எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 12

வஞ்சிப்பா

நால்வகைப் பாக்களுள் நான்காவதாக வருவது வஞ்சிப்பா. தூங்கலோசையால் ஆவது வஞ்சிப்பா. அதற்கு ஆதாரமாவது வஞ்சித்தளை. வஞ்சித்தளை ஒன்றிய வஞ்சித்தளை என்றும் ஒன்றாத வஞ்சித்தளை என்றும் இரண்டு வகைப்படும். வஞ்சிப்பாவின் உரிச்சீர்கள் கனிச்சீர்கள் ஆகும். அவை தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி மற்றும் கருவிளங்கனி ஆகியவையாகும். இவற்றைத் தவிர நிரையசையை இறுதியில் கொண்டிருக்கும் நான்கசைச் சீர்களும் வஞ்சிப்பாவில் வரும். வஞ்சிப்பாவிற்குரிய ஓசை தூங்கலோசை. அது கீழ்க்கண்டவாறு மூன்று வகைப்படும்.

ஏந்திசைத் தூங்கலோசை: ஒன்றிய வஞ்சித்தளையால் வரும் பாட்டில் இவ்வோசை அமையும். ஒன்றிய வஞ்சித்தளை என்பது கனிச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நிரை அசையாக வருவதாகும்.

அகவல் தூங்கலோசை; ஒன்றாத வஞ்சித்தளையால் வரும் பாட்டில் இவ்வோசை அமையும். ஒன்றாத வஞ்சித்தளை என்பது கனிச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நேர் அசையாக வருவதாகும்.

பிரிந்திசைத் தூங்கலோசை: ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை ஆகியவற்றோடு வேறு தளைகளும் விரவிவருவதால் இவ்வோசை அமையும்.

வஞ்சிப்பாவானது குறளடி வஞ்சிப்பா என்றும் சிந்தடி வஞ்சிப்பா என்றும் இரண்டு வகைப்படும். வஞ்சிப்பா தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடியும். ஒருபோதும் வெண்பாச் சுரிதகம் பெற்று முடியாது. சுரிதகம் என்ற வார்த்தைக்கு சாதாரணமாக முடிவுரை எனப் பொருள் கொள்ளலாம். வஞ்சிப்பாவின் சிற்றெல்லை மூன்றடியாகும். பேரெல்லைக்கு அளவில்லை. இது இரண்டடிகளுக்கு ஓரெதுகை பெற்றுவருதலும் உண்டு. வஞ்சிப்பா ஏகாரத்தில் முடியும்.

குறளடி வஞ்சிப்பா
இது இரண்டு சீர்கள் கொண்ட அடிகளால் அமையும். தனிச்சொல்லும் சுரிதகமும் கொண்டு முடியும்.

(எ-கா)

பூந்தாமரைப் போதலமர
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
நாளும்
மகிழும் மகிழ்தூங் கூரன்
புகழ்த லானப் பெருவண் மையனே…
‘நாளும்’ என்பது தனிச்சொல். செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது. இது ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் கலந்து வந்த குறளடி வஞ்சிப்பாவாகும்.

சிந்தடி வஞ்சிப்பா
மூன்று சீர்களைக் கொண்ட அடிகளால் அமைவது சிந்தடி வஞ்சிப்பா.

(எ-கா)

கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவண் இனிதிருந்து எல்லார்க்கும்
பயில்விடுவினை பத்தியலாற் செப்பியோன்
புணையெனத்
திருவுரு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே!
-திருப்புகழ்

வஞ்சிப்பாவால் ஆன தனி நூல் இல்லை. பட்டினப்பாலையிலும் மதுரைக் காஞ்சியிலும் வஞ்சியடிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

வஞ்சியடிகள் காணப்படும் சில திரைப்படப் பாடல்களும் உண்டு.

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ…..
பொன்னின்நிறம் பிள்ளைமனம் வள்ளல்குணம் யாரோ
-கவிஞர் வாலி

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி…
மங்கையொரு கங்கையென
மன்னன்ஒரு கண்ணண்எனக்
காதில்ஒரு காதல்கதை…
-கவிஞர் வாலி.

மருட்பா
மருள்- மயக்கம். வெண்பாவும் அகவற்பாவும் மயங்கி வருவதால் இது மருட்பா எனப் பெயர் பெற்றது. முன்பகுதியில் வெண்பாவாக வந்து செப்பலோசை பெற்றும், பிற்பகுதியில் அகவற்பாவாக வந்து அகவலோசை பெற்றும் வரும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களைத் தொடர்ந்து மருட்பாவை ஐந்தாவது பாவென தொல்காப்பியர் அழைக்கிறார். ஆனால் தற்காலத்தில் மருட்பாவை யாரும் கையில் எடுப்பதில்லை. இதன் இலக்கணத்தைத் தெரிந்துகொள்வதற்காகக் கால விரயம் செய்யவேண்டிய தேவையும் இல்லை. இக்காலத்திற்கு இது உதவாது.

நூற்பா
குறைந்த வார்த்தைகளில் நிறைந்த பொருளைச் சொல்வதே நூற்பாவாகும். இது அகவற்பா போன்ற அடிகளைப் பெற்றுவரினும், மோனை, எதுகை போன்ற எவ்வகைத் தொடையும் பெற்றுவராது. வடமொழியில் இதை “சூத்திரம்” என்பர். கவிஞர்களுக்கு நூற்பா அவசியம் இல்லை.

பாவினம்
இதுகாறும் நாம் பா வகைகளைப் பார்த்தோம். இனிப் பாவினங்கள் பற்றிப் பார்ப்போம். ஏற்கனவே நாம் பார்த்த நான்கு வகைப் பாக்களுக்கும் தனித்தனியே தாழிசை, துறை மற்றும் விருத்தம் என்ற மூன்று இனங்கள் இருக்கின்றன. தாழிசையில் நான்கும் துறையில் நான்கும் விருத்தத்தில் நான்கும் ஆகமொத்தம் பாவினங்கள் 12 ஆகும். அவை பின்வருமாறு:

தாழிசை
வெண்டாழிசை (வெண்+தாழிசை)
ஆசிரியத்தாழிசை
கலித்தாழிசை
வஞ்சித்தாழிசை
துறை
வெண்டுறை (வெண்+துறை)
ஆசிரியத்துறை
கலித்துறை
வஞ்சித்துறை
விருத்தம்
வெளிவிருத்தம்
ஆசிரிய விருத்தம்
கலிவிருத்தம்
வஞ்சி விருத்தம்

மேற்கண்டவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வெண்டாழிசை:
சிந்தியல் வெண்பாவைப் பற்றி நாம் முன்னரே பார்த்தோம். வெண்பாவிற்குரிய பொதுவிலக்கணம் அனைத்தும் அமையப்பெற்று, இரண்டே முக்காள் அடியில் அமைந்து, நாள்-மலர்-காசு-பிறப்பு எனும் வாய்பாட்டில் ஏதேனும் ஒன்றைப் பெற்று முடிவது சிந்தியல் வெண்பாவென்று கண்டோம். அச் சிந்தியல் வெண்பா மூன்று ஒரு பொருன்மேல் அடுக்கிவரின் அது வெண்டாழிசையாகும். இதனை வெள்ளொத்தாழிசை என்று கூறுவோரும் உளர்.

வெண்டளை பிழையாது வரின் வெள்ளொத்தாழிசை என்றும், வேற்றுத்தளை கலந்துவரின் அது வெண்டாழிசை எனவும் சிலர் கருதுகின்றனர்.

சிந்தியல் வெண்பா ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது மூன்றோ அல்லது அதற்கும் மேலோ வெண்டளை பிறழாது வரின் அதை வெள்ளொத்தாழிசை என்றும், வேற்றுத்தழை கலந்துவரின் அதை வெண்டாழிசை என்றும் கொள்வதே நலம்.

உதாரணம்

அன்னா யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னா ருடையபுலம் போல நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்
ஏடி யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து
நீடான் துறந்து விடல்
பரவா யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவா ருடைபுலம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்

இது வெண்டளையான் வந்த, ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவந்த சிந்தியல் வெண்பா. இவ்வாறு அமைவது வெள்ளொத்தாழிசை எனப்படும்.

சிந்தியல் வெண்பா வேற்றுத்தளை கலந்து வெண்டாழிசை எனப் பெயர் பெருவதுபோல், இலக்கணம் சிதைந்த குறட்பா குறட்டாழிசை என்று அழைக்கப்படும்.

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1
வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2

மேற்கண்ட இரண்டு குறட்டிழிசைப் பாடல்களும் கலிங்கத்துப் பரணியில் இடம்பெற்ற சந்தக் குறட்டிழிசைப் பாடல்கள்.

ஆசிரியத்தாழிசை
அளவொத்த மூன்று அடிகள் ஒரு பொருளின்மேல் மூன்று அடுக்கி வருமாயின் அது ஆசிரியத்தாழிசை எனப்படும்.

உதாரணம்

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
-சிலப்பதிகாரம்

மேற்கண்ட மூன்று பாடல்களும் ஒரு பொருள்மே மூன்று அடுக்கிவந்த ஆசிரியத் தாழிசையாகும்.

கலித்தாழிசை
இது கலிப்பா இனத்தைச் சேர்ந்த தாழிசை. இதனைக் கலித்தாழிசை என்றும் கலியொத்தாலிசை என்றும் யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. இஃது இரண்டு அடிகளும் பல அடிகளும் பெற்றுவரும். இதன் ஈற்றடி சீர் மிகுந்து வரும். ஏனைய அடிகள் அளவொத்தும் அளவொவ்வாமலும் சீர்களைப் பெற்றுவரும்.

உதாரணம்-1

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தி லெழாலாய்க் குறாலியரோ.
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

மேற்கண்ட பாடலில் முதல் மூன்று அடிகளிலும் அடிக்கு நான்கு சீர்கள் அமைந்துள்ளன. இறுதி அடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளது. எனவே இது கலித்தாழிசையாகும்.

உதாரணம்- 2

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

மேற்கண்ட பாடலில் முதல் மூன்று அடிகளிலும் அடிக்கு நான்கு சீர்கள் அமைந்துள்ளன. இறுதி அடியில் எட்டு சீர்கள் வந்துள்ளது. எனவே இது கலித்தாழிசையாகும்.

வஞ்சித்தாழிசை
நான்கு குறளடிகள் (இரண்டு சீர்களைக் கொண்ட அடிகள்) ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித்தாழிசை எனப்படும்.

உதாரணம்

  1. “பிணியென்று பெயராமே
    துணிநின்று தவஞ்செய்வீர்
    அணிமன்ற லுமைபாகன்
    மணிமன்று பணியிரே”
  2. “எள்னென்று பெயராமே
    கன்னின்று தவஞ்செய்வீர்
    நன்மன்ற லுமைபாகன்
    பொன்மன்று பணியிரே”
  3. “அதிதென்று பெயராமே
    வரைநின்று தவஞ்செய்வீர்
    உருமன்ற லுமைபாகன்
    திருமன்று பணியிரே” இஃது இருசீரடி நான்காய் ஒரு பொள்மேவ் மூன்றடுக்கி வந்துள்ளது.

– மனோந்திரா (தொடரும்)

1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/

2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/

3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/

4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/

5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/

6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/

7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/

8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/

9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/

10)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-10/

11)https://maduraiseithi.in/manothindras-learn-grammar/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *