவடைந்து வரும் நிலையில், பெங்களூருவிலிருந்து ஒரு காவி சூரியன் உதித்து வருகிறது” என்றும் பிரதமர் கூறினார்.



