
எனது இருசக்கர வாகனத்திற்கு முன்பு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்தில் ஒரே ஆட்டம், பாட்டம். மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் எங்கோ சுற்றுலா செல்கின்றனர் என்பது தெரிந்தது. பேருந்துக்குள் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடல்,
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் – அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் – அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்…
இந்த பாடலுக்கு பேருந்துக்குள் இருந்த அனைத்து மாணவிகளும் ஆடிக்கொண்டிருந்தனர். 1972-ம் ஆண்டு வந்த ஒரு பக்திப் பாடல் இன்றைய தலைமுறை வரை ஆட வைத்திருக்கிறது என்றால், அந்த பாடலைப் பாடிய குரலில் இருந்த வைஃப்தான் காரணம். இந்த பாடலைப் பாடியவர் பெங்களூரு ஏ.ஆர்.ரமணி அம்மாள். இந்த பாடலில் ஒவ்வொரு வரியையும் அவர் பாடும் லாவகமே தனிரகம்.
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
இதில் கள் என்ற வரியை அவர் பாடும் தொனியே வித்தியாசமாக இருக்கும். தெய்வம் படத்தில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல் காட்சியிலும் பெங்களூரு ஏ.ஆர்.ரமணி அம்மாள் இடம் பெற்றிருப்பார். மடிசார் சேலையில் பாந்தமாய் தெரியும் ரமணி அம்மாளின் குரலில் இருக்கும் மேஜிக், கேட்போரை ஆட வைக்கும். 1930-ம் ஆண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள புதுச்சத்திரத்தில் பிறந்தவர் ரமணி அம்மாள். சிறுவயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவரும், இவரது கணவரும் கர்நாடக இசைப்பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பஜனை நிகழ்ச்சிகளில் பாடி வந்தனர்.
துரதிஷ்டவசமாக இளம் வயதிலேயே ரமணி அம்மாளின் கணவர் காலமானார். இதன் பின் ரமணி அம்மாள் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கணவனை இழந்த பெண், வீட்டை வெளியே செல்லக்கூடாது என்ற மிரட்டல்கள், ஒதுக்கிவைப்பு, மூடநம்பிக்கையால் விளைந்த அவமானங்களை இளம் வயதிலேயே ரமணி அம்மாள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் மனஉறுதி, கடின உழைப்பால் பாடல்கள் பாடுவதை அவர் விடவில்லை.
பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள 8வது கிராஸ் தெருவில் அவர் வசித்து வந்தார். 1952-ம் ஆண்டு அங்கு ஒரு பஜனை மண்டலியைத் தொடங்கினார். இதன் மூலம் பெங்களூருரின் முதல் பெண் பஜனைப் பாடகி என்ற பெருமையை ரமணி அம்மாள் பெற்றார். இலங்கையில் நடந்த பஜனை நிகழ்ச்சிக்காக ரமணி அம்மாள் சென்றிருந்தார். இதன் மூலம் பிரபல பஜனைப் பாடகர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில் தான் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சின்னப்பா தேவர், தெய்வம் படத்தில் இடம் பெற்ற குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார். புகழ்பெற்ற வயலின் இசைமேதையான குன்னக்குடி வைத்தியநாதன் இந்த படத்தில் இசையமைத்தார். இந்த பாடல் முழுவதும் பெங்களூரு ரமணி அம்மாள் உலகம் முழுவதும் பிரபலமானார். உத்வேகமூட்டும் அவரது வித்தியாசமான குரல், பக்தி உணர்வாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் பின் அவர் பல திரைப்படங்களில் பாடினார். ஆனாலும், அவர் பாடிய பக்திப் பாடல்கள் புகழ் பெற்றவை. தனிச்சுவை கொண்டவை.
