நினைவே சங்கீதம் 15: சோவியத்தின் பெருமகளே…

மனித வாழ்வின் சுவாரஸ்யமே அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முடியாததுதான். வாழ்வின் அந்த எதிர்பாராத தன்மையின் நிகழ்வுகள் நமக்கு மறக்கவியலாத இன்பம் தருவதும் உண்டு. மறக்கவியலாத துன்பம் தருவதும் உண்டு. அப்படி வாழ்வில் திடீரென நிகழ்ந்த மறக்க முடியாத துன்பங்களை என் வாசிப்பு, இசையார்வம், ஒத்த மனதுடைய நண்பர்கள், குடும்பத்தினர் உதவியோடு மறந்து விட்டு, இன்பமானவற்றை மட்டுமே நினைவில் நிறுத்திக் கொள்ளும் மனநிலையை நான் இந்த அறுபதாண்டு கால வாழ்வில் எப்படியோ ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன். அப்படியான எதிர்பாராத சந்தர்ப்பங்களில் கேட்டு மனதில் தங்கிவிட்ட பாடல்கள் தரும் இன்பம் பற்றி எவ்வளவு சொன்னாலும் தீராது. அப்படியான ஒரு அனுபவம் தான் ஒரு புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்தது.

சென்னைக்கு அடுத்து மதுரையில் மட்டுமே புத்தகக் கண்காட்சிகள் நடந்து கொண்டிருந்த அற்புதமான காலம் அது. மாலை 4 – 4.30 வாக்கில் போனால் கூட்டமில்லாமல் இருக்கும். வேண்டியதை வாங்கிக் கொண்டு, அப்படியே கூட்ட அரங்கில் நடக்கும் ஏதேனும் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வரலாம் என்று நான் எப்போதும் 4 மணியளவில் செல்வது வழக்கம். அன்று தமுக்க மைதானத்தில் நுழையும் போது என்னை உரசினாற் போல் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சற்றே எரிச்சலுடன் நான் விலகிக் கொள்ளும் போது, ஆட்டோவிலிருந்து அற்புதமான பாடகரும், என் நண்பருமான தோழர் திருவுடையான் தபேலா பையோடு இறங்கி. “தோழர், நல்லா இருக்கீங்களா?“ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். உடன் அவரது இசைக்குழுவின் மற்ற இருவர். “இன்னக்கி உங்க நிகழ்ச்சியா தோழர்?“ என்றேன் மகிழ்ச்சியாக. “ஆமா தோழர்,“ என்றார். ஐந்து மணி முதல் ஏழு மணி வரை அவருடைய நிகழ்ச்சி. பின்னர் ஏதோ பட்டிமன்றம். நான் “தோழர், நீங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, வந்துர்றேன். எனக்காக குற்றால மலையிலே பாடணும்,“ என்று நேயர் விருப்பத்தை வைத்தேன். “அதுக்கென்ன தோழா், பாடிருவோம்,“ என்றார் உற்சாகமாக.

வேகமாக பாரதி புத்தகாலயத்தில் ஒ்ரு ரவுண்ட் அடித்துவிட்டு, கச்சேரி மேடைக்கு அருகில் வந்தேன். அதற்குள் திருவுடையான் இரண்டு, மூன்று பாடல் பாடி முடித்து விட்டார். ஓரத்தில் நான் நிற்பதைப் பார்த்ததும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் , தூத்துக்குடி துறைமுகம் கட்டுவதற்கு சோவியத் யூனியன் செய்த உதவி, இந்திய சோவியத் உறவு பற்றி சின்னதாக ஒரு அறிமுகத்தைச் சொல்லி, உயிரா மானமா படத்தில் கண்ணதாசன் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் சோவியத் யூனியனுக்கு காலத்தால் அழியாத நன்றியைத் தெரிவித்த பாடல் இது.. என்று அறிவித்தார்.

பின், என்னைப் பார்த்து, ”எழுத்தாளர் தோழர் சுப்பாராவ் இந்த பாடல விரும்பிக் கேட்டாங்க.. தோழர், இப்படி முன்னாடி வந்து உக்காருங்க,“ என்று மைக்கில் அழைத்தார். மதுரையே என் பக்கமாகப் பார்க்க, கூச்சத்தோடு போய் முதல்வரிசையில் உட்கார்ந்தேன். தமுஎச மேடைகளில் பாடிப் பிரபலமடைந்ததோடு, அப்போது அவர் விருமாண்டி திரைப்படத்தில் வேறு ஒரு பாடல் பாடியிருந்ததால் மக்கள் கூட்டம் நன்றாகவே இருந்தது.

தபேலாவிற்கு பாண்ட்ஸ் பவுடர் போட்டு, செல்லமாகத் தடவிக் கொடுத்துவிட்டு, திருவுடையான் ஆரம்பித்தார். (அவர் தானே தபேலா வாசித்தபடி பாடும் அபூர்வமான கலைஞர் !) பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடியது என்றாலும், சீர்காழியும், சி.எஸ்.ஜெயராமனும் கலந்த ஒரு அதிசயக் குரல் கொண்ட திருவுடையானின் கம்பீரக் குரலில் பாடல் ஆரம்பித்தது.
குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு – தென்றல்
வந்தாடும் அருவியிலே நீராடு

காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தில் திருமகளே
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு

நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு
நாங்கள் உமக்களித்த நன்றியே..
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே….

குதித்து வந்த தமிழிலே என்ற இடத்தில் தமிழிலே என்ற சொல்லுக்கும், தென்றல் வந்தாடும் என்ற இடத்தில் தென்றல், வந்தாடும் என்ற இரு சொற்களுக்கும் அன்று திருவுடையான் ஒரிஜினல் பாடலில் இல்லாத சங்கதிகளை எல்லாம் போட்டுப் பாடியது எனக்காகத் தான் என்று நானே நினைத்துக் கொண்டேன். சோவியத்தின் பெருமகளே நீயாடு என்று அவர் பெருமை பொங்கும் ஒரு ஓங்கிய குரலில் பாடிய போது பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களில், ஓல்கா நதியின் கரையில், கிரெம்ளினின் முன்னால், செஞ்சதுக்கத்தில், ரஷ்யாவின் பரந்த ஸ்தெப்பி புல்வெளிகளில், நானே ஏதோ ஒரு ரஷ்யப் பெண்ணோடு டூயட் பாடும் ஒரு உணர்வு. பாடல் முடிந்ததும் எழுந்து நின்று வணங்கினேன். அவரும் பாண்ட்ஸ் பவுடர் கையோடு என்னை வணங்கினார். உண்மையில், என்னைப் பொருத்தவரை, அந்தப் பாட்டோடு, அன்றைய கச்சேரி முடிந்து விட்டது. மரியாதை கருதி கச்சேரி முடியும் வரை இருந்து நன்றி சொல்லி விட்டு வந்தேன்.

சினிமா பாட்டில் இந்திய சோவியத் நட்புறவு, நெய்வேலி அனல்மின் நிலையத்தை உருவாக்க உதவியதற்கு நன்றி சொல்வது என்றெல்லாம் கவிஞர் கண்ணதாசன் கிடைத்த ஒரு சின்ன சந்தர்ப்பத்தை வைத்து புகுந்து விளையாடி இருப்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. திருவுடையானுக்கு கிட்டத்தட்ட என் வயது தான். ஒரு சாலை விபத்தில் அவர் அகால மரணமடைந்தது முற்போக்கு இசையுலகிற்கு மெய்யாகவே பெரிய இழப்பு. இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு திருவுடையான் நினைவு தான். திருவுடையானை எப்போது நினைத்தாலும் எனக்கு இந்தப் பாடல் நினைவு தான்.
ச.சுப்பாராவ் ( தொடரும்)

இப்போதே பகிருங்கள்

3 Comments

  1. 👏👏👏 நன்று. சீர்காழி அய்யா குரலில் பாடல் அருமையாக இருக்கும்.

  2. திருவுடையான்! நமது காலத்தின் அதிசயங்களில் ஒருவர்! நெசவுத் தொழிலாளி. காலம் இப்படி எல்லாம் கொடுமை செய்யும் என்று யார்தான் நினைக்க முடியும்? யானையை பிடித்து… ஒரு பானைக்குள்… என்று அவர் தொடங்கும்போது சீர்காழி வந்து முன்னால் நிற்பார்! அவர் விபத்தில் இறந்த பின்னர் அவரது பாடல்களை யூடியூபில் கேட்கலாம் அதாவது அந்த அபூர்வப்பிறவியை பார்க்கலாம் என்று தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான், அடக்க முடியாமல் அழத் தொடங்கினேன். மனைவி வந்து என்னாங்க …? என்று அதிர்ச்சி அடைந்து கேட்க, சொற்கள் வராமல் டேபில் திரையை காட்டினேன், திருவுடையான் விரல்கள் தபேலாவில் விளையாட பெருங்குரல் எடுத்து பாடிக்கொண்டு இருந்தார். அதன் பின் உங்களை தொலைபேசியில் அழைத்து முகமன் கூட சொல்ல முடியாமல் அழத் தொடங்கினேன். ஆற்றாமையையும் துயரத்தின் சுமையையும் இறக்கி வைக்கவும் கூட மனது தக்க நண்பர்களை மட்டுமே தேடுகிறது. நீங்கள் என்னை ஆசுவாசப் படுத்தினீர்கள். அதன் பின்னர் மனைவியிடம் அவர் பற்றி கூறினேன். இந்த கொடுமை போதாது என்று வெகு விரைவிலேயே அவர் குடும்பத்தில் இன்னொருவரும் விபத்தில் இறந்த துயரத்தையும் என்ன சொல்ல?!! நம்முடன் வெகுகாலம் இருந்திருக்க வேண்டிய மகத்தான கலைஞன். வேட்டி கட்டிக்கொண்டு ஓர் எளிய கிராமத்து மனிதனாக அவர் இளையராஜா முன் நிற்க, சரி, பாடு பார்ப்போம் என்று இளையராஜா சொல்ல, இவர் தொடங்கி பாட, இத்தனை கட்டையில் பாடும் ஒரு பாடகன் நம் காலத்தில் இல்லை என்று அவர் வியப்புற்றதாக அறிகிறேன். வீழாமல் என்றென்றும்
    காற்றில் மிதக்கும் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *