
சித்திரைத் திருவிழாவிற்காகவும், தேர்தல் திருவிழாவிற்காகவும் சென்னையிலிருந்து மகள் வர்ஷாவும், பேரன் பாரதியும் வந்திருக்கிறார்கள். பேரன் சாப்பிடும் போது மட்டும் தொலைக்காட்சி பார்க்க அனுமதி… என் அறுபது வயது அனுபவத்தில் நான் கேட்டிராத பல புதிய புதிய பாடல்களை இந்தப் பத்து நாட்களாகக் கேட்டு வருகிறேன். இப்படியெல்லாம் கூட பாட்டுகள் உண்டா என்று திகைக்க வைக்கும், அதிர்ச்சி கொள்ள வைக்கும் பாடல்கள்.. தொலைக்காட்சி ஓடாத சமயங்களில் பாரதி தானாக சில பாடல்களை முணுமுணுப்பதும் உண்டு. நேற்று அவன் மும்முரமாக கலரிங் செய்து கொண்டே பாடிய பாடல் என்னை வியப்பிலாழ்த்தி விட்டது. ஐந்து வயதுக் குழந்தை, முப்பத்தியைந்து வருடங்களுக்கு முன் வந்த கருத்தமச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் என்ற பாட்டைப் பாடினால் வியப்பாக இருக்காதா என்ன?
என் வியப்பைப் பார்த்து வர்ஷா, “இந்தப் பாட்டு இப்ப ரீமிக்ஸ்ல திரும்பவும் வந்திருக்கு.. அவன் உன் காலத்து பாட்ட பாடல்ல.. புது வெர்ஷன பாடறான்,“ என்றாள். “ஓ… இதுக்கும் ரீமிக்ஸ் வந்தாச்சா?“ என்றேன் வியப்பு தீராமல். வர்ஷா, “ இந்தப் பாட்டுக்கும் நீ ஒரு மலரும் நினைவு வெச்சிருப்பயே!“ என்றாள் சிரித்தபடி. “அதெப்படி இல்லாமல் போகும்!“ என்றேன்.
உண்மையில் இந்தப் பாடல் எனது அருமை நண்பர்கள் இருவரின் நினைவை சேர்த்துக் கிளறிவிட்டது. நான் பணியில் சேர்ந்து, மதுரைக்கு மாற்றலாகி வந்த போது, எங்கள் உரிமம் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவர் மாணிக்கம் அண்ணாச்சி. அவர்தான் எங்கள் தொழிற்சங்கப் பொறுப்பாளரும் கூட. எனக்கு அலுவலகப் பணி, தொழிற்சங்கப் பணி இரண்டிற்கும் குருநாதர். ஆள் பார்க்க கருகருவென்று, முரட்டுத் தோற்றத்தோடு, மம்முட்டி வில்லனாக நடித்த களம்காவல் படத்தில் மம்முட்டியை விரட்டிப் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்த மலையாள நடிகர் விநாயகன் மாதிரி கரடுமுரடாக இருப்பார்.
களம்காவல் பற்றி அறியாதவர்களுக்காக கூடுதல் தகவல் விநாயகன் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ‘எந்தா ஸாரே, மனசிலாயோ‘ என்று கேட்கும் வில்லன். எங்கள் பிரிவில் வெற்றிச்செல்வி என்ற மேடமும், ரத்தினம் என்ற பெரியவரும் பணிபுரிந்தார்கள். எல்லோரும் நான் பிறப்பதற்கு முன்பே வேலைக்குச் சேர்ந்தவர்கள். தியாகராஜ சுவாமிகள் வசந்தா ராகத்தில் ‘சீதம்ம மாயம்மா.. ஸ்ரீராமுடு மாகு தன்றி…‘ என்றாரே, அது போல மாணிக்கம் அண்ணாச்சி என் அலுவலக அப்பா. வெற்றிச்செல்வி என் அலுவலக அம்மா.
நான் மதுரைக்கு மாற்றலாகி வந்த 90களில் தான் சங்கத்தின் முயற்சி காரணமாக ஊழியர்களுக்கு பல்வேறு பொருளாதார பயன்கள் கிட்டின. பணி நியமனங்கள் நடந்தன. ஊழியர்கள் வீடுகள் கட்டினார்கள். வாகனங்கள் வாங்கினார்கள். திருமணம் செய்து கொண்டார்கள். குழந்தைகள் பெற்றார்கள். அனைத்திற்கும் எஸ்கேசி தருவார்கள். மறுபுறம், 1990களின் நவீன தாராளமயக் கொள்கைகளின் வருகையால் எங்களது காப்பீட்டுத் துறை பல சவால்களைச் சந்தித்த காலமாகவும் அது இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள், மனிதச் சங்கிலிகள், வெளிநடப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்று நிறுவனமே தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களில் கொந்தளித்துக் கொண்டிருந்த காலமாகவும் இருந்தது.
மாணிக்கம் அண்ணாச்சி சிக்கனத்திற்குப் பெயர் போனவர். சங்கத்தின் நிதியை அவசியமானதற்குப் பயன்படுத்தவும் மிகவும் யோசிப்பார். ஒரு பைசா தேவையில்லாமல் செலவு செய்ய அனுமதிக்க மாட்டார். இடைவிடாத அந்த இயக்க நாட்களில் ஊழியர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் வாங்கித் தர அனுமதிக்கப்பட்ட சங்கத்தின் நிதியைக் கூட பயன்படுத்த மாட்டார். நான் முன்பு கூறியவாறு வீடு வாங்கிய, வாகனம் வாங்கிய தோழர்களை இது போன்ற இயக்கங்களுக்கு டீ, மேரி பிஸ்கட் வாங்கித் தர ஸ்பான்சராகப் பயன்படுத்துவார்.
இப்படியான காலகட்டத்தில் தான் ஒரு நாள் காலை செல்வியம்மா ( நான் அவரை அப்படித் தான் அழைப்பேன்), “நேத்து ஒரு புது பாட்டு கேட்டேன்… கேட்டதும் உங்க ஞாபகம் தான் ,“ என்று அண்ணாச்சியிடம் சொன்னார். “என்னது, நம்மளப் பத்தியெல்லாம் கூட பாட்டு எழுதிட்டாய்ங்களா, அது என்ன பாட்டு? பாடுங்க…” என்றார் அண்ணாச்சி. “இல்ல.. வேண்டாம்.. அப்பறம் திட்டக் கூடாது “ என்று மறுத்தார் செல்வியம்மா. ஆளாளுக்குக் கெஞ்சிய பிறகு, “நா பாடினதுக்கு அப்பறம் கோபப்படக் கூடாது,“ என்று கண்டிஷன் போட்டு விட்டு, மிகவும் வெட்கத்தோடு, மெல்லிய குரலில்,
“கருத்த மச்சான்
கஞ்சத் தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே
பஞ்ச வெச்சு வெடிக்க வச்சான்
அப்பப்பா எப்பப்பா
பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும் “
என்று பாடிக் காட்டினார்.
அண்ணாச்சி, “கடைசீல நம்ம கஞ்சத்தனத்த, கருப்பு கலர வெச்சு லந்து பண்ணிட்டீங்க…” என்றார் சிரித்தபடி. “பொதுப்பணம்… அப்படித்தான் இருக்கணும்.. வீட்டுக்கு வாங்க… பெரிய விருந்தே வெக்கறேன்… இங்க சங்க நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்ல தா டீ, பிஸ்கட்,“ என்றார் தனது வழக்கமான கறார் குரலில். அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு சங்க நிகழ்ச்சிகளில் நன்றியுரையின் போது, அண்ணாச்சி, “இன்றைய நிகழ்ச்சிக்கு டீ, பிஸ்கட் ஸ்பான்சர் செய்த தோழர்…… அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,“ எனும் போது, பின்னாலிருந்து யாராவது ஒருவர் “கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்,“ என்று பாடுவதும், எல்லோரும் ஓ.. வென்று கூச்சலிடுவதுமாக நிகழ்ச்சி முடியும்.
காலம் நிஜமாகவே உருண்டோடி விட்டது. அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்று 15 – 20 ஆண்டுகளுக்குப் பின் நானும் அதே மாதிரி ஸ்பான்சரில் டீ வாங்கி சங்க நிகழ்ச்சி நடத்தி ஓய்வு பெற்று விட்டேன். காலத்தின் பெருங் கொடுமையாக, கரோனா பெருந்தொற்றில் அண்ணாச்சி மறைந்தார். செல்வியம்மா மகனோடு அரபு தேசமொன்றில் இருக்கிறார்.
பேரன் இந்தப் பாடலை நினைவுபடுத்தியதும் செல்வியம்மாவை அழைத்துப் பேசினேன். வழக்கமான பிரியத்தோடு பேசினார்கள். எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. “அம்மா, நா வீடியோ கால்ல வரட்டுமா?“ என்றேன். “வேண்டாம்ப்பா… இன்னொரு நா வீடியோ கால்ல நானே வர்றேன்,“ என்றார்கள். “ஏம்மா, சும்மா நைட்டி மேல ஒரு ஷால போட்டுக்கங்க. நா கட் பண்ணிட்டு விசில வர்றேன்,“ என்றேன்.
“இல்லடா தம்பி.. பல்லெல்லாம் எடுத்துருக்கேன். புண் ஆறினப்பறம் தான் பல்செட் வெக்கணும். பல்செட் வெச்சப்பறம் நானே விசில வர்றேன்,“ என்றார்.
அவர் குரலில் 30 – 35 ஆண்டுகளுக்கு முன் கருத்த மச்சான் பாட்டு பாடிய போது இருந்த அதே வெட்கம் !
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/
7)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/
8)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/
9)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-part-9/
10)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham/




அருமை.
நன்றியும் மகிழ்ச்சியும்
நினைவலைகள் நன்று. அண்ணாச்சியை தெரியாதவர்கள் வெகு சிலரே. உற்சாகமானவர்.
“எல்லோரும், என்ன வேணுனாலும் சாப்பிட்டுங்க என்று அன்போடு சொல்லி வெறும் இட்லி, தோசை மட்டும் (புரோட்டா கூட இல்லாத) கிடைக்கும் தெருவோர கடையில் கொண்டுவிடும், பொதுநிதியை பொறுப்பாக கையாளும் தலைவர்கள் கொண்ட இயக்கமாயிற்றே… 🚩
நன்றியும் மகிழ்ச்சியும்