எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 16

 சென்ற வாரம் சிந்துப்பாக்கள் இரண்டு வகைப்படும் என்றும், அவை சமநிலைச் சிந்து மற்றும் வியநிலைச் சிந்து என்றும் பார்த்தோம். சிந்து பற்றிய இத்தகைய பார்வை புலவர் குழந்தை அவர்களால் முன்வைக்கப்பட்டுப் பலரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இது முற்றிலும் தவறு என முனைவர் இரா. திருமுருகனார் அவர்கள் தனது ‘சிந்துப்பாவியல்’ என்ற நூலில் விளக்கியுள்ளார். 

அதன்படி, புலவர் குழந்தை முதலியோர் இயற்பாக்களின் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்துப்பாக்களைப் புரிந்துகொண்டுள்ளது தவறு; சிந்துப்பாக்கள் இயற்பாக்களில் செயற்படுகின்ற தேமா புளிமா கூவிளம் கருவிளம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைபவை அல்ல: இயற்பாக்களுக்கு இருக்கும் தளைகளும் சிந்துப்பாவிற்குப் பொருந்தா; சிந்துப்பாக்கள் தாளத்தை அடிப்படையாகக் கொண்டவை என அவர் கண்டுரைத்தார். 

தாளம் குறித்து விரிவாகப் பார்க்கப் புகுந்தால் இதுகாறும் நாம் கடைபிடித்துவந்த எளிமை கெட்டுவிடும். எனவே நாம் தாளத்தை ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு சிந்துப்பாவின் கட்டமைப்பைப் பார்ப்போம்.

 சிந்துப்பாக்கள் குறைந்தது எட்டுச் சீர்களைக் கொண்ட இரண்டு அடிகளால் வரும். எட்டுக்கு மேல் இரட்டைப் படையில் எத்தனை சீர்கள் வேண்டுமாயினும் வரலாம். இரண்டு அடிகளும் ஒரே அளவில் சீர்களைப் பெற்று வரவேண்டும். இரண்டு அடிகளும் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஓரடி இரண்டாக மடக்கி எழுதப்படும். மடங்கிவரும் இடத்தில் (இடங்களில் எல்லாம்) மோனை வரவேண்டும். 

 சிந்துப்பாவிற்கென்று இரண்டு வகை அசைகள் உண்டென்று பார்த்தோம். அவை குறிலசை என்றும் நெடிலசை என்றும் சொல்லப்படும். ஒரு குறில் மட்டும் வந்தால் அது குறிலசை; குறிலோடு ஒற்று வந்தாலோ, நெடில் தனித்து வந்தாலோ அல்லது நெடில் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலோ அவை நெடிலசைகள் ஆகும். குறிலசை நெடிலசை என்ற பிரிவினை பெயரளவிற்கே. நான்கு அசைகளும் சம அந்தஸ்து கொண்டவை. 

சிந்துப்பாக்களில் அளபெடை

இயற்பாக்களை விட சிந்துப்பாக்களில் அளபெடை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இயற்பாக்களில் உயிர் நெடில் ஏழும் அளபெடுக்கும். சிந்துப்பாவில் உயிர்க் குறிலும் அளபெடுக்கும். வல்லின மெய்கள் (க்ச்ட்த்ப்ற்) அளபெடுப்பதில்லை. இடையினத்தில் ‘ர்’ ‘ழ்’ ஆகிய இரண்டும் அளபெடுக்காது. மற்ற மெய்யெழுத்துகள் அனைத்தும் அளபெடுக்கும். ஆய்தயெழுத்தும் அளபெடுக்கும். சிந்துபா இசைப்பா ஆகையால் பல இடங்களில் எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். அரையடியின் முடிவு, தனிச்சொல்லுக்கு முன்பு மற்றும் அடியின் இறுதி ஆகிய இடங்களில் மெய்யெழுத்துகள் 11 முறைவரையும் உயிரெழுத்துகள் 12 முறைவரையும் அளபெடுக்கும். மற்ற இடங்களில் இரண்டும் ஒரே ஒரு முறைதான் அளபெடுக்கும்.

மும்மை நடை– ஓரடியில் வருகின்ற சீர்கள் அனைத்தும் மூன்று மூன்று அசைகளைக் கொண்டு அமையுமாயின் அப்பாடல் மும்மை நடையில் வந்ததாகக் கொள்ளப்படும். (தாள நடை- தகிட)

(உ-ம்)

கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே – அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? – செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார்
– பாரதி

சிந்துப்பாவில் தனிச்சொல்லும் ஒரு சீராகக் கணக்கிடப்படும். மேற்கண்ட பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் தனிச்சொல்லுடன் மேலே மூன்று சீர்களும் கீழே நான்கு சீர்களும் இருப்பது போல் தோன்றும். ஆனால் அது அப்படியல்ல. சில இடங்களில் எழுத்துகள் அளபெடுத்து வந்துள்ளதால் மேலேயும் கீழேயும் நான்கு நான்கு சீர்கள் சமமாக இருக்கின்றன. எப்படி என்பதைக் கீழே பார்ப்போம். அளபெடுக்கும் இடங்களை * குறிகொண்டு நிரப்புவோம்.

கரும்புத் தோட்டத்தி லே**- *அவர்
கால்களும் கைகளும் சோர்ந்துவி ழும்படி
வருந்து கின்றன ரே*! ஹிந்து
மாதர்தம் நெஞ்சுகொ தித்துக்கொ தித்துமெய்
சுருங்கு கின்றன ரே** – *அவர்
துன்பத்தை நீக்கவ ழியில்லை யோ**? *ஒரு
மருந்தி தற்கிலை யோ**? – *செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின் **றார்

நட்சத்திரக் குறியிட்ட இடங்களில் இசை நீண்டு ஒலிக்கும்.

நான்மை நடை: நான்கு சிந்தசைகளைக் கொண்ட சீர்களால் அமையும் பாடல்கள் நான்மை நடைப்பாடல்கள் எனச் சொல்லப்படும். நொண்டிச் சிந்துப் பாடல்கள் நான்மை நடையில் அமைந்தவை. தாளநடை- தகதிமி

(உ-ம்)

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

இப்பாடலும் எட்டுச் சீர்களைக் கொண்டதுதான். எப்படி என்பதை அளபெடைகளைக் கொடுத்துப் பார்ப்போம்.

நல்லதோர் வீணைசெய் தே*-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண் டோ***?
சொல்லடி, சிவசக்தி *;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட் டாய்***
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற் கே***?
சொல்லடி,சிவசக்தி! *-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவை யோ**?
விசையுறு பந்தினைப்போல் **-உள்ளம்
வே*ண்டிய படிசெலும் உடல்கேட்டேன் ****
நசையறு மனங்கேட்டேன் **-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் ****
தசையினைத் தீசுடி னும்சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன் ****
அசைவறு மதிகேட்டேன் **;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுள தோ***?

ஐம்மை நடை: ஐம்மை நடை என்பது தகதகிட, தரிகிடதொம், தகதீம்த, தாதீம்த, தோம்கிடதொம், ததீம்தா போன்ற தாளக் கட்டுகளுக்கு ஏற்ப இசையும் தாளமும் இணைந்து வரும்.

(உ-ம்)

சென்னி குளநகர் வாசன், – தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் – செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன்; அயில் வீரன்

வன்ன மயில்முரு கேசன், – குற
வள்ளி பதம்பணி நேசன் – உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, – தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி, – கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்

நூபுரத் துத்தொனி வெடிக்கும் – பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் – அங்கே
நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
நோக்கும் படி தாக்கும்

சந்நிதி யில்துஜஸ் தம்பம், – விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் – எனும்
சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
உம்பர் நகருக்கு மிஞ்சி – மிக
உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
உறங்கும்; மின்னிக் கறங்கும்

அருணகிரி நாவில் பழக்கம் – தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றிக் – கொழும்
கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
காண்பார்; இன்பம் பூண்பார்.
-அண்ணாமலை ரெட்டியார்

மேற்கண்ட காவடிச்சிந்து ஐம்மை நடையில் அமைந்துள்ளது. சீர்களைச் சேர்த்தும் பிரித்தும் ஓசை நீண்டு எழுத்துகள் அளபெடுக்கும் இடங்களை எளிதில் காண முடியும். ஒவ்வொரு கண்ணியிலும் உள்ள மூன்றாவது அடிகள் முடுகியலாக வந்துள்ளன. அவையனைத்தும் அளபெடையின் உதவியின்றியே ஐம்மை நடையில் வந்துள்ளன.

எழுமை நடை: இது ஒரு சீரில் ஏழு அசைகள் அல்லது ஒலிகள் (தகிடதகதிமி, தீம்ததகதிமி) வரும்படி தாள நயத்துடன் விரைவாகப் பாடப்படும்.

ஒன்பான் நடை: தகதிமிதகதகிட என்ற தாள நடையில் அமைவது ஒன்பான் நடை சிந்துப்பாடல். இதில் வரும் ஒவ்வொரு சீரிலும் ஒன்பது சிந்தசைகள் வரும்.

எழுமைநடை மற்றும் ஒன்பான் நடைகளுக்கு சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் காவடிச்சிந்துப் பாடல்களில் உதாரணங்கள் இருக்கின்றன. அங்கு அவற்றைக் கண்டுகொள்க!
– மனோந்திரா (தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *