
மதுரைக்காரர்களுக்கு எல்லாவற்றிற்கும் பாட்டுதான். நீங்கள் உங்கள் வீட்டில் ஏதேனும் பாட்டு போட்டு கேட்டுத் தான் பொழுதைப் போக்க வேண்டும் என்பதில்லை. கல்யாண வீடு, சடங்கு, நிச்சயதார்த்தம், கேதம் என்று எப்போதும் உங்களைச் சுற்றி பாட்டு எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டே இருக்கும். காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே இறைவன் இருக்கிறானோ, இல்லையோ, பாட்டு கண்டிப்பாக இருக்கும். அது உங்கள் மனதில் எத்தனை எத்தனையோ வர்ண ஜாலங்களை, நினைவலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
நிசப்தமான ஒரு மதிய வேளையில் மூன்று மணி சுமாருக்கு திடீரென்று தில்லானா மோகனாம்பாளின் நகுமோ மங்கல இசையுடன் வீட்டிற்கு அருகிலிருந்து இசை வெள்ளம் ஆரம்பித்தது. நகுமோ முடிந்ததும், சீர்காழி கணீரென்று கலைவாணி தான் பெற்ற இரு பெண்ணை மணம் கொண்ட கல்யாண மணவாளனே… என்று விநாயகர் பாடல். சடங்கு வீடு போல. உடனடியாக மானூத்து மந்தையிலே மாங்குட்டி பெத்த மயிலே… இது போன்ற விசேஷ வீடுகளில் பெரிய தாய்மாமன்கள் (பெரும்பாலும் மைக்செட்காரர்களும் கூட !) என் வயதொத்தவர்களாக இருப்பதால், பாடல்கள் சட்டென்று 1980-ம் ஆண்டுகளுக்குப் போய்விடும்.
ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி…
ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வெச்சேன்
வா என் தாயி…
நானா பாடலயே
நீ தான் பாட வெச்ச…
என்று சற்றே குறைந்த ஒலியளவில் மைக்செட் பாட ஆரம்பித்தது. யாரோ ஒலியளவைக் குறைக்கச் சொல்லிவிட்டார்கள் போலும்.
நான் மிகக் கவனமாக இந்தப் பாடல்வரிகளைக் கேட்டேன். காரணம் இந்தப் பாடல் வந்த காலத்தில் எனக்கு இந்த பாடலின் ஒரிஜினல் வரிகள் தெரிந்திருக்கவில்லை. அப்போது நான் வேலைக்குச் சேர்ந்த புதிது. இராமநாதபுரத்தில் பணி. தினமும் ரயிலில் வேலைக்குச் சென்று வந்து ரயிலிலேயே வாழ்ந்த காலம். இயல்பாகவே ரயிலின் பாடகர் கோஷ்டியில் நானும் ஒரு முக்கியப் பாடகன்.
எங்கள் ரயில் பாட்டுக் கோஷ்டியின் தலைவர் தேவிபட்டிணம் பேங்க் ஆஃப் மெஜுராவில் வேலை பார்த்த சந்திரன் அண்ணன். வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் மதுரை சோமு இருந்த வீட்டுக்கு அடுத்த வீடு. இம்பீரியல் சினிமாவிற்கு அடுத்த கட்டிடத்தில் அம்மா புக் சென்டர் என்று பாட புத்தகங்கள் விற்கும் கடை வைத்திருந்தார். (இப்போது கடை எதிர்பக்கத்திற்கு இடம் மாறிவிட்டது) அவர் பெரிய முருக பக்தர். கஞ்சிரா வித்வானும் கூட. ஆண்டு தோறும் சுமார் 200 பேரை பழநிக்கு பாதயாத்திரையாக அழைத்துச் செல்வார். எல்லோருக்கும் பழனி பைந்தமிழ் என்று பாடல்கள், சுலோகங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை தருவார். நாளடைவில் சந்திரன் என்ற அவர் பெயர் மறந்து போய் அவரை எல்லோரும் பைந்தமிழ் அண்ணே என்றே அழைக்க ஆரம்பித்து விட்டோம்.
காலையில் 5.45 மணிக்கு கீழ் மதுரையில் கச்சேரி ஆரம்பிக்கும். மாலையில் ரயில் ராமநாதபுரம் கல்லூரியைத் தாண்டியதும் இரவுக் கச்சேரி ஆரம்பிக்கும். பைந்தமிழ் அண்ணன் கஞ்சிராவை தண்ணீா தொட்டுத் தடவி சுருதியைக் குறைத்துக் கொண்டு சூலமங்கலம் சகோதரிகளின் சுட்ட திருநீரெடுத்து, தொட்ட கையில் வேலெடுத்து தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம்… என்று பாடி, கஞ்சிராவில் ஒரு தனி ஆவர்த்தனம் செய்து முடிப்பார். பிறகு எங்கள் எல்ஐசி தோழர் வின்சென்ட் பால்ராஜ் கேளுங்கள் தரப்படும்… பாடுவார். பிறகு அடியேன் சிவரஞ்சனியில் ஹனிபாவின் அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே அல்லது சுபபந்துவராளியில் திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி பாட வேண்டும். எல்லோரும் அரசு ஊழியர்கள், தொழிற்சங்க ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் மதச்சார்ப்பின்மைக்காக இந்த மூன்று மதப் பாடல்களோடு தான் தினசரிக் கச்சேரி ஆரம்பிக்கும். பின்னர் அவரவரது காதல் தோல்விக்கேற்ப படைத்தானே, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், ஏட்டில் எழுதி வைத்தேன் என்று ஒரே ரகளையாக இருக்கும்.
பரமக்குடியில் ஒரு புது கோஷ்டி வந்து சேர்ந்து கொள்ளும். அன்று அப்படித்தான் பரமக்குடி கோஷ்டியில் ஒரு புது ஐயப்ப சாமி வந்து எங்கள் பெட்டியில் ஏறினார். மதுரையிலிருந்து பதவி உயர்வில் எங்கள் பரமக்குடி கிளைக்கு வந்து சேர்ந்து பழனி என்ற அந்த சாமியை பரமக்குடி எல்ஐசி தோழர் ஜான்சன் அறிமுகம் செய்தார். பைந்தமிழ் அண்ணன், புது சாமியை ஒரு பாட்டு பாடச் சொன்னார். பழனி சாமி முதலில் சற்று கூச்சப்பட்டது. பிறகு சுதாரித்துக் கொண்டு பாட ஆரம்பித்தது.
கார்த்திகையில் மாலை போட்டு
மார்கழியில் கட்டுக் கட்டி
வா கன்னிச் சாமி…
நானா பாடல்லயே…
நீ தா.. பாட வெச்ச…
எரிமேலி சாஸ்தாவே.. என்
ஏக்கங்கள தீருமையா…
வன்புலி வாகனனே.. . நல்ல
வழி தன்னைக் காட்டுமய்யா…
என்று அற்புதமாகப் பாடியது.

இதென்ன புது பாட்டா இருக்கு… இளையராஜா பாட்டு மாதிரி… என்று யாரோ கேட்டார்கள். இளையராஜா பாட்டுதான்.. எங்க ஊரு காவக்காரன்னு ராமராஜன், கௌதமி படம்.. ஆசையில பாத்தி கட்டின்னு ஒரு பாட்டு… சாமி உல்டா பண்ணியிருக்கு… என்று யாரோ சொன்னார்கள். பழனி தான் உல்டா செய்யவில்லை என்றும் தனது குருசாமி இட்டுக் கட்டி எழுதினார் என்றும் பணிவாகச் சொன்னார். நான் அப்போது அந்த ஒரிஜினல் பாட்டைக் கேட்டடதில்லை என்பதால் பின்னால் இந்தப் பாட்டைக் கேட்கும் போது, கார்த்திகையில் மாலை போட்டு பாட்டை கங்கை அமரன் அழகாக உல்டா செய்ததாகவே எனக்குத் தோன்றும். நான் மதுரைக்கு மாறுதல் பெற்று வரும் வரையிலும் தினசரி கச்சேரியில் பழனி கார்த்திகையில் மாலை போட்டு பாட்டைப் பாடுவது வழக்கமாயிற்று. ரயில் பாடல் கோஷ்டி அனைவருக்குமே மனப்பாடமாகத் தெரிந்த பாடலாகி விட்டது.
மைக்செட்டில் சுசீலாம்மா
ஒத்த மரம் போல
நான் நிக்கும் இந்த வேள…
என்ன சொல்லிப் பாட என்
துன்பம் எல்லை மீற….
என்று உருக,
தொடராது இது இனி மேல
தொண நான் தான் பூவாயி….
என்று மனோ முடிக்க,
என் மனம் பழனியின் நினைவிலிருந்து மீண்டு வந்தது. ஐயப்ப சாமிகள் பஜனைக்கு இது மாதிரி சினிமா பாடல்களை உல்டா செய்யும் வழக்கம் இப்போதும் இருக்கிறதா? இருந்தால் என்ன மாதிரி பாடல்களை உல்டா செய்கிறார்கள்? அப்படியே உல்டா செய்வதானால்,
ஏ சில் உடச்சவன் உம் படைய
பல் உடச்சவன் சல்லடைய போல் சலிச்சவன்
தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி சாவடி சட்டாரடி
என்ன மொரச்சவன் கண்ணு முழுக்கல்ல
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
என்ற வரிகளையெல்லாம் ஐயப்பனுக்குப் பொருத்தமாக யார், எப்படி உல்டா செய்து இட்டுக் கட்டுவார்கள்? என்பது அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம். சாமி சரணம் !
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
- 1) https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
- 2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
- 3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
- 4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
- 5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
- 6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/
- 7)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/
- 8)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/
- 9)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-part-9/
- 10)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham/
- 11)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive/
- 12)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-2/
- 13)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-13/
- 14)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-14/
- 15)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-15/




இட்டு கட்டு பாடும் வழக்கம் மாறிப்போய், அப்படியே காப்பி அல்லது Re mix style தான்…
Super
“சஷ்டியை நோக்க, சரவண பவனார்” என்ற கந்தர்சஷ்டி கவச பக்திப் பாட்டையே “பதினெட்டு வயது, இளமொட்டு மனது” என்று காதல் கவசப் பாட்டாக மாற்றிய ஊராயிற்றே இது… 🌀