நினைவே சங்கீதம் 12: புண்ணான பொன்னான மனசு

நாம் சிறுவயதில் கிண்டல் செய்த எத்தனையோ விஷயங்களை வயதான பிறகு மரியாதையாகப் பார்க்க வைக்கிறது காலம். தேர்தல் முடிவுகள் தந்த மனவருத்தத்தில் செய்திகளைத் தொடர்ந்து பார்க்க முடியாத ஒரு மனஇறுக்கத்தில் குறிப்பிட்ட சேனல் என்றில்லாமல் கை போன போக்கில் சேனல் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் அந்தப் பாட்டைக் கேட்டு என் சர்ஃபிங்கை சற்று நிறுத்தினேன். மனம் என் நினைவுகளில் சர்ஃபிங் செய்ய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் இப்போது இருப்பது போல் குழந்தை பிறந்தால் ஐயரிடம் கேட்டோம், ய அல்லது ருவில் ஆரம்பிக்கிற மாதிரி பேர் வைக்கச் சொன்னார் என்று யஷஷ்வேதிகா, யஷிலா, யாம்யா என்றோ, ருத்வி, ருஹிஜா என்றோ இணையத்தை அலசி ஆராய்ந்து பெயர் வைக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஏரியா முழுக்க மொத்த ஜனத்தொகையும் மூன்று நான்கு பெயர்களுக்குள் அடங்கிவிடும். நெட்டை சம்பத், குட்டை சம்பத், வெள்ளை சம்பத், கறுப்பு சம்பத் என்று எல்லோரும் தீப்பொறி திருமுகம் போல் அடைமொழியோடு அழைக்கப்படுவார்கள். லலிதா, அமுதா, வசந்தா, கண்ணன் என்ற இந்த பொதுப் பெயர்கள் எல்லாவற்றிலும் இந்த அடைமொழிகள் அடையாளமாக இணைந்து கொள்ளும். கண்ணன்களில் மட்டும் மிக்சி கண்ணன், நாய்க்கண்ணன், சித்தப்பா கண்ணன் என்று மூன்று வித்தியாசமான கூடுதல் கண்ணன்கள் !

மிக்சி ரிப்போ் செய்த கண்ணன், நாய் வளர்த்த கண்ணன் என்று பெயர் காரணங்கள் தெரிந்தாலும், சித்தப்பா கண்ணன் யாருக்கு சித்தப்பா என்பது இன்று வரை எனக்குத் தெரியாத மர்மமாகவே இருக்கிறது! ரஜினி, கமல் மன்றங்களை ஏற்கெனவே தளபதி ஏ.பி.முத்துமணியும், எம்.பி. மார்நாடும் கைப்பற்றி விட்டதால், சித்தப்பா கண்ணன் இரண்டாம், மூன்றாம் நிலை கதாநாயகர்களுக்கும், அனுராதா, பபிதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடன நடிகைகளுக்கும் மன்றங்கள் ஆரம்பித்து ஏரியாவில் பிரபலமாக முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனிடம் எல்லா நடிகைகளும் கையெழுத்திட்ட புகைப்படங்கள் இருந்தன. அதிலும் நடிகை பபிதாவின் படம் அத்தனை அழகு..

திடீரென்று சித்தப்பா கண்ணனின் மன்ற நடவடிக்கைகள் குறைந்து போயின. குறைவு என்ன, நின்று போயின. ஒரு நண்பனின் அக்காவின் கல்யாணத்தில் அவனைப் பார்த்த போது, பழைய கலகலப்பு இல்லாமல் இருந்தது தெரிந்தது. மாப்பிள்ளை அழைப்பு முடிந்த இரவில், எல்லோரும் ரவுண்டாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டு இருந்த ஜாலியான நேரம். எல்லோரும் சித்தப்பா கண்ணனைப் பாடச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்க, அவன் டி.ராஜேந்தர் பாணியில் நெற்றியில் விழுந்து கண்ணை மறைக்கும் முடியை அவ்வப்போது தள்ளி விட்டுக் கொண்டு, எங்கோ விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் எல்லோருமே தம் அபிமான நடிகரின் உடல்மொழியை தாங்களும் வெளிப்படுத்துவார்கள். சந்திரமௌலி என்ற எங்கள் நண்பன் ஒருவன் சிவாஜி, பாடல் காட்சிகளில் செய்யும் வாய் கொணஷ்டைகளை சாதாரணமாக பேசும் போதே செய்து உயிரை வாங்குவான் ! ரொம்பவும் கெஞ்சிய பிறகு, சித்தப்பா கண்ணன்
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆச – நீ
வைக்காத பொண்ணு மேல ஆச..
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா…
என்று அவன் பாடப் பாட நண்பர்கள் ஓ..வென்று கத்தி,. ஊளையிட்டு அவனை பாடவே விடவில்லை. ஆனாலும், அவன் அத்தனை உருக்கமாகப் பாடி முடித்தான். கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு நான் எந்த வம்பு தும்புக்கும் போகாத படிப்பாளி அம்பி என்பது தெரியுமென்பதால், சித்தப்பா கண்ணனின் இந்த சோகப் பாட்டுப் பின்னணி எனக்குத் தெரியாது என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள். “என்ன சித்தப்பா, பாட்டுக்கு நம்ம கோஷ்டி இப்படி சவுண்ட கொடுக்கறாய்ங்க… லவ் ஃபெயில்யூரா?“ என்றேன். சித்தப்பா கண்ணன் ஒரு கணம் டி.ராஜேந்தராக மாறி, தலை முடியை நெற்றியிலிருந்து பின்னுக்குத் தள்ளி, “நாங்க எல்லாம் சோகத்துல சொகம் காண்றவய்ங்க,“ என்றான். அவன் சோகத்தைப் பார்த்து அப்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. பின்னர் அவனைப் பார்க்கும் போதெல்லாம்,
பலநாளா பேசிச் சிரிப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
என்றோ
அன்று கையத் தானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
என்றோ
பாடி அவனை இம்சை செய்து மகிழ்வோம்.
தொலைக்காட்சி
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்தாக்குங்களே..
கண்ணீரை மருந்தாக்குங்களே…
என்று தொகையறா பாடும் அந்த ஒரு சில கணங்களில் நான் மிகப் பெரிய காலப் பயணம் செய்து முடித்திருந்தேன். அது சுபபந்துவராளியா? சக்ரவாகமா, இல்லை சிவரஞ்சனியா? டி.ராஜேந்தர் நாளும் உந்தன் உறவை நாடி வந்த பறவை என்றும், எனது கானம் உன் காதில் விழவில்லையா என்றும் ரசிகமனங்களை உருக்கிய ஒரு சிவரஞ்சனி எக்ஸ்பர்ட் என்ற போதிலும் இந்தப் பாடலில் இசையை விட பாடல் வரிகளில் தான் அவர் கவனம் செலுத்தியிருப்பதாகத் தோன்றியது.

சித்தப்பா கண்ணனின் காதலி படத்தில் வரும் அமலாவா? இல்லை எனக்கு அடையாளம் தெரியாத அந்த இன்னொரு நடிகையா? யார் ஜாடை என்றாலும் பிரிவு என்பது துயரம்தான். எளியவனின் காதலை ஏளனத்திற்கு உரியதாக நினைத்த என் இளமையின் அறியாமையை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு சாதாரணனால், சோகத்தில் சுகம் காண்பதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும்? உயிரையா விட முடியும்? இப்போது நண்பர்கள் எல்லோரும் பணி ஓய்வு பெற்று விட்டோம். எல்லோருமே பொழுது போகாமல் பழைய நண்பர்களை விரட்டி விரட்டித் தேடி வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பொன்னா மனசே கேட்டதிலிருந்து நான் இணைக்கப்பட்டிருக்கும் அத்தனை குழுக்களிலும் சித்தப்பா கண்ணனைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். அவனைக் கண்டுபிடித்து, அவனது சோகத்தை கேலி செய்த எங்கள் துடுக்குத் தனத்திற்கு மன்னிப்புப் கேட்க வேண்டும்!
ச.சுப்பாராவ் ( தொடரும்)

  1. https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
  2. https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
  3. https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
  4. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
  5. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
  6. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/
  7. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/
  8. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/
  9. https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-part-9/
  10. https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham/
  11. https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive/

இப்போதே பகிருங்கள்

3 Comments

  1. கண்ணன் கிடைத்து விடுவார். தொடருங்கள் மதுரை செய்தியில் நினைவே சங்கீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *