டெல்லியில் மீண்டும் பயங்கரம்: பேருந்தில் பெண்ணைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணைக் கடத்தி இருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் 30 வயதான திருமணமான பெண் ஒருவர் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். மே 11-ம் தேதி இரவு வேலைக்குச் சென்று விட்டு சரஸ்வதி விஹார் அருகே உள்ள பி பிளாக் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு படுக்கை வசதி கொண்ட பேருந்து நின்றுள்ளது. அந்த பேருந்து வாசலில் நின்றவரிடம் அந்த பெண் நேரம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபரும், அந்த ஓட்டுநரும் பெண்ணை பேருந்துக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின் பேருந்தின் கதவை அடைத்து அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அங்கிருந்து, நங்லோய் மெட்ரோ ரயில் நிலையம் வரை சுமார் 7 கிமீ தூரத்தை இரண்டு மணி நேரம் அப்பேருந்து பயணித்துள்ளது. இதற்கிடையில் பேருந்தில் இருந்த இருவரும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின், அதிகாலை சுமார் 2 மணி அளவில் அப்பெண்ணை பேருந்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பிதாம்பரா பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தாயான அந்த பெண், கொடுத்த புகாரின் அடிப்படையில் ராணி பாக் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், குற்றத்தில் நடத்துநர், ஓட்டுநர் உமேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அடையாம் காணப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் பிஹார் பதிவெண் கொண்ட பேருந்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராணி பாக் போலீஸார், குற்றவாளிகள் இருவர் மீமு பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) 64(1) (பாலியல் வன்கொடுமை), 70(1) (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 3(5) (பொது நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “பேருந்தில் திரைச்சீலைகள் இருந்ததால், உள்ளே நடந்த சம்பவம் வெளியில் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால், குடும்பச் சூழல் காரணமாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றனர். நிர்பயா சம்பவத்தில் இருந்து இன்னும் டெல்லி பாடம் கற்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *