
இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலால் ஈரானில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஈரான் ஹார்முஸ் ஜனசந்தியை மூடியதுடன், இந்திய கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரான் தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள போதும், நிலவி வரும் பிராந்திய பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியர்கள் யாரும் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சில விமானச் சேவைகள் தொடங்கப்பட்டதாக வரும் செய்திகள் மற்றும் முந்தைய அறிவுறுத்தல்களின் தொடர்ச்சியாக, இந்தியக் குடிமக்கள் விமானம் மூலமாகவோ அல்லது தரை வழியாகவோ ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஈரானில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும், தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, நியமிக்கப்பட்ட தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அது வலியுறுத்தியது. மேலும் தேவைப்படுபவர்களுக்காக தூதரகம் அவசரத் தொடர்பு எண்களையும் (+989128109115, +989128109109, +989128109102 மற்றும் +989932179359) மற்றும் மின்னஞ்சலையும் (cons.tehran@mea.gov.in) வழங்கியுள்ளது.



