எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 13

துறை
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பாவின் இனங்களைப் பார்த்துவருகிறோம். சென்ற வாரம் தாழிசையைப் பார்த்தோம். தற்பொழுது நான்கு பாக்களுக்கும் உள்ள துறைகளைப் பார்ப்போம்.

வெண்டுறை
இது வெண்பாவின் இனம். இது மூன்று அடிகள் முதல் ஏழு அடிகள்வரை பெற்றுவரும். இது பிற்கால யாப்பிலக்கணத்தில் வெண்பாவின் இனங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. சீர் வரையறையைப் பொருத்தவரை மேலுள்ள அடிகளெல்லாம் நான்கிலிருந்து எத்தனை சீர்களில் வேண்டுமாயினும் அமையும். கீழுள்ள அடிகளில் மூன்று சீர்களுக்குக் குறையாமல் வரவேண்டும். மேலுள்ள அடிகளிலுள்ள சீர்களைவிட கீழுள்ள அடிகளில் சீர்கள் குறைந்து வரவேண்டும்.

ஓரொலி வெண்டுறை: முதலடியில் முதலில் இருக்கின்ற இரண்டு சீர்களுக்கிடையே உள்ள தளை மற்ற அடிகள் அனைத்திலும் பயின்று வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும்.

வேற்றொலி வெண்டுறை: ஒவ்வொரு அடியின் முதல் இரண்டு சீர்கள் வெவ்வேறு தளைகள் பெற்றுவந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும். அனைத்து அடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.

சில பாடல்கள் இரண்டு எதுகைகள் பெற்றும் வருவதுண்டு. அவற்றையும் வேற்றொலி என்ற வகையில் வைக்க வேண்டும். இது இரண்டாவது வகை வேற்றொலி.

ஈற்றடியில் மூன்று சீர்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். வெண்டுரையில் முதல் இரண்டு சீர்களுக்கிடையில் மட்டும் தளை பார்த்தால் போதும். மற்ற சீர்களில் தளை பார்க்க வேண்டியதில்லை. சீர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால் போதும். வெண்டுறையில் கனிச்சீர்களையும் சேர்த்து 28 வகைச் சீர்களும் வரும்.

(உ- ம்)

தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்ந்துவிழும் பிளிற்றி ஆங்கே.
(யாப்பருங்கலக் காரிகை)

மூன்றடியாய், முதலடியை விடப் பின்னிரண்டடிகளும் இருசீர் குறைந்து வருவதால் இது வெண்டுறையாகும். பாடல் முழுதும் ஒரே ஓசையமைப்பில் (ஒரே மாதிரிச் சீர்கள்) உள்ளமையால் இது ஓரொலி வெண்டுறை.

கல்லாதார் நல்லவையுட் கல்லேபோல்
சென்றிருந்தால் கருமம் யாதாம்? இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே
ஏமுற்றால் இயைவ தென்னாம்? பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப்
பூண்டாலும் பொலிவ தென்னாம்?
புல்லாதார் பொய்க்கேண்மை
புனைந்துரைத்தால் ஆவதென்னே!
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?”
(யா. வி. 67 மேற்.)

இஃது ஐந்தடியாக வந்து, ஈற்றடி இரண்டும் இரண்டிரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறையாகும்.

குறள் வெண்செந்துறை

இது குறள் வெண்பாவின் இனமாகும்.

1) இஃது அளவொத்த இரண்டடிகளால் வரும். பொதுவாக நான்கு சீர்களால் வரும் எனினும் அதற்கு மேலும் ஆறு, எட்டு சீர்களாலும் வரும். எத்தனை சீர்கள் பெற்று வந்தாலும் இரண்டு அடிகளும் அளவொத்து வரவேண்டும்.
2) விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றிருத்தல் வேண்டும்.
3)இரண்டு அடிகளுக்கும் ஒரே எதுகை அமைய வேண்டும். இதற்குத் தளை வரையறை கிடையாது.
4) உரிய இடங்களில் மோனை அமைதல் வேண்டும்.

(உ-ம்)

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
-ஆத்திச்சூடி

கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
-கொன்றை வேய்ந்தன்

இவை ஈரசை நாற்சீர் கொண்ட ஈரடியால் வந்த குறள் வெண்செந்துறைப் பாக்கள்.

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே
இஃது அறுசீர்கொண்ட ஓரெதுகை பெற்ற பாடல்.

“மா மா காய் மா மா காய்” என்ற வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

ஆசிரியத்துறை
ஆசிரியத்துறை இக்காலத்திற்குப் பயன்படாது. அப்படியொரு பாவினம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதும்.

கலித்துறை
நெடிலடி (ஐந்து சீர்களைக் கொண்ட அடி) நான்கு பெற்று நடப்பது கலித்துறை எனப்படும். இதைக் கலிநிலைத்துறை என்றும் அழைப்பர். இதிலுள்ள நான்கு அடிகளும் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒவ்வோர் அடியிலும் முதற் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைய வேண்டும். ஐந்தாம் சீரிலும் மோனை அமையலாம். இதில் சந்த வேறுபாடுகள் உண்டு. இதில் கனிச் சீர்களும் வருவதுண்டு.

(உ- ம்)

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே….
சம்பந்தர் தேவாரம் 1058

இப்பாடல் விளம் மா விளம் மா காய் என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.

காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடித்
தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்!
தாயிலும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப்
பாயல் முகுந்தன் கோயில் அரங்கம் பணியீரே
– திருவிளையாடற் புராணம்

கூவிளம் தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் என்ற வாய்பாட்டில் மேற்கண்ட கலித்துறைப் பாடல் அமைந்துள்ளது.

எனக்கு நல்லையு மல்லை நீ யென் மகன் பரதன்
தனக்கு நல்லையு மல்லை அத்தருமமே நோக்கில்
உனக்கு நல்லையு மல்லை வந்தூழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்!
-கம்பராமாயணம்-மந்தரை சூழ்ச்சிப்படலம்- 65

இப்பாடல் மா விளம் விளம் விளம் மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளது.

கலிமண்டிலத்துறை

பொதுவாக ஒரு பாடல் ஒரு பொருளை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் சில பாடல்களில் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு பொருளைக் கொண்டிருக்கும். எந்த அடியை எந்த இடத்தில் போட்டாலும் பொருள் மாறாது. கலித்துறையைச் சேர்ந்த இத்தகைய பாடல்களை நாம் கலிமண்டிலத்துறை என அழைக்கிறோம்.

(உ-ம்)

மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்;
தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;
தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;
சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்”
-யாப்பருங்கல விருத்தி

கட்டளைக் கலித்துறை

ஓரடியில் இத்தனை எழுத்துக்கள் தான் இருக்க வேண்டும் என்ற நியதி அல்லது கட்டளைக்குட்பட்டு எழுதப்படும் கலித்துறை கட்டளைக் கலித்துறை என்று அழைக்கப் படுகிறது. முழுவதும் கட்டளைக் கலித்துறையால் இயற்றப்படும் நூற்கள் கோவை நூற்களாகும். கட்டளைக் கலித்துறையின் பொது இலக்கணத்தைப் பார்ப்போம்.

1) நான்கு நெடிலடிகள் அதாவது ஐந்து சீர்களைக் கொண்ட அடிகள் வரவேண்டும்.
2) நான்கு அடிகளும் ஓரெதுகை பெற்று வரவேண்டும்.
3) அடிதோறும் முதற்சீரும் நான்காம் சீரும் மோனை பெற்று வரவேண்டும்.
4) அடிதோறும் வெண்டளை அமைந்திருக்க வேண்டும். ஓரடியின் ஈற்றுச் சீருக்கும் அடுத்த அடியின் முதற்சீருக்கும் தளை பார்க் வேண்டியதில்லை.
5) நான்கு அடிகளிலும் முதற்சீர் ஈரசைச் சீராக இருப்பது சிறப்பு.
6) ஒவ்வொரு அடியின் இறுதிச்சீரும் கூவிளங்காய்ச் சீராகவோ அல்லது கருவிளங்காய்ச் சீராகவோ இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் கூவிளங்காய்க்குப் பதிலாக தேமாங்காயும் கருவிளங்காய்க்குப் பதிலாகப் புளிமாங்காயும் வரலாம்.
7) பாட்டு நேரசையில் தொடங்கினால் ஓரடியில் 16 எழுத்துக்களும், நிரையசையில் தொடங்கினால் 17 எழுத்துக்களும் இருக்க வேண்டும். எழுத்துக்களை எண்ணும்பொழுது மெய்யெழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்.
8) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

(உ-ம்)

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைச்சுற்றி
முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேஇனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன காண்கயி லாபுரிக் காளத்தியே
– பட்டினத்தார்

இது நேரசையில் தொடங்கிய கட்டளைக் கலித்துறை. ஒவ்வோர் அடியிலும் 16 எழுத்துக்கள் வந்திருப்பதை மெய்நீக்கி எண்ணிப் பார்க்கலாம்.

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே
– பட்டினத்தார்

இப்பாடல் நிரையசையில் தொடங்கும் பாடல். ஒவ்வோர் அடியிலும் 17 எழுத்துக்கள் இருப்பதை மெய்நீக்கி எண்ணிப்பார்க்கலாம்.

வஞ்சித்துறை

குறளடி நான்கு ஒரு பொருளின்மேல் தனித்து வரின் வஞ்சித்துறையாகும்.

(உ-ம்)

மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்.
யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்

உள்ளம் உரைசெயல்
உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை
உள்ளில் ஒடுங்கே
திருவாய்மொழி – 2693
மனோந்திரா (தொடரும்)
1) https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/

2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/

3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/

4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/

5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/

6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/

7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/

8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/

9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/

10)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-10/

11)https://maduraiseithi.in/manothindras-learn-grammar/

12)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-2/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *