ஒரு போலீஸ்காரர் செய்யிற வேலையா?: யாசகரை கொன்று எரித்து நாடகமாடியது அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர், யாசகரை கொலை செய்து தான் மரணமடைந்தது போல நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், வடகிழக்கு ரயில்வேயின் ஹாத்ரஸ் ரோடு ஹால்ட் அருகே உள்ள தகரக் கொட்டகையில் மார்ச் 12-ம் தேதி அடையாளம் தெரியாத முதியவரின் உடல் கருகிய நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டது. கருகிய உடல் அருகே மெயின்புரி மாவட்டத்தின் கிஷ்னி பகுதியைச் சேர்ந்த ராம்வீர் சிங் (55) என்பவரின் அடையாள அட்டை மற்றும் உடமைகள் கிடந்தன. போலீஸ்காரராக இருந்த ராம்வீர் சிங்கை யாரும் கொலை செய்து எரித்தார்களா என போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹாத்ரஸ் நகரில் உள்ள அரசு ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்த போலீஸார், அதிர்ச்சியடைய ஆரம்பித்தனர். போலீஸாரால் மீட்கப்பட்டது ராம்வீர் சிங் உடல் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ராம்வீர் சிங், காவல் துறையில் வேலை செய்த போதே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது ஃபிரோசாபாத், அலிகார், மொராதாபாத், ஹர்தோய், மெயின்புரி மற்றும் படாயூன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. இந்த நிலையில், அவர் உத்தரப்பிரதேச காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக யாசகரை கொலை செய்து உடலை எரித்து தான் இறந்தது போல ராம்வீர் சிங் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் இன்று (ஏப்ரல் 16) கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட யாசகர் என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *