
சொத்துக்காக பெற்றோர், சகோதரியை கொலை செய்த நபரை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர் கொலை செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம்,. கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென் மலகா பகுதியில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், துர்நாற்றம் வீசிய வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் வீரேந்திர வைஷ்யா(70), அவரது மனைவி அனிதா(65),. அவர்களது மகள் மீனாட்சி(45) ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில், வீரேந்திர வைஷ்யாவின் மகன் அபிஷேக் வைஷ்யா(40) என்பவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
ஒரே வீட்டிற்குள் நான்கு பேர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, சொத்து பிரச்னையில் இந்த கொலைகள் நடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அபிஷேக்கின் நண்பரான சன்னி குப்தாவை போலீஸார் கைது செய்து விசாரணை செய்த போது அதிர்ச்சிகரமான பல விவரங்கள் தெரிய வந்தன. வீரேந்திர வைஷ்யாவும், அவரது மனைவி அனிதாவும், சொத்து பிரச்னையால் அவர்களது மகன் அபிஷேக்கை ஒதுக்கி வைத்திருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், அவரது நண்பரான சன்னி குப்தாவை சந்தித்து தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி மே 31-ம் தேதி அபிஷேக் தனது நண்பர் குப்தாவுடன் இணைந்து தனது தந்தை வீரேந்திர வைஷ்யா, தாய் அனிதா, சகோதரி மீனாட்சி ஆகியோரை கொலை செய்துள்ளார்.
இதன் பின் அந்த வீட்டில் இருந்து கொள்ளையடித்த பொருட்களை பங்கிடுவதற்காக இருவரும் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது பொருட்களைப் பங்கிடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் அபிஷேக்கை அவரது நண்பர் குப்தா கொலை செய்து அவரது உடலை விட்டு விட்டு கடையைப் பூட்டி விட்டு தப்பியோடியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட குப்தாவிடமிருந்து 2 கிராம் தங்கம் மற்றும் 360 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக காவல் ஆணையர் ஜோகேந்திர குமார் தெரிவித்துள்ளார். மேலும் தான் செய்த குற்றத்தை குப்தா ஒத்துக் கொண்டதாகவும் கூறினார். சொத்துக்காக தன் குடும்பத்தைக் கொலை செய்தவரை அவரது நண்பர் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



