
நெல்லுக்கான ஊக்கத்தொகை சர்ச்சையை தொடர்ந்து மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில், பருப்பு, எண்ணெய் வித்துகள், நெல் தொடர்பாக மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என எழுதப்பட்ட கடிதம், தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்,” எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை”. தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நெல்லுக்கான ஊக்கத்தொகை தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அத்துடன் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” நெல் சாகுபடிக்கு வழங்கும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறு மட்டுமே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நெல் சாகுபடிக்கு வழங்கும் ஊக்கத்தொகை நிறுத்துமாறு மத்திய அரசு கூறியதாக முதலமைச்சர் பொய் பிரசாரம் செய்கிறார்.
மத்திய அரசுக்கு எதிராக பொய் கதைகளை கட்டுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது கட்சியிரும் கைதேர்ந்தவர்கள்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்துவது, பொய்யான கதைகளை உருவாக்குவது முதல்வரின் வேலை. முதலமைச்சர் பொய் கதைகளை கூறி தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்கிறார். ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் குறுகிய, சுயநல அரசியல் ஆதாயத்திற்காக திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். தேசம் தீர்வுகளை தேடும்போது திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.



