
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் மூத்த பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ரத், வடக்கு 24 பர்வானாஸ் மாவட்டத்தில் நேற்று(மே 6) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
சுவேந்து அதிகாரியின் உதவியாளராக பணியாற்றி வந்த ரத், மத்யம் கிராமின் டொல்தலா பகுதியில் உள்ள டோஹாரியா அருகே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சுமார் இரவு 10.30 மணியளவில் சுடப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரத்தின் காரை பின் தொடர்ந்து வந்து வழிமறித்த அவர்கள், கண்ணாடி வழியாக மிக அருகில் இருந்து சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். டோஹாரியா சந்திப்பு அருகே ஒரு சிறிய நான்கு சக்கர வாகனம் முதலில் ரத்தின் காரை வழிமறித்ததாகவும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஒருவர், சந்திரநாத் ரத்தை சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ரத், அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ரத்தின் கார் ஓட்டுநரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
“பாதிக்கப்பட்ட நபர், மார்பில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்; அவற்றில் ஒரு குண்டு அவரது இதயத்தைப் துளைத்திருந்தது. மற்றொரு குண்டு வயிற்றுப் பகுதியில் பாய்ந்திருந்தது. அவரை உயிர்ப்பிக்கவோ அல்லது காப்பாற்றவோ எந்த வாய்ப்பும் இருக்கவில்லை,” என்று ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் சந்திரநாத் ரத் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்தத் தொகுதியில்தான் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதுகுறி வைத்து நடத்தப்பட்ட படுகொலை என்று பாஜக கூறியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டி விடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த சுவேந்து அதிகாரி, நள்ளிரவில் மருத்துவமனை விரைந்தார். அப்போது அவர் கூறுகையில், ” இது மனதை உலுக்கும் மற்றும் இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்ட படுகொலை. தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது கொலையாளிக் இரண்டு, மூன்று நாட்களாக அப்பகுதியை நோட்டமிட்டிருந்ததை தெளிவாக உணர்த்துகிறது. இந்தப் படுகொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது,” என்று குற்றம் சாட்டினார். .
சந்திரநாத் ரத் படுகொலையைக் கண்டித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போதிலும், கடந்த மூன்று நாட்களாக பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்களில், மத்யம்கிராமில் சந்திரநாத் ரத் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.



