
விருத்தம்
சங்க காலத்தில் விருத்தப் பாக்கள் இல்லை. இவை பிற்காலத்தில் தோன்றியன. விருத்தங்கள் நான்கு வகைப்படும்.
1) வெளிவிருத்தம்- இது வெண்பாவின் இனமாகும்.
2) ஆசிரிய விருத்தம்- இது ஆசிரியப்பாவின் இனமாகும்.
3) கலிவிருத்தம்- இது கலிப்பாவின் இனமாகும்
4) வஞ்சி விருத்தம்- இது வஞ்சிப்பாவின் இனமாகும்.
மேற்கண்ட நான்கு விருத்தங்களில் வெளிவிருத்தம் சிறப்பாக அமையாமையால் அது மறைந்தொழிந்துவிட்டது. ஆசிரிய விருத்தமும் கலிவிருத்தமும் செழித்தோங்கி வளர்ந்தன. வஞ்சி விருத்தம் மிகக் குறைந்த அளவில் பயன் படுத்தப் படுகிறது. சிலப்பதிகாரம் கானல்வரிப் பாடல்களில் இளங்கோவடிகள் விருத்தப் பாக்களை வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார். இடைக்காலத்தில் பக்தி இலக்கியம் தோன்றிய போது ஆழ்வார்களும் நாயன்மார்களும் விருத்தப் பாக்களை அதிகமாகப் புனைந்தனர். திருத்தக்கத் தேவர் தனது சீவகசிந்தாமணி எனும் நூல் முழுவதையும் விருத்தப் பாக்களிலேயே இயற்றியுள்ளார். விருத்தப் பாக்களைச் செப்பமுறச் செய்தவர் 12- ம் நூற்றாண்டில் தோன்றிய கம்பரேயாவார். எனவேதான் அவர் “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” எனப் பாராட்டப்பட்டார்.
விருத்தம் இசையோடு பாடக் கூடியது ஆகையால், அதைப் படிப்போருக்கு சலிப்புத் தட்டுவதில்லை. மாறாகப் படிப்போரைக் களிப்படையச் செய்யும். இன்றைய காலம்வரை கவிஞர்களால் விருத்தப் பாக்கள் விருப்பிப் புனையப்பட்டு வருகின்றன. கற்போரைச் சுண்டி இழுக்கும் விருத்தப் பாக்களை சற்று விரிவாகப் பார்ப்பதே நலம்.
வெளிவிருத்தம்
இது வெண்பாவின் இனம் என்பதை முன்பே பார்த்தோம். இதைப் பெயரளவிற்குத் தெரிந்துகொண்டால் போதும். இது நான்கடி பெற்றுவரும். அடிதோறும் ஐந்து சீர்கள் இருக்கும். ஐந்தாவது சீர் தனிச்சொல்லாக வரும்.. இது சில சமயம் மூன்றடியிலும் வருவதுண்டு.
(எ-கா)
ஆவா !’ என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் – ஒருசாரார்;
கூகூ! என்றே கூவிளி கொண்டார் – ஒருசாரார்;
மாமா ! என்றே மாய்ந்தனர் நீந்தார் – ஒருசாரார்;
ஏகிர் நாகீர் ! என்செய்தும் ! என்றார் -ஒருசாரார்;
-யா. கா. 27. 41. மேற்.
இது நான்கடியால் வந்த வெளிவிருத்தம்.
உற்ற படையானார் பெற்ற பகையினார்- புறாவே!
பெற்ற முடையார் பெருஞ்சிறப் பாண்டகை- புறாவே!
மற்றை யவர்கள் மனையிற் களிப்பதே- புறாவே!
-யாப்பருங்கல விருத்தி
இது மூன்றடியால் வந்த வெளி விருத்தம்.
ஆசிரிய விருத்தம்
ஆசிரிய விருத்தம் ஆசிரியப்பாவின் இனமாகும். இது நான்கு கழிநெடிகளைக் கொண்டிருக்கும். அதாவது ஆறு சீர்களுக்குக் குறையாமல், 6 7 8 9 12 14 16 32 போன்ற எண்ணிக்கையில் சீர்களைக் கொண்டிருக்கும். நான்கு அடிகளும் அளவொத்த அடிகளாக ஒரே சந்தத்தில் அமையும். அதாவது குறிப்பிட்ட சந்த வாய்பாட்டில் அனைத்து அடிகளும் அமைந்திருக்கும். அறுசீர் விருத்தம் எனில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைய வேண்டும். எழுசீர் விருத்தம் எனில் முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைய வேண்டும். எண்சீர் விருத்தத்தில் முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் (பொதுவாகச் சந்த வேறுபாடு நிகழும் இடத்தில்) மோனை அமைதல் சிறப்பு. கழிநெடியால் ஆசிரிய விருத்தம் வருகிறபடியால் ஓரடியானது இரண்டாகவோ மூன்றானதாகவோ மடக்கி எழுதப்படும். நான்கு அடிகளிலும் ஒரே எதுகை அமைந்து வரவேண்டும். அறுசீர், எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தங்கள் மட்டுமே சிறப்புடையவை. எட்டுக்குமேல் சீர்கள் இருக்குமாயின் அவை சிறப்பில்லா விருத்தங்கள் ஆகும்.
(உ-ம்)
வெய்யிற்கேற்ற நிழல் உண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
மேற்கண்ட பாடல் மா மா காய் மா மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.
தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க,
குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட,
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ
-கம்பர்
இப்பாடல் விளம் மா தேமா விளம் மா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிர விருத்தம் ஆகும். விளம் என்றால் கருவிளமாகவும் இருக்கலாம் அல்லது கூவிளமாவாகவும் இருக்கலாம். மா எறால் தேமாவாகவும் இருக்கலாம் அல்லது புளிமாவாகவும் இருக்கலாம். ஆனால் தேமா எனச் சொல்லப்படும் இடங்களில் தேமாச் சீர்கள் மட்டுமே வரவேண்டும். புளிமாச் சீர்கள் வரக்கூடாது. அவ்வாறே மேற்கண்ட பாட்டில் மூன்றாம் சீர்களும் ஆறாம் சீர்களும் தேமாச் சீர்களாகவே வந்துள்ளன.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
-பாரதி
மேற்கண்ட அறுசீர் விருத்தம் காய் காய் காய் காய் மா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது. முதற்சீரிலும் சந்தம் மாறுகின்ற ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருப்பதை நோக்குக!
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
-பாரதி
இந்த எழுசீர் விருத்தம் விளம் மா விளம் மா விளம் விளம் மா என்ற வாய்பாட்டில் அமைந்திருக்கும் ஒரு இனிய பாடல் ஆகும். நான்கு சீர்கள் முதல் அடியிலும் மூன்று சீர்கள் இரண்டாம் அடியிலும் மடக்கி அச்சிடப்பட்டுள்ளன. அவ்வாறு அச்சிடுவதே மரபு. முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் சிறப்பாக மோனை அமைந்துள்ளது.
அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
அடியனேன் மனத்தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
சிந்தைநைந் துலகிடை மயங்கும்
மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
மதிநதி வளர்சடை மணியே.
-திருவருட்பா
இந்தப்பாடலும் மேலே உள்ள பாடலுக்குரிய வாய்பாட்டிலேயே அமைந்த எழுசீர் ஆசிரிய விருத்தமாகும்.
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.
– திருநாவுக்கரசர் தேவாரம்
இந்த எண்சீர் விருத்தம் காய் காய் மா தேமா காய் காய் மா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது. எண்சீர் விருத்தத்தில் முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைய வேண்டும். மேற்கண்ட பாடலில் அவ்வாறே அமைந்திருக்கிறது. மேலும் எண்சீர் விருத்தம் நான்கு நான்கு சீர்களாக மடக்கித்தான் எழுதவும் அச்சடிக்கவம் படும்.
எண்சீர் விருத்தம்வரைத் தெரிந்துகொண்டால் போதும். அதற்கு மேலுள்ளவை சிறப்பில்லாதவை என்பதால் அவற்றை விட்டுவிடலாம்.
கலிவிருத்தம்
நான்கு சீர்களைக் கொண்டு நான்கு அடிகளால் அமையும் விருத்தத்தைக் கலிவிருத்தம் என்பர்.
இது அளவடியில் இருப்பதால் இதில் பொழிப்பு மோனை அமைய வேண்டும். அதாவது முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைய வேண்டும். ஒவ்வொரு அடியிலும் பதினோறு எழுத்துக்களோ அல்லது பன்னிரண்டு எழுத்துக்களோ இருப்பது சிறப்பு.
(உ-ம்)
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
– கம்ப ராமாயணம் பாயிரம்
இக்கலிவிருத்தம் மா விளம் விளம் விளம் எனும் வாய்பாட்டால் அமைந்துள்ளது.
பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்
மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற் றிலனவன் கமலக் கண்களால்
– கம்பராமாயணம், சுந்தரகாண்டம் – 402
இக்கலிவிருத்தம் மா விளம் மா விளம் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
வெய்யோன் ஒளி, தன் மேனியின் விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்,
மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,
ஐயோ! இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்.
-கம்பர்
இது கனி கனி கனி மா என்ற வாய்பாட்டில் அமைந்த சந்தக் கலிவிருத்தம் ஆகும்.
வஞ்சி விருத்தம்
சிந்தடி அதாவது மூன்று சீர்களைக் கொண்ட அடி நான்காய் அமைவது வஞ்சி விருத்தம். இது இலக்கியங்களில் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு
ஊனு யர்ந்த உரத்தினால்
மேனி மிர்ந்த மிடுக்கினான்
தானு யர்ந்த தவத்தினால்
வானு யர்ந்த வரத்தினான்
– கம்பராமாயணம், யுத்தகாண்டம்- 1378
இது மா மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.
–மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/
6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/
7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/
8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/
9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/
10)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-10/
11)https://maduraiseithi.in/manothindras-learn-grammar/



