
இசையை இசையாசிரியர்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்பதல்ல. யார் யாரோ கற்றுத் தருகிறார்கள். பிடில் பாலு, ராமஸ்வாமி ஐயங்கார், துரைராஜ் மாஸ்டர், மனோகரன் மாஸ்டர், மாடசாமி மாஸ்டர் என்று எனக்கு நேரடியாகக் கற்றுத் தந்த ஆசிரியர்களோடு, இதை எல்லாம் கற்றுக் கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்காத சில பாடல்களை நான் மனப்பாடமாகப் பாடுமளவிற்குக் கற்றுக் கொடுத்த வேறொரு மாஸ்டரும் உண்டு. நீங்கள் நினைப்பது போல் அவர் மியூசிக் மாஸ்டர் அல்ல. ஜிம் மாஸ்டர்!
சிறுவயதில் எம்ஜிஎஸ் மாஸ்டரிடம் துவங்கிய ஜிம் பழக்கம் கரோனா காலம் வரை நீடித்தது. ஆனால் இப்போது மாஸ்டர்கள் என் மகள் – மாப்பிள்ளை வயதினர்களாக இருந்தார்கள். அப்படியான மாஸ்டர்களில் ஒருவர்தான் மகா. பொல்லாதவன் மகா என்று எழுதிய எருமை மாடு போன்ற முரட்டு பைக்கில் வரும் டிபிக்கல் ஜிம் மாஸ்டா். சீனியர் சிட்டிசன்களின் வழக்கத்திற்கு ஏற்ப, ஜிம் திறந்ததும், போகும் முதல் ஆள் நான் தான். சமயங்களில் நான் போய் மாஸ்டருக்கு போன் செய்து வரச் சொல்லி திறப்பதும் உண்டு.
ஜிம் திறந்ததும் சுப்ரபாதம் போல் சீமராஜாவின் மச்சக் கன்னி கொஞ்சம் கேட்டுப் பாரு என்னப்பத்தி பாடல் போட்டு விட்டுத்தான் மாஸ்டர் லைட், பேன் எல்லாவற்றையும் போடுவார். அதைத் தொடர்ந்து இதே மாதிரி வேறு சில பாடல்கள். மாஸ்டர் அப்போது ஏதோ காதல் வலையில் சிக்கியிருப்பார் போலும். மச்சக் கன்னி மட்டும் பல முறை ரிபீட் ஆகும். ஆரம்பத்தில் என் வயது காரணமாக இது போன்ற பாடல்களின் மேல் எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்த போதும், இவையெல்லாம் கேட்கக் கேட்கப் பிடித்துப் போய்விட்டது. மேற்கத்திய இசையில் 7/8 என்று சொல்லப்படும் திஸ்ர ஜாதி திருபுடை தாளத்தில் பாட்டு அமைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்

அந்த சமயத்தில், சென்னையிலிருந்து மகளும், மாப்பிள்ளையும் காலையில் வருவதாக இருந்த ஒரு காலை வேளையில், அவர்கள் வருவதற்கு முன் குளித்து ரெடியாகி விட வேண்டும் என்று குளிக்கப் போனேன். குழாயில் ஒரே சீராக விழும் தண்ணீரின் ஓசை தான் எனக்கு சுருதி. அந்த சுருதியில் நான்
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு
பாரேன் என்னப் பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்கப்
போறேன் கண்ணப் பொத்தி
இஞ்சு இஞ்சா உன்ன
பாத்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கி னாலும்
சோடி நீ தானே
போற போக்குல போட்டு தாக்குற
துண்டு துண்டா உடஞ்சேன்
தின் தாக்கு தீம் தரிகிட
தின் தாக்கு தீம் தரிகிட
என்று பாடிக் கொண்டே குளிக்கும்போது, மகளும், மாப்பிள்ளையும் வந்துவிட்டார்கள்.
மாப்பிள்ளை, “என்ன மாமா, ராஜபார்ட் நடிகர் மாதிரி மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு ன்னு பாடிட்டு இருந்த ஆளு, இப்படி திடீர்னு யூத்தா மாறிட்டீங்க” என்றார். மகள் “ பாரேன், போறேன் ன்னு வர்ற எடத்துல எல்லாம் மஹாராஜபுரம் சந்தானம் மாதிரி எக்ஸ்ட்ரா சங்கதி போடற” என்றாள். எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. “ஜிம்முல சின்ன பசங்க கூட சேந்துண்டு, எப்பப் பாத்தாலும் கன்னாபின்னா பாட்டு தான். இருட்டு கட அல்வாடி, உன் இடுப்புல தான் இருக்குடி.. பஜ்னு பா பா பஜ்னு பா பா..ஹர ஹர மஹா தேவகீ… அப்படீன்னு ஒரு லூசுப் பாட்டு வேற…“ என்று மிஞ்சி இருந்த மானத்தை காயத்ரி காற்றில் பறக்க விட்டாள் ! கரோனாவோடு என் ஜிம் வாழ்வு முடிவிற்கு வந்தது. அதோடு, புதிய பாடல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் முடிந்து போனது !
அந்த பொல்லாதவன் மகா மாஸ்டரை தேர்தலன்று வாக்களிக்க வரிசையில் நிற்கும் போது திரும்பவும் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அன்று நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது, திடீரென்று மகா வந்து “சார் நல்லா இருக்கீங்களா?“ என்றார். நடிகர் கட்சியின் பிஸ்கட் கலர் பேண்ட், வெள்ளைச் சட்டை. பூத் முகவர்களுக்கு காப்பி வாங்கிக் கொண்டு செல்கிறாராம். மாஸ்டா் கண் ஜாடை காட்ட, ஒரு சிஷ்யக் குஞ்சு பேப்பர் கப்பில் காப்பி ஊற்றி என்னிடம் பணிவாக நீட்டியது. “வேண்டாம், வேண்டாம்” என்று ஒரு மரியாதைக்கு மறுத்துக் கொண்டே, காப்பியை வாங்கிக் கொண்டேன்.
எங்கள் பகுதியில், ஓட்டுப் போடும் வரிசையில் நின்று ஒரு அரசியல்வாதியிடம் காப்பி வாங்கிச் சாப்பிட்ட ஒரே தமிழன் என்ற சாதனையைச் செய்தபடி, “அப்பறம் மாஸ்டர், இப்பவும் ஜிம்ல மச்சக்கன்னி பாட்டுதானா?“ என்றேன். “இல்லங்க சார்.. இப்ப இப்ப “@@##%$$** ^^^&&& @@@ %!&^*## ” என்று விடிவி கணேஷ் குரலில் ஒரு பாட்டைப் பாடிக் காட்டினார் மாஸ்டா். அது தமிழ் பாட்டாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் போல் தெரியவில்லை. ஏதோ சலாமிய மொழி போல இருந்தது. இப்போது தமிழ் படப் பாட்டுகள் இப்படித் தான் வருகின்றனவா? எனக்கு மச்சக் கன்னியே பரவாயில்லை என்று தோன்றியது.
– ச.சுப்பாராவ் (தொடரும்)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/
4)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-4/
5)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-5/
6)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-6/
7)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-7/
8)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-8/
9)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-part-9/
10)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham/
11)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive/
12)https://maduraiseithi.in/s-subbaraos-series-ninaive-sangeetham-2
13)https://maduraiseithi.in/ssubbarao-written-by-ninaive-sangeetham-13/




அப்பப்ப புதியனவும் புகவேண்டும் தானே…… அப்போதான் பழைமையின் மகத்துவம் மட்டுப்படும். நினைவே சங்கீதம் நன்று. தொடருங்க ஜி…..
மனைவி காயத்ரி complaint செய்த காட்சியில் அப்புசாமி மீதான சீதாவின் ரசகுண்டு, அரை பிளேடு அருணாசலம் ஆகியோரின் கெட்ட சகவாசம் குறித்த
மனைவி காயத்ரி complaint செய்த காட்சியில் அப்புசாமி மீதான சீதாவின் ரசகுண்டு, அரை பிளேடு அருணாசலம் ஆகியோரின் கெட்ட சகவாசம் குறித்த charge sheet தான் நினைவுக்கு வந்தது! ( மச்ச கன்னி பாட்டு எது என்று தேடிக் கொண்டு இருக்கிறேன், மனைவியும் மகனும் தூங்க போய்ட்டாங்க)