தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து

சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தவெகவிற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு தொலைபேசி மூலம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் விஜய்யிடம் பேசி, தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த மகத்தான வெற்றிக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த மக்கள் தீர்ப்பு, எழுச்சி பெற்று வரும் இளைஞர்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. இதை யாராலும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கப்படவும் மாட்டாது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சேவை செய்வதிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உறுதியுடன் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *