நினைவே சங்கீதம் 13: உள்ளத்திலே உள்ளது தான் உலகம்

போன வாரம் அப்பாவின் 37வது நினைவு நாள் வந்து போனது. அப்பா 1950களில் பட்டயக் கணக்காளர் படிப்பு படித்தவர். அந்தக் காலத்தில் யாராவது “என்ன படிச்சிருக்க?“ என்று கேட்கும் போது அப்பா “சி.ஏ” என்று சொன்னால், ”ஏண்டா, பி ஏ ல எடம் கிடைக்கல்லயா?“ என்று கிண்டலாகக் கேட்பார்களாம் ! அப்பா இந்தியா முழுவதும் வேலை பார்த்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம், உருது எழுத, படிக்க, பேசத்தெரிந்தவர். பஞ்சாபி, சீக்கியர்கள் பேசும் குர்முகி ஆகியவை பேச மட்டும் தெரியும்.

கோகுலம் பத்திரிகையின் முதல் இதழை எனக்கு வாங்கித் தந்தவர். ராஜாஜியின் வியாசர் விருந்தும், சக்ரவர்த்தித் திருமகனும், அமர்சித்ரா கதாக்களும் அவர் மூலமாகவே எனக்கு அறிமுகமாகின. அவர் எனக்கு விட்டுச் சென்ற இரண்டே இரண்டு சொத்தாக மிக மிகப் பழமையான ஷேக்ஸ்பியரின் முழுத் தொகுப்பும், டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும் என் நூலகத்தில் இப்போதும் இருக்கின்றன.

தியாகப் பிரும்மத்தின் சுஜன ஜீவனா அவர் மூலமாகத் தான் தெரிந்தது. அப்பாவின் நண்பரும், மதுரை சோமு அவர்களின் சீடருமான மதுரை சுவாமிநாதன் அப்பாவிற்காக ஒரு நாள் வீட்டில் பாடிய போதுதான் எனக்கு தெலியலேது ராமா பக்தி மார்க்கமு அறிமுகமானது. கல்கி ஒரு கமர்ஷியல் எழுத்தாளர் என்று யாரோ சொன்ன ஒரு நாளில் அப்பா பொன்னியின் செல்வனின் மூன்றாம் பாகத்தில் நந்தி வளர்ந்தது என்ற அத்தியாயத்திலிருந்து, அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார்! எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணகங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்குத் தக்கபடி பிராகாரங்கள் இருக்க வேண்டாமா? இப்போது சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல. எனக்கு இராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். சோழ சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் ஆலயத் திருப்பணி அதிகாரியாக என்னை நியமிக்கும்படி கேட்டுக் கொள்வேன்…” என்று உணர்ச்சிவசப்பட்டு கிட்டத்தட்ட மனப்பாடமாக ஒப்பித்து, “ தஞ்சை பெரிய கோவில் பற்றிய அருண்மொழியின் மனச்சித்திரத்தைக் காட்டிய கல்கியை எப்படி கமர்ஷியல் எழுத்தாளர் என்று சொல்லப் போச்சு?“ என்று சண்டை போட்ட பிறகு தான் நானும், கண்ணனும் பொ.செவை திரும்பவும் சீரியஸாக இன்னொரு முறை படித்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணதாசனை அவர்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.

குமுதத்தில் கண்ணதாசனின் விளக்கு மட்டுமா சிவப்பு தொடராக வர ஆரம்பித்த போது, அப்பா வீட்டில் குமுதம் வாங்க வேண்டும் என்றார். அம்மா “அதுக்கு ஜெயராஜ் ரொம்ப அசிங்க அசிங்கமா படம் போடறானே … இவன் வேற அத வரி விடாம படிக்கறான்” என்று என் ஒழுக்கம் பற்றி கவலை தெரிவிக்க, அப்பா, “நாம வாங்காட்டா, அவன் ஜனதா கட்சி மன்றத்துல போய் படிக்கப் போறான்… எல்லாத்தையும் படிக்கட்டும்,.. கண்டதைக் கற்று பண்டிதனாகுன்னு சொல்லியிருக்கா…“ என்றார்.
அப்பாவைப் பெற்ற அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட, சிற்றன்னையால் வளர்க்கக்பட்டவர் அப்பா. அதனால் கஷ்டங்கள் பல பட்டவர். தாத்தா காலத்திற்குப் பிறகு, குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துச் சண்டையில் அப்பா எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தது. எனக்கு என் படிப்பு போதும் என்று எங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு, எங்கள் பூர்வீக வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி ஒரு வாடகை வீட்டில் குடியேறினார் அப்பா. அப்பாவின் நண்பர்களும், என் அம்மாவின் தாய்மாமாக்களும் இதை இப்படி விடக் கூடாது என்ற போதும், எங்கள் அப்பா, “சண்டை போட வேண்டாம்.. யாரோ எடுத்துப் போகவில்லையே.. தம்பிகள் தானே..“ என்று சொல்லி விட்டார்.

அப்போது தான், சிவாஜியின் அவன் தான் மனிதன் வந்திருந்தது. அப்பா

கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா…
என்ற கண்ணதாசனின் வரிகளைச் சொல்லி, “கண்ணதாசன் எனக்குன்னே எழுதியிருக்கானே…“ என்றார். அப்பாவின் நண்பர்கள், “ பிள்ளளைகள நெனக்காம.. இப்படியே தத்துவம் பேசுங்க… “ என்றார்கள். அப்பா, “பிள்ளைகளுக்கு இதத் தானே நா மெயினா சொல்லித் தரேன்,” என்றார்.

அதன் பிறகு எத்தனையோ கஷ்டங்கள்… எப்படியோ உருண்டு புரண்டு அண்ணனும், நானும் மேலே வந்தோம். எங்களிடம் இருப்பது கையளவா, கடலளவா என்பதைப் பற்றி நாங்கள் இருவருமே ஒரு போதும் நினைத்துப் பார்த்துக் கவலையோ, பெருமிதமோ கொண்டதில்லை. இப்போது கையில் கடலளவு இருந்தாலும் மயங்கவில்லை!
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா.. அதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் என்று அப்பாவும், கண்ணதாசனும் சொன்னதைத் தான் அனுதினமும் நாங்கள் நினைத்துக் கொள்கிறோம் !
– ச.சுப்பாராவ் (தொடரும்)

இப்போதே பகிருங்கள்

5 Comments

  1. Great Father. Great Son. My opinion on you day by day increased Sai. You are not only on Good Writer,Good Employee,All ways you are a Good Son, Good Husband and Good Father and Good Grand Father. Now You are one of the my favourite one, even though we met 20 years and above. But contact through the stories. God will give good health and strength always to you.

  2. ரொம்ப மகிழ்ச்சியும் நன்றியும் மகேஷ்

  3. எத்தனையோ முறை கேட்ட பாடல்தான். ஆனால் பாடலின் உட்பொருளை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறோம். இவ்வரிகளை எழுதிய கண்ணதாசன் கூட, தான் எழுதிய வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது வரிகள் பலருடைய வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது புரிகிறது. வாழ்வின் சூட்சுமத்தை கண்ணதாசனிடம் வாங்கி எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள். நாங்களும் அப்படி வாழ முயற்சிக்கிறோம்… 🙏🏿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *