
இசைப்பாக்கள்
இதுகாறும் இயற்பாடல்களாகிய வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகியவற்றுடன் அவற்றின் இனங்களான தாழிசை, துறை மற்றும் விருத்தம் ஆகியவற்றையும் பார்த்தோம். அத்துடன் மரபார்ந்த பாடல்கள் நிறைவடைந்தன. இனி மிகவும் பிற்காலத்தில் தோன்றிய செம்மை செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களையும் பண்ணத்திப் பாடலையும் வண்ணம் போன்ற இறுக்கிக் கட்டப்பட்ட பாடலையும் பார்ப்போம்.
இதில் கும்மியும் சிந்துப்பாடலும் மிக முக்கியமானவை. காவடிச்சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச்சிந்து, தங்கச்சிந்து, குற்றாலக் குறவஞ்சி, தெம்மாங்கு, ஆனந்தக் களிப்பு, வலயற்சிந்து, குள்ளத்தாராச் சிந்து, ஏற்றப்பாட்டு, ஏசல், தாலாட்டு, கிளிக்கண்ணி, ஏலப்பாட்டு, லாவணி, சேவற்பாட்டு போன்ற நாட்டுப்புப் பாடல்கள் சிந்து வகையைச் சேர்ந்தவையாகும். இப்பாடல்களில் வரும் ஒவ்வொரு சிந்தும் கண்ணி என்றழைக்கப்படும்.
கும்மி
(அ)இயற்கும்மி:
கும்மி என்பது ஏழு சீர்களைக் கொண்ட இரண்டு அடிகளாக வரும். ஓரடி இரண்டாக மடக்கி எழுதப்படும். மேலே நான்கு சீர்களும் கீழே மூன்று சீர்களும் இருக்கும். இரண்டு அடிகளும் ஒரே எதுகை பெற்றுவரும். ஒவ்வொரு அடியின் ஈற்றுச் சீரும் விளங்காய்ச் சீர்களாக வரும். அதாவது கூவிங்காய்ச் சீராகவோ அல்லது கருவிளங்காய்ச் சீராகவோ வரும். கும்மிப் பாட்டு வெண்பாவின் இனம் ஆகையால் வெண்டளை பிறழக் கூடாது. இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளைச் சீர்கள் மட்டும் வரவேண்டும். மூன்றாம் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைய வேண்டும்.
(உ-ம்)
தேவர் சபைதனில் தேவேந் திரன்வந்து
தேவரைப் பார்த்தவ னேதுசொன்னான்
பூவுல கையாளு மன்னர் தனிலொரு
பொய்யுரை யாதாரைக் கண்டதுண்டோ?
-அரிச்சந்திரக் கும்மி
இயற்கும்மியின் நாலாஞ்சீரின் முதலசையைப் பிரித்து, மூன்றாஞ் சீருடன் கூட்டி, அந்த நாலாஞ் சீரிலுள்ள மற்ற அசையைத் தனிச் சொல்லாகக் கொள்வது பெருவழக்கு. அப்படிச் செய்யும் பொழுது மூன்றாம் சீரிலும் ஏழாம் சீரிலும் இயைபுத்தொடை அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரண்த்திற்குக் கீழ்க்கண்ட பாடலை அவ்வாறு பிரித்துப் பார்ப்போம்.
நல்லபண் டங்களைக் கண்டறி யோமொரு
நாளும் வயிறார உண்டறியோம்
அல்லும் பகலும் அலைந்திடு வோம்பசி
யார வழியின்றி வாடிடுவோம்
-கவிமணி தேசிக விநாயம்பிள்ளை
இப்பாடலைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப் பார்ப்போம்.
நல்லபண் டங்களைக் கண்டறியோம்- ஒரு
நாளும் வயிறார உண்டறியோம்
அல்லும் பகலும் அலைந்திடு வோம்-பசி
யார வழியின்றி வாடிடுவோம்
மேற்கண்டவாறு பிரித்ததன் மூலம் முதல் அடியின் மூன்றாம் சீரிலும் ஈற்றுச் சீரிலும் “யோம்” என்ற இயைபுத் தொடை அமைந்துள்ளதைக் காணமுடியும். இதேபோல் இரண்டாம் அடியில் “வோம்” என்ற இயைபுத் தொடை அமைந்திருப்பதையும் காணமுடியும்.
(ஆ) ஒயிற்கும்மி
முதல் அடி இயற்கும்மி போன்றே நான்கு சீர்கள் மேலும், மூன்று சீர்கள் கீழுமாய் வெண்டளை பிறழாமல் வரும். இரண்டாம் அடி முதல் அடியின் எதுகையை விடுத்து மோனை பெற்றுவரும். இரண்டாவது அடியின் முதல் நான்கு சீர்கள் இரண்டு இரண்டு சீர்களாக மடக்கி எழுதப்பட்டு முடுகியல் பெற்றுவரும். முடுகு என்றால் விரைவு என்று பொருள். சீர்களை விரைந்த ஓசை கொடுக்கும் வண்ணம் அமைக்க வேண்டும். பெரும்பாலும் புளிமாங்கனிச் சீர்கள் அத்தகைய ஓசையைக் கொடுக்க வல்லவை. இரண்டாவது அடியின் இறுதி மூன்று சீர்கள் ஐந்தாவது வரியாக அமையும். இது வெண்டளை பெற்றுவரும். முடுகியலில் வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. மொத்தத்தில் இப்பாடல் ஐந்து வரிகளாக மடக்கி எழுதப்படும். ஐந்து மடக்குகளும் ஒரே மோனை பெற்று வரவேண்டும்.
எடுத்துக்காட்டு
தென்பரங் குன்றினில் மேவும் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றிடும் உமைபெற்றிடு
தில்லை விநாயகன் காப்பாமே
– திருப்புகழ்
மற்றொருவகை ஒயிற்கும்மி- எடுத்துக்காட்டு
மாவும் பலாவும்கொய் யாவுமா ரஞ்சியும்
வன்னப் பழம்பழுக்கும்- மகிழ்வாய்த்
தின்னச் சுவையிழுக்கும்
பூவுங் கனியும் பொழியுஞ்செந் தேனங்கு
போவா ரடிவழுக்கும்
இதில் தனிச் சீர்களைத் தவிர்த்துப் பிறவனைத்தும் வெண்டளை பிறழாமல் வந்திருக்கின்றன.
(இ) ஓரடிக்கும்மி
கும்மியின் இலக்கணங்களைப் பெற்று ஒரே ஒரு எழுசீர் அடிமட்டும் பொருள் முற்றி வருமென்றால் அது ஓரடிக்கும்மி என்று அழைக்கப்படும்.
(உ-ம்)
மோனையால் வந்த ஓரடிக் கும்மி
ஆளுடன் ஆளும் உகையாம லேநீங்கள்
ஆளுக் கொருமுழம் தள்ளிநில்லும்
எதுகையால் வந்த ஓரடிக் கும்மி
பாட்டுக் குகந்த படியிரு கையையும்
ஆட்டியொய் யாரமாய் ஆடிடுவோம்
சிந்து
இரண்டடிகள் ஓரெதுகை பெற்று அளவொத்து வருவது சிந்துப்பாவாகும். இது தாளத்தை அடிப்படையாகக் கொண்டது. தாளத்துடன் பாடப்படும் பாடல்கள் வண்ணம், சந்தம், சிந்து மற்றும் உருப்படி ஆகியவையாகும். அவற்றுள் சிந்துவைப் பற்றி நாம் இப்பொழுது அறிந்துகொள்வோம்.
சிந்துப்பாக்கள் இயற்பாக்களைப் போன்று தளைகளால் பிணைக்கப்படுவதில்லை. மா, விளம், காய், கனி போன்ற சந்த வாய்பாடுகளிலும் அமையாது. அவை கீழ்க்கண்ட தாள நடைகளில் அமையும்.
‘தகிட’ – மும்மை நடை
‘தகதிமி’ – நான்மை நடை
‘தகதகிட’ – ஐம்மை நடை
‘தகிடதகதிமி’ – எழுமை நடை
‘தகதிமிதகதகிட’ – ஒன்பான் நடை
சிந்துப் பாடல்கள் பெரும்பாலும் ஆதி தாளம், ரூபக தாளம், மற்றும் ஏக தாளம் போன்ற தாளங்களின் அடிநாதத்தில் பாடப்படுகின்றன. இந்த தாள நடைகளில் பாடப்படும்போது சீர்கள் தகிட, தாதீம், தாம் கிட போன்ற துள்ளல் ஓசைகளைக் கொண்டிருக்கும். சிந்துப் பாக்கள் பெரும்பாலும் ஆதி தாளத்தில் அமைந்திருக்கும். ரூபக தாளத்திலும் ஏக தாளத்திலும் வருவதுண்டு.
மேலும் இயற்பாக்களைப் (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா) போன்று நேரசை, நிரையசைகளைக் கொண்டிருப்பதில்லை. சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள உயிர்க்குறில், உயிர்நெடில், மெய்யுடன் கூடிய குறில், மெய்யுடன் கூடிய நெடில் ஆகிய ஒவ்வோர் உயிரும் ஓர் அசையாகக் கொள்ளப்படும். சுருங்கக் கூறின் மெய்யை நீக்கிய அனைத்து எழுத்துக்களும் தனித் தனி அசைகளாகக் கொள்ளப்படும்.
சிந்துப் பாடல்களை சமநிலைச் சிந்து என்றும் வியநிலைச் சிந்து என்றும் பொதுவாகப் பிரிப்பாரும் உளர். சிந்துப் பாவில் ஓரடியை இரண்டாக மடக்கி எழுதுவது வழக்கம். அவ்வாறு மடக்குவதால் ஏற்படும் முதல் வரியின் இறுதியில் தனிச்சொல் பெரும்பாலும் வரும். சிந்துப் பாடலில் மடக்கி எழுதப்படும் வரியும் ஒரு தனி அடியாகவே எடுத்துக்கொள்ளப்படும். தனிச் சொல்லைத் தவிர்த்து முதல் அடியில் எத்தனை சீர்கள் வருகின்றனவோ அதே எண்ணிக்கையில் இரண்டாவது அடியிலும் (மடக்கி எழுதப்பட்ட அடி) சீர்கள் அமையப்பெறின் அது சமநிலைச் சிந்து எனப் பெயர்பெறும். அவ்வாறன்றி இரண்டாவது அடியில் சீர்களின் எண்ணிக்கை கூடுதலாக அமையப்பெறின் அது வியநிலைச் சிந்து எனப் பெயர்பெறும்.
சமநிலைச் சிந்து- எடுத்துக்காட்டு
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்
– பாரதி
வியநிலைச் சிந்து- எடுத்துக்காட்டு
தின்னப் பழம்கொண்டு தருவான்; பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்ஐயன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.
தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்;
அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.
பின்னலைப் பின்னின்றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.
புல்லாங்குழல் கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்பு நற்பீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.
– பாரதி
- மனோந்திரா (தொடரும்)
- 1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
- 2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
- 3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
- 4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
- 5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/
- 6)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-6/
- 7)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-7/
- 8)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-8/
- 9)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-9/
- 10)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-10/
- 11)https://maduraiseithi.in/manothindras-learn-grammar/
- 12)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-2/
- 13)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-3/
- 14)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-14/