இதில் குறிப்பிட்டுச் செல்லவேண்டியது, நத்தன விநாயகர் பாடல். மிக கஷ்டமான மெட்டு என்றே கூறலாம் 1979-ம் ஆண்டு ஹெச்எம்வி நிறுவனம் அந்த பாடல் வெளியிட்டது. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையில் உருவான அந்த பாடல்,
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா…
இந்த பாடல் கன்னட மொழியா, துளுவா அல்லது சௌராஷ்டிரா மொழியா என்று பாடலைக் கேட்பவர்களுக்குத் தோன்றும். இந்தப் பாடலை எழுதியவர் எம்.என்.சுப்ரமணியம். பரதநாட்டியத்தின் ஜதி ஒலிகளான “திம்மிக்கிடுகிட திம்மிக்கிடுகிட திக்குத்தாள… திம்மிக்கிட தகிடுத தகிடுத” என்பவற்றை உள்ளடக்கி பெங்களூரு ரமணி அம்மாள் பாடிய இந்த பாடல், அவரின் தனித்துவ பாணிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லப்படுகிறது. அத்துடன் பாடல் இயற்றும் திறன் கொண்டவர் ரமணி அம்மாள். முருகன் மீது பக்தி கொண்ட அவர் சில பாடல்களையும் இயற்றியுள்ளார்.
திருப்புகழ் பாடல்களில் அவர் பாடிய
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி- அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி
அவர்மேலாய்…
பாடல் ரசனையின் உச்சம் என்றே சொல்லலாம். சென்னை மியூசிக் அகாடமி உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களின் ரமணி அம்மாள் பங்கேற்றுப் பாடியுள்ளார். வயலின் கலைஞர் டி.சௌடையா மற்றும் மிருதங்க கலைஞர் பாலக்காடு மணி அய்யர் போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசைநிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
கர்நாடக இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமி விருது (1958)- உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பல மொழிகளில் புலமை பெற்றிருந்த ரமணி அம்மாள் கர்நாடக இசை, நாட்டுப்புற இசை மற்றும் பக்தி இசை ஆகியவற்றை இணைத்த தனது தனித்துவமான பாணியை உருவாக்கிக்கொண்டார். இவரின் இசைக்கென ரசிகர் கூட்டம் இருந்தது. தமிழ் மீதும் முருகன் மீதும் மிகுந்த பக்தி கொண்ட ரமணி அம்மாள் பாடிய பக்திப் பாடல்கள் துள்ளாட்டம் போடவைப்பவை.

பெங்களூரு ரமணி அம்மாளுக்கு ஏராளமான கவிஞர்கள் தனிப்பக்தி பாடல்களை எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் பெங்களூரு எஸ்.கோவிந்தராஜன். இவரின் அழகுத் தமிழில் உருவான முருகன் பாடல்கள் ரமணி அம்மாள் குரலில் கோயில் மணி போல ஒலிக்கும். அப்படியொரு பாடல்
முத்தான முத்துக்குமரா முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா சிந்தை மகிழ வா வா வா
நீயாடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி வருகுதையா
மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா…
இந்த பாடலுக்கு ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த அமரகவி உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் டி.ஏ.கல்யாணம். இசையமைத்தார். இவர் இசையின் பாணியே கேட்போரை குலூகலிக்க வைப்பது. உதாரணத்திற்கு பெங்களூரு ரமணி அம்மாள் பாடிய

தென்பழனி தேவனடி கண்ணம்மா- முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா
தென்பழனி தேவனடி கண்ணம்மா- முருகன்
தேவர்களின் தலைவனடி கண்ணம்மா
பொங்கல் வைத்துப் பூசையிட்டு
புதுமலரால் மலையிட்டு…
வாராயோ என்றழைத்தால் கண்ணம்மா- முருகன்
மாறாது வந்து நிற்பான் கண்ணம்மா
கிராமத்து மெட்டில் அமைந்த இந்த பக்திப் பாடலின் வழியே ரமணி அம்மாளின் குரல் செய்யும் மாயம், கேட்போரை தாளம் போட வைக்கும். இந்த பாடலை எழுதியவர் பெங்களூரு எஸ்.கோவிந்தராஜன்.
பெங்களூரு ரமணி அம்மாள் பாடிய பக்தி பாடல்களை இயற்றிய மிக முக்கியமான கவிஞர் டி.பாகீரதி அம்மாள். தமிழ் இசையுலகில் அறியப்படாத பெயராக டி.பாகீரதி அம்மாள் பெயர் உள்ளது. ரமணி அம்மாள் பாடிய பல புகழ்பெற்ற பாடல்களுக்குச் சொந்தக்காரர் இவர்.
ஐயப்பா சரணமென்றே ஐயப்பா சரணமென்றே
ஐயப்பா சரணமென்றே ஆனந்தமாய்க் கூப்பிடுவோம்
மோஹினி பாலனென்றும் மோஹன குமாரனென்றும்
வில்லாளி வீரனென்றும் வீரமணி கண்டனென்றும் …
என்ற ரமணி அம்மாளின் பாடலை எழுதியவர் டி. பாகீரதி அம்மாள். ரமணி அம்மாள் தனித்துப்பாடும் சில பாடல்களைக் கேட்கும் போது நாமும் சேர்ந்து பாடும் உணர்வை ஏற்படுத்தும்.
சுவாமியே சரணமய்யா
தர்ம சாஸ்தாவே சரணமய்யா
அனுதினம் பூஜை செய்தோம்
உமக்கு அனந்தகோடி நமஸ்காரம்…
என அவர் பாடும் அழகில் கேட்போரும் சேர்ந்து பாடுவார்கள். இந்த பாடலுக்கும் சொந்தக்காரர் டி.பாகீரதி அம்மாள் தான். அவர் எழுதிய இந்த பாடலை இன்றளவும் யூடியூப்பில் பலர் பாடி பதிவு செய்து வருகின்றனர். பஜனை தன்மையில் மெட்டமைக்கப்பட்ட அந்த பாடல்,

சரணம் சரணம் ஜகதாம்பா
சரணம் தருவாள் ஓம்காரி
சோட்டாணிகரையில் நின்றிடுவாள்
சொல்லிய குறைகளைத் தீர்த்திடுவாள்
மதுரையில் வாழ்ந்திடும் மீனாட்சி
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்
அங்கய்கன்னி என்பவளாம்
அடியார் சக்தியைக் கொண்டவளாம்
சரணம் சரணம் ஜகதாம்பா…
சில பாடல்களில் ரமணி அம்மாளின் குரல் உச்சஸ்தாயில் இருக்கும். ஆனால், ஜகதாம்பா உள்ளிட்ட சில பாடல்களில் இருக்கும் மென்மை கேட்போரை வசிகரிக்கும்.தணிகைமலை பெருந்துரையே வா வா வா, நீங்கள் வாருமே, வேலவா வடிவேலவா,யானைமுகன் சோதரனே, பால் மணக்குது,என் அப்பனே என் ஐயனே, கந்தனும் வருவான்,வேலுண்டு மயிலுண்டு, ஆடும் கரகம், நீர்க்கொண்ட சடைமுடியோன் நெற்றி விழிகளில் பிறந்து,,ஆடு மயிலே கூத்தாடு மயிலே, கந்தனும் வருவான் காட்சியும் தருவான், மாலோன் மருகனை மன்றாடி,மஞ்சு நிகர் குந்தளமின்னே,முருகா முருகா முருகா முருகா, பாலும் பழம் உண்டு பக்திக்கு, வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா,இருமுடி தாங்கியே செல்லுவோம், விடமடைசு வேலை அமரர்படை சூலம், உள்ளத்திலே கோயில் கட்டி உன்னை என எத்தனையோ பாடல்களை ரமணி அம்மாள் பாடியுள்ளார்.
கூகுளில் ரமணி அம்மாள் என்று நீங்கள் தேடினால், விஜய் டிவி புகழ் ராக் ஸ்டார் ரமணி அம்மாள் தான் வருகிறார். இளம் வயதிலேயே கணவனை இழந்தாலும், 50 ஆண்டுகளாக இசை உலகில் போராடி முன்னுக்கு வந்த பெங்களூரு ஏ.ஆர்.ரமணி அம்மாளுக்கு விக்கிப்பீடியோவில் கூட இடமில்லை என்பது பெரும் சோகம்.
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/
2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/
3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/
4)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-3-kovai/
5)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-4/
6)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-5/
7)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-6/
8)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-7/
9)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-8/
10)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-9/
11)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-10/
12)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-11/



