வழிகாட்டும் தமிழகம்… மேற்கு வங்கத்தில் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து திட்டம்!

மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் இலவச பேருந்து பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது. அத்துடன் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் மாதம் உதவித் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களான இந்த இரண்டு திட்டங்களையும் தற்போது பாஜக ஆளும் மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்றதும் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி மேற்கு வங்கத்தில் ஜூன் 1 -ம் தேதி முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்படி மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். அது போல அன்னபூர்ணா பந்தர் திட்டத்தின் கீழ் ஜூன் 1-ம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்..

மேலும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சமூக நலத் திட்டங்களும் எந்த தடையுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர்ர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *